‘ஜவான்’ இந்திய உணர்வை சொல்லும் படம்! - இயக்குநர் அட்லி

By செ. ஏக்நாத்ராஜ்

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜவான்’ இன்று வெளியாகிறது. அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என்கிறார்கள். ஏற்கெனவே டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு. இயக்குநர் அட்லியிடம் படம் பற்றி பேசினோம்.

எப்படி இந்த வாய்ப்பு கிடைச்சது?

இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்னு கனவுல கூட நினைச்சதில்லை. இந்திய அளவுல ஷாருக்கான் ஒரு டாப் ஸ்டார். அவர் என்னை படம் பண்ணக் கூப்பிட்டது, ஷூட்டிங்கை முடிச்சது, ரிலீஸ் ஆகறதுவரை எல்லாமே ஆச்சரியமா இருக்கு. நடிகர் விஜய் அண்ணன் கூட படம் பண்ணும்போது எனக்கு ரொம்ப சவுகரியமா இருக்கும். அந்த ‘கம்போர்ட்’ ஷாருக்கான்கிட்ட கிடைக்குமான்னு ஆரம்பத்துல தயக்கமா இருந்தது. அப்புறம் ரொம்ப இயல்பா மாறிட்டோம். எந்த குறையுமில்லாம ரொம்ப நல்லாவே அவர் பார்த்துக்கிட்டார். இந்த நிமிஷம்வரை அது தொடருது.

இது, அப்பா- மகன் கதையா? அண்ணன்- தம்பி கதையா?

இது நமக்கான கதையா, நம் எல்லோருக்குமான படமா இருக்கும். ஒரு பதிலா இப்படியிருந்தாலும் அப்பா- மகனா? அண்ணன் - தம்பியா?ன்னு வர்ற கேள்விகள் எல்லாமே ஒரு புத்தகத்தின் அட்டை மாதிரிதான். படத்துக்குள்ள, வேற விஷயங்கள் இருக்கு. நமக்கான பிரச்சினைகளைப் பேசற விஷயங்களாகவும் அது இருக்கும். ஒரு வார்த்தையில சொல்லணும்னா, ‘இந்திய உணர்வை’ சொல்லும் படம் இது.

வட - தென்னிந்திய சினிமா பாகுபாடு பற்றி நிறைய பேச்சுகள் இருக்கு. உங்களுக்கு அப்படி ஏதும் அனுபவம்?

இல்லை. இங்க படம் பண்ணும்போது என்ன கஷ்டங்கள் இருந்ததோ அதுதான் அங்கயும் இருந்தது. மற்றபடி பாகுபாடா, ஏற்றத் தாழ்வுகளா பார்க்கிற விஷயங்கள் இல்லை. வேலை விஷயத்துல மட்டும்தான் நான் கவனம் செலுத்துவேன். அதனால எனக்கு வேற ஏதும் தெரியல. நல்ல வரவேற்புதான் கிடைச்சுது.

விஜய்சேதுபதி முரட்டு வில்லனா தெரியறாரே?

விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவர். சிறந்த நடிகர். தனக்கான கேரக்டருக்கு புது தன்மையை கொடுக்கக் கூடியவர். இந்தி சினிமாவுக்கு அவரைக் கொண்டு வந்து ஒரு புதுவிதமான வில்லனா இதுல காண்பிச்சிருக்கோம். இதுவரை இப்படியொரு வில்லனை நானே பார்த்ததில்லை. புதுசா பண்ணியிருக்கார். நல்ல ‘ட்ரீட்’டா இருக்கும். அதே போலதான் நயன்தாராவும். நான் வெற்றிபெற காரணமா இருந்த எல்லாருமே திரும்பவும் இதுல என்னோட பணியாற்றி இருக்காங்க. படத்துல வில்லன் கேரக்டருக்கு இரண்டாம் பாதியிலதான் அதிக வேலை இருக்கும். அதுக்கு முன்னால இன்னொரு வெயிட்டான கேரக்டருக்கு நல்ல நடிகை தேவைப்பட்டாங்க. நயன்தாரா பொருத்தமா இருந்தாங்க. அருமையான நடிப்பைக் கொடுத்திருக்காங்க.

பாலிவுட் அனுபவம் எப்படியிருக்கு?

வீட்டை விட்டு வெளியே போனா, ஒரு சவுகரியமான இடத்துக்குத்தான் நான் போவேன். எடுத்த உடனேயே அப்படியொரு வசதி கிடைச்சிடாதுதான். ஆனாலும் பாலிவுட் எனக்கு அப்படித்தான் இருந்தது. பி.சி.ஸ்ரீராம், மணிரத்னம், சந்தோஷ் சிவன்னு நிறைய பேர் ஏற்கனெவே அங்க போய் சாதிச்சிருக்காங்க. இடையில அங்க போறது கொஞ்சம் குறைஞ்சிருச்சு. இப்ப மீண்டும் தொடங்கியிருக்குன்னு நினைக்கிறேன்.

அடுத்து விஜய் படத்தை இயக்க போறதா சொல்றாங்களே?

மூனு வருஷம், இந்தப் படத்துலயே இருந்துட்டதால, ஒரு நாலு மாசம் பிரேக் எடுக்கப் போறேன். புதுசா பிறந்திருக்கிற என் மகனுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டியிருக்கு. அதுக்கு அப்புறம்தான், நான் என்ன பண்ணப் போறேன்னு எனக்கே தெரியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE