ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம்: பனையூரில் போலீசார் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக பனையூரில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் தலைமையில் போலீசார் ஆய்வு நடத்தினர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘மறக்குமா நெஞ்சம்’ என்றதலைப்பில் சென்னையில் ஆக.12ம்தேதி இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். அன்று மழை பெய்ததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. புதிய தேதி செப்.10 என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை பனையூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இந்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

இதற்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதையும் தாண்டி நிகழ்ச்சிநடந்த இடத்துக்குச் சென்ற ரசிகர்கள்,பாதியிலேயே திரும்பிச் சென்றுள்ளனர். ரூ.2000 முதல் ரூ.15 ஆயிரம் வரை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. கூட்டத்துக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் பெண்கள், முதியவர்கள் திணறினர். இதைக் கண்டித்து, இதுவரை இப்படிஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்தனர்.

வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சென்னை திரும்பிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் வாகனமும் நெரிசலில் சிக்கியது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி (ACTC) நிறுவனம் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. “கூட்ட நெரிசலால் கலந்துகொள்ள முடியாதவர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான், 'இசைநிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு நிகழ்ச்சியில்கலந்துகொள்ளமுடியாதவர்கள் arr4chennai@btos.in என்ற மெயிலுக்கு உங்கள் டிக்கெட்டின்நகலை பகிருங்கள். எங்கள் குழு விரைவில் உங்களுக்குப் பதில் அளிக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள விளக்கத்தில், “என் எண்ணம் மழை வரவில்லை என்பதிலேயே இருந்தது. அதனால் சந்தோஷமாகப் பாடிக்கொண்டிருந்தேன். வெளியே என்ன நடக்கிறது என்பதைக்கவனிக்கவில்லை. அதற்கு கிடைத்த எதிர்வினை, எங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இப்போதுநான் வேதனையில் இருக்கிறேன். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் இருந்ததால்பாதுகாப்பு முதன்மையான பிரச்சினையாக இருந்தது. நான் இந்த சம்பவத்துக்கு யாரையும் கைகாட்ட விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில், சட்டம் - ஒழுங்கு இணை ஆணையர் மூர்த்தி, பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யன் ஆகியோர் பனையூரில் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் நேற்று ஆய்வு நடத்தி, அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பி வைத்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE