புதிய வடிவில் அரங்கேறும் அசோகமித்திரன் கதைகள்

By செய்திப்பிரிவு

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும் தமிழ் நவீன இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையுமான அசோகமித்திரனின் 6 சிறுகதைகளை வைத்து ‘அசோகமித்திரன் கதைகளோடு ஒரு மாலைப்பொழுது’ என்னும் தலைப்பில் புதுவிதமானகதை கூறல் நிகழ்ச்சியைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் சங்கீத நாடக அகாடமிவிருது பெற்ற நாடக இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் வரும் 24-ம் தேதி மாலை 4.30-க்கு இந்நிகழ்ச்சி அரங்கேற்றப்பட உள்ளது.

அசோகமித்திரனின் ‘நூறு கோப்பைத் தட்டுகள்’, ‘அப்பாவின் சிநேகிதர்’,‘புலிக் கலைஞன்’, ‘போட்டியாளர்கள்’, ‘பார்வை’ ‘நாடக தினம்’ ஆகிய 6 சிறுகதைகளை வைத்து இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள கதைகளைப் பற்றிப் பேசிய ப்ரஸன்னா ராமஸ்வாமி, “அசோகமித்திரனின் செகந்திராபாத் அனுபவங்களில் இருந்து கிளைத்த இந்து-முஸ்லிம் இடையிலான இயல்பான, மதம் கடந்த நட்புறவின் தன்மையைச் சொல்லும் கதை, ஜெமினி ஸ்டூடியோவில் அவர் கடந்து வந்த அசாதாரணமான மனிதர்கள், அவர்களுக்கு நேரும் அனுபவங்கள், அன்றாட வாழ்க்கையின் பாத்திரங்களும் கதைகளும்...எல்லாக் கதைகளையும் இணைக்கும் மையச்சரடு ஒன்றுதான்; எல்லா நிலைகளிலும் கண்ணியமாக வாழும், போராட்டத்தைக் கைவிடாத மனிதர்கள். ”என்கிறார்.

இந்தக் கதைகூறல் நிகழ்ச்சியில் தர்மா ராமன், கிருத்திகா சுரஜித், சண்முகசுந்தரம், சூர்யா ராமன். ஆதித்யா, யூசஃப், சர்வேஷ், விஷ்ணுபாலா, சேது, சிநேஹா, விஷ்ணு, காஞ்சனா ராஜேந்தர், சுப்ரமணியம் ஸ்ரீநிவாசன் ஆகிய கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். சென்னை ஆர்ட் தியேட்டர் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது.

‘இதற்கான அனுமதிச் சீட்டுகளை புக்மைஷோ (https://shorturl.at/dqW46) இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். கட்டணம், மாணவர்களுக்கு ரூ.100 (மாணவர் அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும்), பிறருக்கு ரூ.200.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE