நடிகர் சங்க கட்டிடம் | விரைவில் நல்ல செய்தி வரும் - நடிகர் விஷால் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: "நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது, அதன்பின்னர் கரோனா வந்துவிட்டது. கிட்டத்தட்ட 3 வருடத்துக்குப் பின்னர், கட்டிடத்தில் உள்ள இரும்புக் கம்பிகள் எல்லாம் துருபிடித்துவிட்டது. எனவே, இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றும், வங்கிக்கடன் பெற்று, சங்க கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்" என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நடிகர் விஷால் கூறியது: "நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இரண்டாவது முறையாக எங்களைத் தேர்வு செய்ததற்கு காரணம், எங்கள் மீதான நம்பிக்கைதான். நடிகர் சங்க கட்டடத்தைத் தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்.

எனவே, அந்த கோரிக்கையை நிறைவேற்றும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஈடுபடுகிறோம். விரைவில் நல்ல செய்தி வரும். நிச்சயமாக அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்க கட்டடத்தில் நடைபெறும். இரண்டாவது முறை சங்கத்தின் பொறுப்பாளர்களாக வரவேண்டும் என்று இங்குள்ள யாரும் விரும்பவில்லை. இருந்தாலும், நடிகர் சங்கத்துக்கான இடத்தை மீட்டதே ஒரு பெரிய விஷயமாக கருதுகிறோம். அதேநேரம், தேர்தல் நடத்துவதற்கு முன்னால், இன்னும் ஒரு 5 மாத காலம் கொடுத்திருந்தால், நாங்கள் கட்டிடத்தை கட்டி முடித்திருப்போம்.

தேர்தல் நடந்தது, அதன்பின்னர் கரோனா வந்துவிட்டது. கிட்டத்தட்ட 3 வருடத்துக்குப் பின்னர், கட்டிடத்தில் உள்ள இரும்புக் கம்பிகள் எல்லாம் துருபிடித்துவிட்டது. எனவே, இந்தக் கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்றும், வங்கிக்கடன் பெற்று, சங்க கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே திரும்பப் பார்க்கும் வகையிலான கட்டிடமாக வரப்போவதால்தான், நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு இத்தனை இடையூறுகள் வருகிறது. இதையெல்லாம் தாண்டி, இம்முறை கட்டிடடம் நிச்சயம் கட்டப்படும்" என்றார்.

அப்போது மருத்துவ வசதி கிடைக்காமல் நடிகர்கள் இறப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மருத்துவ முகாம்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், கார்த்தி, நாசர், பூச்சிமுருகன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடத்தியுள்ளனர். நடிகர் சங்கத்தில் நிதி இல்லை என்றாலும்கூட, அவர்களது சொந்தப் பணத்தில், நடிகர்களுக்கான மருத்துவமுகாம்களை நடத்தியுள்ளனர்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நிதி இல்லாத காரணத்தால்தான், நடிகர்களுக்கு மருத்துவம் சார்ந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கே, ஒவ்வொருவரிடமும், நிதி உதவி பெற்றுத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். வங்கியில் இருக்கின்ற நிதியைப் பொறுத்து, தனிப்பட்ட முறையில் நடிகர்களிடம் சங்கம் மூலம் பணத்தைப் பெற்றுத்தான், மருத்துவமுகாம்கள் நடத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE