புதிய பறவை: பார்த்த ஞாபகம் இல்லையோ...

By செய்திப்பிரிவு

சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் ‘புதிய பறவை’.

‘சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ’ (Chase a Crooked Shadow) என்ற பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க மொழியில் உருவான படம், ‘சேஷ் அங்கா’. இதன் மூலத்தைமட்டும் வைத்துக்கொண்டு திரைக்கதையை முற்றிலும் மாற்றி ரீமேக்செய்யப்பட்டதுதான், ‘புதிய பறவை’.தாதா மிராசி இயக்கிய இந்தப்படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாகவசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும், லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும். சிவாஜி கணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது.

தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார். அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜாதேவியும் வி.கே.ராமசாமியும். அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது பங்களாவில் தங்கச்சொல்வார் சிவாஜி. ரயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார், சரோஜாதேவி. காரணம் கேட்கும் போது தனது மனைவி ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி.அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும்.

இப்போது, சவுகார் ஜானகி திடீரென வந்து நின்று,‘முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதுநீங்கள் எப்படி திருமணம்செய்யலாம்’ என்று கேட்கிறார் அதிர்ச்சி அடையும் சிவாஜி, அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு எதிராகவே இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாஸும் இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி. பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானேகொன்றதாக, உண்மையைச் சொல்வார் சிவாஜி. உடனே சரோஜாதேவி, ‘வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா? அவரை கைது செய்யுங்கள்’ என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக்.சரோஜாதேவி, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா என அனைவரும் போலீஸ்என்பது பிறகு தெரிய வரும். ‘இது கொலைதான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள் நடத்திய நாடகம் இது’ என்பார்கள்.

ஈஸ்ட்மன் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே புதுமை செய்திருந்தனர். ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு மட்டும் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ‘சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து...’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘ஆஹாமெல்ல நடமெல்ல நட’, ‘உன்னை ஒன்றுகேட்பேன்’ உட்பட பாடல்கள் அனைத்தும்வரவேற்பைப் பெற்றன. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், சுசீலா பாடியிருந்தனர்.

இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப் பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக்கொண்ட இயக்குநர் மிராசி, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் அவர் நடிப்பைப் பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார்.

இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை, ‘கோப்... பால்’ என்று இழுத்து உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது.

1964-ம் ஆண்டு இதே நாளில் வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE