“இதயம் கணிந்த நன்றிகள்” - ஜெயிலர் வெற்றி குறித்து நெல்சன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி சொல்லி இயக்குநர் நெல்சன், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதுவரை இந்தப் படம் பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

“ஜெயிலர் படத்தின் வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்துக்கு ஆதரவு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத்துக்கு நன்றி. விநியோகஸ்தகர்கள் மற்றும் காட்சிப்படுத்தியவர்களுக்கு நன்றி. ரம்யா கிருஷ்ணன் மேடம், சுனில் வர்மா சார், நாகேந்திர பாபு சார், கிஷோர் குமார் சார், விநாயகன் சேட்டா, வசந்த் ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி.

இந்த படத்தில் தனது பாத்திரத்தை பெருந்தன்மையுடன் நடித்த தமன்னாவுக்கு நன்றி. மோகன் லால் சார், சிவ ராஜ்குமார் சார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பாத்திரம் ஜெயிலரை உயரத்துக்கு கொண்டு சென்றது.

ராக்ஸ்டார் அனிருத், உங்களது இசை தான் ஜெயிலர் படத்துக்கு உயிர் சேர்த்தது. உங்களுக்கு எனது நன்றி. கலாநிதி மாறன் சார், காவ்யா மாறன், சன் பிக்சர்ஸ் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகி இருக்காது. உங்களது நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி. கண்ணன், செம்பியன் மற்றும் சன் பிக்சர்ஸ் குழுமத்துக்கு எனது நன்றி.

இந்த வாய்ப்பை கொடுத்த ரஜினிகாந்த் சாருக்கு நன்றி. உங்களது உத்வேகம், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, ஆர்வம், எளிமை, பணிவு என அத்தனை பண்புகளும் எனக்கும், படக்குழுவினருக்கும் படிப்பினை தந்தது. நீங்கள்தான் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம். ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லாமல் இந்த வெற்றி சத்தியமாகி இருக்காது. உங்களுக்கு எனது நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE