தேவதாஸ்: ஒரே கதை... 20 திரைப்படங்கள்! 

By செய்திப்பிரிவு

காதல் காவியங்களின் வரிசையில் பல திரைப்படங்களை அடுக்கி வைத்தாலும் முதலிடத்தில் வைத்துக் கொண்டாடப்படும் படம், ‘தேவதாஸ்’. காதல் தோல்விக்காகத் தாடியை அடையாளம் காட்டிய படமும் இதுதான். இந்தப் படத்தின் காதலர்களான தேவதாஸ் - பார்வதி பற்றி நம் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டால் கண்ணீர் பொங்கக் கதைச் சொல்லலாம். ஐம்பதுகளில் வெளியாகி, இன்று வரை காதலின் அடையாளமாக இருக்கும் ‘தேவதாஸி’ன் கதை சோகத்தின் உச்சம்.

ஜமீன் வீட்டு மகன் தேவதாஸுக்கும் ஏழை பார்வதிக்கும் காதல். இவர்கள் திருமணம் பற்றி பார்வதியின் பாட்டி, ஜமீன்தாரிடம் பேச, மறுத்துவிடுகிறார் அவர். இதனால் பார்வதியை, வயதான ஜமீன்தாருக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார் அவர் தந்தை. தேவதாஸ், தாடி வளர்த்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்று கதைச் செல்லும்.

வேதாந்தம் ராகவையா இயக்கிய இதில் நாகேஸ்வரராவ் (நாக சைதன்யாவின் தாத்தா, நாகர்ஜுனாவின் அப்பா), சாவித்திரி இணைந்து நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படம் 2 மொழிகளிலும் மெகா ஹிட்டானது.

முதலில் இந்தப் படத்தை, வினோதயா பிக்சர்ஸ் நிறுவனம் நாகேஸ்வர ராவ், சவுகார் ஜானகி நடிப்பில் தொடங்கியது. ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில், இவ்வளவு சோகம் கொண்ட இந்தப் படம் வெற்றிபெறாது என்று விட்டுவிட்டு சாந்தி என்ற படத்தைத் தயாரித்தார்கள். அது தோல்வி அடைந்தது.

இந்தப் படத்தின் பார்ட்னர்களில் ஒருவரான டி.எல்.நாராயணா, நிறுத்தப்பட்ட ‘தேவதாஸ்’ படத்தை மீண்டும் தொடங்கினார். இப்போது சவுகாருக்கு பதில் சாவித்திரி நாயகியானார். எஸ்.வி.ரங்காராவ், ஆஞ்சநேயலு உட்பட பலர் நடித்திருந்தனர். சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருந்தார்.

கண்டசாலா குரலில், ‘உலகே மாயம்’, ‘உறவும் இல்லை’, ‘துணிந்த பின் மனமே’, ‘ஓ தேவதாஸ்’, ‘கே.ராணி குரலில் ‘எல்லாம் மாயை’ உட்பட அனைத்துப் பாடல்களும் வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்தப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கண்ணீர் கடலில் மூழ்கியிருந்தார்கள் என்பது உண்மையே. காதல் சோகக் காட்சிகளை நிஜமென்றே நம்பி கவலை கொண்டு அழுதார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு நாகேஸ்வரராவ், சாவித்திரியின் புகழ் ஜிவ்வென்று ஏறியது.

சரத் சந்திர சட்டோபாத்யாயின் வங்கமொழி நாவலை மையமாகக் கொண்டு உருவானது, இந்தப் படம். 1929-ல் மவுன படமாக இந்தக் கதையை உருவாக்கினார் கொல்கத்தாவைச் சேர்ந்த நரேஷ் சந்திர மிஸ்ரா என்பவர். 1935-ம் ஆண்டு பிரமதேஷ் சந்திரா என்பவர் பேசும்படமாக வங்க மொழியில் உருவாக்கினார். அப்போதிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், உருது உட்பட பல மொழிகளில் உருவாகி இருக்கிறது இந்தக் கதை. 2010-ல் பாகிஸ்தான் வெர்சனும் 2013-ல் பங்களாதேஷ் வெர்ஷனாகவும் உருவாகி ரசிக்க வைத்திருக்கிறார் இந்த ‘தேவதாஸ்’. அதாவது இந்த ஒரே கதை 20 முறை திரைப்படமாகி இருக்கிறது என்கிறார்கள்.

1953-ம் ஆண்டு, ஜுன் மாதம் தெலுங்கில் வெளியான இந்தப் படம் மூன்று மாதங்களுக்குப் பிறகு செப். 11-ம் தேதி, அதாவது இதே நாளில்தான் தமிழில் வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE