ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘தெய்வமகன்’!

By செய்திப்பிரிவு

சிவாஜியின் நடிப்பைப் போற்றப் பல திரைப்படங்கள் வரிசை கட்டி நின்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘தெய்வமகன்’. உல்கா (Ulka) என்ற பெங்காலி நாவலைத் தழுவி, இந்தி உட்பட சில மொழிகளில் 4 திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

ஐந்தாவதாக எடுக்கப்பட்ட படம், ‘தெய்வமகன்’. கதையின் சாராம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, முந்தைய படங்களை விட திரைக்கதையை முற்றிலும் மாற்றி இயக்கி இருந்தார், ஏ.சி.திருலோகச்சந்தர். மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன்! ‘பலே பாண்டியா’ படத்தில் ஏற்கெனவே 3 கதாபாத்திரங்களில் அசத்திய சிவாஜி, இந்தப் படத்தில் வேறு மாதிரி நடிப்பில் வியக்க வைத்திருப்பார்.

ஜெயலலிதா, மேஜர் சுந்தர்ராஜன், என்.என்.நம்பியார், பண்டரிபாய் , விஜய ஸ்ரீ, ஜி.நாகையா, நாகேஷ் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை சாந்தி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. முதலில் ‘உயிரோவியம்’ என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்துக்கு, பிறகுதான் ‘தெய்வமகன்’ என்று தலைப்பு வைத்தனர். கலரில் உருவாக்க இருந்த இந்தப் படத்தை கருப்பு வெள்ளையில் எடுக்கச் சொன்னவர் சிவாஜி.

தன்னைப் போலவே விகாரமான முகம் கொண்ட மகனை கொன்றுவிடச் சொல்கிறார் தொழிலதிபர் சங்கர் (சிவாஜி), தனது மருத்துவ நண்பர் ராஜுவிடம் (மேஜர் சுந்தர்ராஜன்). ஆத்திரமடையும் மேஜர், அதோடு அவர் நட்பையும் முறித்து விடுவார் . அடுத்ததாக சங்கருக்கு இன்னொரு குழந்தை பிறக்கிறது. அது தன்போன்ற முகமில்லாத ஸ்டைலான விஜய் (சிவாஜி). கொன்றுவிட சொன்ன மகன் கண்ணனாக (சிவாஜி) ஆசிரமத்தில் வளர்வார். ஒரு கட்டத்தில் கண்னனுக்குத் தன் பெற்றோர் பற்றி தெரிந்து தேடி செல்ல, என்ன நடக்கிறது என்று கதைச் சொல்லும்.

சங்கர், கண்ணன், விஜய் என 3 கேரக்டருக்கும் வெவ்வேறு மேனரிசம் காட்டி அசத்தியிருக்கும் சிவாஜியின் நடிப்பை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அதற்கேற்ப ஆரூர்தாஸின் வசனமும் மிரட்டலாக இருக்கும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார். ஒவ்வொரு பாடலும் இப்போது கேட்டாலும் சிலிர்க்க வைக்கும். டி.எம்.எஸ் குரலில், ‘தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன்’, ’காதல் மலர் கூட்டம் ஒன்று’, ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா’, ‘அன்புள்ள நண்பரே’, பி.சுசீலாவுடன் டிஎம்எஸ் இணைந்து பாடிய ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்’ என பாடல்கள் மெகா ஹிட்.

இந்தப் படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார் சிவாஜி. இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இது. 1969-ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்த மறக்க முடியாத படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE