சர்வாதிகாரி: தலைப்பை மாற்றச் சொன்ன எம்.ஜி.ஆர்!

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பெயர் டி.ஆர்.சுந்தரம். சென்னை போன்ற பெருநகரங்களை விட்டுவிட்டு, சேலத்தில் தொடங்கப்பட்ட அவரது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பல பெருமைகளைக் கொண்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலப் படங்களும் இங்கு தயாரிக்கப்பட்டன. டி.ஆர்.சுந்தரம், ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில், பல ஸ்டைலிஷான படங்களைத் தமிழில் தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார். அதில் ஒன்று ‘சர்வாதிகாரி’!

‘தி கேலன்ட் பிளேட்’ (The Gallant Blade) என்ற அமெரிக்க சாகசப் படத்தைத் தழுவி தமிழில் உருவானப் படம் இது. எம்.ஜி.ஆர், அஞ்சலிதேவி, எம்.என்.நம்பியார், வி.நாகையா, புளிமூட்டை ராமசாமி, எஸ்.சரோஜா, எஸ்.ஆர்.ஜானகி, கருணாநிதி, வி.கே.ராமசாமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின்25வது திரைப்படமான இதன் டைட்டில்கார்டில் அவர் பெயரை எம்.ஜி.ராம்சந்தர் என்று போட்டிருப்பார்கள். எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கோ.தா.சண்முகசுந்தரம் திரைக்கதை அமைத்திருந்தார். வசனம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி.

மணிபுரி நாட்டின் அரசன் புளிமூட்டை ராமசாமி. அவரை வீழ்த்தும் எண்ணத்தில் இருக்கும் அமைச்சர் மகாவர்மனுக்கு (எம்.என்.நம்பியார்), அதிக வரி விதித்து மக்களைக் கஷ்டப்படுத்துவது வேலை. போர் முடிந்த பின்னும் இன்னொரு நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று அரசனிடம் அனுமதி பெறுகிறார். போருக்கு எதிராக இருக்கும் தளபதி உக்ரசேனரையும் (நாகையா) அவர் மெய்க்காப்பாளன் பிரதாபனையும் (எம்.ஜி.ஆர்) வழிக்கு கொண்டு வர நினைக்கிறார் மகாவர்மன். பிரதாபனை மயக்க, மீனாதேவி (அஞ்சலி தேவி) என்ற பெண்ணை அனுப்புகிறார். ஆனால், அவர் பிரதாபனைக் காதலிக்கத் தொடங்குகிறார். பிறகு பல திருப்பங்களுக்குப் பிறகு பிரதாபனுடனான ஒரு மோதலில் மகாவர்மனின் திட்டம் அம்பலமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

இந்தப் படத்துக்கு முதலில் வசனம் எழுத இருந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. மாடர்ன் தியேட்டர்ஸின் முந்தைய படமான எம்.ஜி.ஆரின் ‘மந்திரிகுமாரி’ சூப்பர் ஹிட்டானதால் இந்தப்படத்துக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் கருணாநிதி அரசியல் வேலைக்காகச் சென்றுவிட்டதால் அவர்தான், ஆசைத்தம்பியை வசனம் எழுத சிபாரிசு செய்திருக்கிறார்.

‘வீரவாள்’ என்ற பெயருடன் தொடங்கப்பட்டது இந்தத் திரைப்படம். எம்.ஜி.ஆர்தான் ‘சர்வாதிகாரி’ என்ற தலைப்பைப் பரிந்துரைத்தார். டி.ஆர்.சுந்தரம் ஏற்றுக்கொண்டு அதையே தலைப்பாக வைத்ததாகச் சொல்வார்கள். இந்தப் படத்தின் ஆக்ரோஷமான கத்திச் சண்டைகள் அப்போது அதிகம் பேசப்பட்டன. ஆங்கிலப் படத்தில் என்ன உடைகள் அணிந்திருந்தார்களோ, அதைப்போல இந்தப் படத்திலும் பயன்படுத்தினார்கள். டி.பி.முத்துலட்சுமி, நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகையாக உயர்ந்தது இந்தப் படத்துக்குப் பிறகுதான்.

எஸ். தட்சிணாமூர்த்தி இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்களை மருதகாசியும் கா.மு.ஷெரீபும் எழுதினார்கள். எம்.ஜி.ஆரின் பேர் சொல்லும் திரைப்படங்களில் ஒன்றான ‘சர்வாதிகாரி’, இதே நாளில்தான், 1951-ம் ஆண்டு வெளியானது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE