விஜயகாந்த் நடிக்க இருந்த ‘கன்னிப்பருவத்திலே’

By செய்திப்பிரிவு

பி.வி.பாலகுரு இயக்கத்தில், கே.பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசி உட்பட பலர் நடித்த படம் ‘கன்னிப் பருவத்திலே’. வைரவனின் கதைக்கு கே.பாக்யராஜ் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். தனது அம்மன் கிரியேஷன்ஸ் மூலம், 16 வயதினிலேயே, கிழக்கே போகும் ரயில் படங்களைத் தயாரித்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு இதையும் தயாரித்திருந்தார். தன்னை பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்ட பாலகுருவுக்காக இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார் கே.பாக்யராஜ். அதே வருடம்தான் அவர் ஹீரோவாக அறிமுகமான ‘புதிய வார்ப்புகள்’ படமும் ரிலீஸ் ஆகி இருந்தது.

ஊரில் யாருக்கும் அடங்காத காளையை அடக்கும் சுப்பையாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாவுக்கும் காதல் வருகிறது. ஆனால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறது அவள் குடும்பம். வெளியூருக்குப் படிக்கச் சென்ற சுப்பையாவின் நண்பன் சீனு ஊருக்குத் திரும்புகிறான். அவன் உதவியுடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், இருவரும் உடலால் ஒன்று சேர முடியாத நிலை. ஒரு முறை மாடு முட்டியதில் சுப்பையாவுக்கு ஏற்பட்ட காயம் அதற்குக் காரணமாகிவிடுகிறது.

இதற்கிடையில் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வரும் சீனு, அவள் மீது ஆசை கொள்கிறான். அவனுக்கு சுப்பையாவின் பலவீனம் தெரியவர, அதிகமாக டார்ச்சர் செய்கிறான் அவளை. இந்தப் பிரச்சினையை கண்ணம்மா எப்படி எதிர்கொள்கிறாள் என்பது கதை.

இந்தப் படத்தில் மாடு பிடிக்கும் வீரராக விஜயகாந்த் நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த பாக்யராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் விஜயகாந்தை அறிமுகப்படுத்தினார். ஆனால், இயக்குநர் பாலகுரு, ராஜேஷை ஏற்கனவே பேசி வைத்திருந்ததால் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் நடித்திருந்தால் அவருடைய அறிமுகப்படமாக இது இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் கே.பாக்யராஜ் .

ராஜேஷ், ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் இதுதான். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் கே.பாக்யராஜுக்கு கங்கை அமரன் டப்பிங் பேசியிருப்பார். இந்தப் படத்தில் அப்போது உதவி இயக்குநராக இருந்த நேதாஜி பேசியதாகச் சொல்கிறார்கள்.

சங்கர் கணேஷ் இசையில் புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன், மதுபாரதி பாடல்கள் எழுதியிருந்தனர். மலேசியா வாசுதேவன் குரலில், வரும் ‘நடையை மாத்து’, ‘பட்டுவண்ண ரோசாவாம்’, எஸ்.ஜானகியின் குரலில் ‘ஆவாரம் பூமேனி’, ‘அடி அம்மாடி சின்ன பொண்ணு’ பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் காலகட்டத்தில் ரேடியோவில் ‘பட்டுவண்ண ரோசாவாம்’, ‘அடி அம்மாடி சின்ன பொண்ணு’ பாடல்கள் அதிகம் ஒலிபரப்பான பாடல்களாக இருந்தன.

பல்வேறு பகுதிகளில் 100 நாட்களைக் கடந்த இந்தப் படம் சில திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடின. பாக்யராஜின் வில்லத்தனம், ராஜேஷின் எளிமையான நடிப்பு, வடிவுக்கரசியின் தவிப்பு அப்போது எல்லோராலும் பாராட்டப்பட்டது. 1979-ம் ஆண்டு, இதே நாளில்தான் இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE