“மிகப் பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய ‘என் உயிர் தோழன்’ பாபு” - பாரதிராஜா இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: “மிகப் பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவர்” என ‘என் உயிர் தோழன்’ பாபு மறைவுக்கு இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திரைத் துறையில் மிகப் பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவர், படப்பிடிப்பில் நடந்த விபத்தில்30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த "என் உயிர் தோழன் பாபு" வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

1990-ம் ஆண்டு வெளியான ‘என் உயிர் தோழன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. இந்தப்படத்தின் மூலம் ‘என் உயிர் தோழன்’ பாபு என பரவலாக அறியப்பட்டவர். கிராமத்துக்கதைகளுக்கு ஏற்ற நாயகன் என்ற புகழப்பட்ட இவர், 1991-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பெரும்புள்ளி’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு பூமாலை தான்’ பாடல் அப்போது எங்கெங்கும் ஒலித்தது. ‘பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ படத்துக்குப் பிறகு முன்னணி நாயகனாக பாபு வலம் வரத்தயாரானார்.

அப்போது ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் ஒப்பந்தமாக நடித்துக்கொண்டிருந்தார். அப்போது சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் உயரமான இடத்திலிருந்து நாயகன் பாபு குதிக்க வேண்டும். ‘டூப் போட்டுக்கொள்ளலாம்’ என இயக்குநர் சொல்லியும் கேளாமல் நானே குதிக்கிறேன், தத்ரூபமாக இருக்கும் என கூறிவிட்டு பாபு உண்மையாகவே குதித்தார். அப்போது நிலைதடுமாறி விழுந்து அவருடைய முதுகுப்பகுதியில் பலத்த அடிப்பட்டது.

முதுகுத் தண்டுவட அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட போதும், அந்தச் சம்பவம் பாபுவை அதன் பிறகு நிமிர்ந்து உட்காரக் கூட முடியாதபடி செய்துவிட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை அவரது தயார் கவனித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாபுவின் உடல்நிலை மோசமானதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை திரையில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்று நலம் விசாரித்து தேம்பியழுத வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE