கன்னித்தாய்: ‘என்றும் பதினாறு வயது பதினாறு...’

By செய்திப்பிரிவு

எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம், ‘கன்னித்தாய்’. அவருடன், ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, நம்பியார், அசோகன், நாகேஷ் உட்பட பலர் நடித்திருப்பார்கள்.

இந்தப் படத்துக்கு முன் நடிகை சரோஜாதேவியின் அம்மாவுக்கும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவருக்கும் பிரச்சினை. ஒரு கட்டத்தில், என் படங்களில் சரோஜாதேவி நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் தேவர். இதனால் எம்.ஜி.ஆருக்குச் சரியான நாயகியைத் தேடி வந்தார். அப்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடியை புதிதாகப் பார்த்துவிட்டு ரசித்த அவர், ‘கன்னித்தாய்’ படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வைத்தார் ஜெயலலிதாவை.

கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. பாடல்களைப் பஞ்சு அருணாச்சலம் எழுதியிருந்தார். ‘என்றும் பதினாறு வயது பதினாறு’, ‘மானா பொறந்தா காட்டுக்கு ராணி’, ‘கேளம்மா சின்ன பொண்ணு’, ‘அம்மாடி தூக்கமா?’ உட்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. நாகேஷ், மனோரமா ஆடிப்பாடும் ‘வாழ விடு வழிய விடு’ பாடலை தாராபுரம் சுந்தரராஜனுடன் இணைந்து மனோரமாவே பெண்குரலைப் பாடியிருந்தார்.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் நடித்திருக்கிறார், எம்.ஜி.ஆர். இதில் பல படங்கள் மெகா ஹிட் ஆகியிருக்கின்றன. அதில் ‘காதல் வாகனம்’, ‘தேர்த்திருவிழா’ திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதே போல ‘கன்னித்தாய்’ சுமாரான வெற்றி பெற்ற படம் என்றாலும் லாபம் சம்பாதித்துக் கொடுத்த படம் என்பார்கள். 1965-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது ‘கன்னித்தாய்’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE