‘மிருதங்க சக்கரவர்த்தி’ - அகந்தைக்கும் வித்தைக்குமான போட்டி!

By செய்திப்பிரிவு

சிவாஜி -கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த பல படங்களில், முக்கியமான திரைப்படம், ‘மிருதங்க சக்கரவர்த்தி’. மிருதங்கவித்வான் பற்றிய கதை என்பதைப்படத்தின் தலைப்பே தெரிவித்திருக்கும். கலைஞானம் தனது பைரவி பிலிம்ஸ் சார்பில், கதை எழுதி தயாரித்த இந்தப் படத்துக்கு பனசை மணி திரைக்கதையும் ஏ.எல்.நாராயணன் வசனமும் எழுதியிருந்தனர். கே.சங்கர் இயக்கியிருந்த இந்தப் படத்தின் கதைக்களம் குமரி மாவட்டம், சுசீந்திரம்.

சிவாஜி, கே.ஆர்.விஜயாவுடன், நம்பியார், பிரபு, சுலக்‌ஷனா, தேங்காய் சீனிவாசன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சிவாஜிக்கு மிருதங்கம் வாசிப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்தது, பிரபல மிருதங்க வித்வான், உமையாள்புரம் சிவராமன். படத்தில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவரும் இவர்தான். பிரபுவுக்கு மிருதங்கம் வாசித்தவர் மதுரை டி.சீனிவாசன்.

வாழைத்தாரைக் கட்டி தொங்கவிட்டு, இனிய மிருதங்க இசை மூலம் பழுக்க வைத்த பரம்பரையைச் சேர்ந்தவர் சுப்பையா (சிவாஜி). அவர் மிருதங்கம் வாசித்தால் ரசிகர்கள் அதிகம் கூடுகிறார்கள். இது, பிரபல பாடகர் நீலகண்ட பாகவதருக்குப் (எம்.என்.நம்பியார்), பிடிக்கவில்லை. அவர் செய்யும் சூழ்ச்சியால் இனி மிருதங்கத்தைத் தொட மாட்டேன் என்று சபதம் செய்கிறார் சுப்பையா. அவர் மகன் கண்ணனையும் (பிரபு) மிருதங்கம் வாசிக்கக் கூடாது என்று படிப்புக்காக வெளியூர் அனுப்பி வைக்கிறார். வருமானம் இன்றி எல்லாவற்றையும் இழக்கிறார் சுப்பையா. கண்ணன் படிக்கச் சென்றாலும் மிருதங்கம்தான் அவன் படிப்பாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தாணுமாலய சுவாமி கோவிலில் வாழைத்தாரை கட்டித் தொங்கவிட்டு மிருதங்க இசையால் அதைப் பழுக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறார் கண்ணன். அங்கு வரும் சுப்பையா, அவரை அடிக்கிறார். அப்பாவைப் பிரியும் கண்ணன், கிளைமாக்ஸில் அவருக்கு எதிராகவே மிருதங்கப் போட்டியில் களமிறங்குகிறார். அதில் ஜெயிப்பது வழக்கம் போல சுப்பையாதான்.

பிறகு தனது மிருதங்கத்தை மகன் கண்ணன் கையில் கொடுத்து, ‘புகழோடு வாழ்க’ என்பார் சுப்பையா. ‘என் அகந்தைக்கும் சுப்பையாவின் வித்தைக்குமான போட்டியில் அவர் வித்தைதான் ஜெயிச்சது. அவர்ட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு அருகதை இல்லை’ என்று நம்பியார் சொல்வதுடன் படம் முடியும்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், அங்குள்ள குளம், ஆறு, அதைச் சுற்றியுள்ள தெருக்களில் படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. வாலியும் புலமைப்பித்தனும் பாடல்கள் எழுதியிருந்தனர். ‘நாதமயமான இறைவா’, ‘அடி வண்ணக்கிளியே இங்கு’, ‘கோபாலா கோவிந்தா முகுந்தா’, ‘இது கேட்கத் திகட்டாத கானம்’, ‘சுகமான ராகங்களே’, சீர்காழி சிவசிதம்பரம் குரலில் வரும் ‘அபிநய சுந்தரி’ என அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. ‘இது கேட்கத் திகட்டாத கானம்’ பாடலை நம்பியாருக்காகப் பாடியிருப்பார் பாலமுரளி கிருஷ்ணா.

சிவாஜி, கே.ஆர்.விஜயா, பிரபு நடிப்பில் அத்தனைப் போட்டி. வாழைத்தாரைக் கட்டி, பிரபு மிருதங்கம் வாசிப்பது, தான் பாடகி என்று கே.ஆர்.விஜயா சொல்லும் பிளாஷ்பேக் உட்படபல ‘கூஸ் பம்ப்ஸ்’ காட்சிகள் படத்தில். 1983-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தப் படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE