கடத்தப்பட்ட முன்னாள் காதலியின் குழந்தையை கண்டுபிடித்து, மீட்கப் போராடும் காதலனின் பயணமே 'சத்யா'.
பெற்றோர் இல்லாமல் வளரும் சத்யா (சிபிராஜ்) சிட்னியில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். 4 வருடங்களுக்குப் பிறகு முன்னாள் காதலி ஸ்வேதாவிடமிருந்து (ரம்யா நம்பீசன்) அழைப்பு வருகிறது. முன்னாள் காதலிக்கு உதவி செய்வதற்காக இந்தியா திரும்புகிறார். குழந்தை கடத்தப்பட்டது குறித்து முன்னாள் காதலனிடம் சொல்லும் ஸ்வேதா, எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு உன்னைவிட்டால் வேறு யாருமில்லை என்று கையறுநிலையில் கதறுகிறார். எவ்வளவு விசாரித்தாலும் குழந்தை கடத்தல் சம்பவம் நடந்ததாக ஸ்வேதாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ப்ரீஸ்கூல் நிர்வாகமும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் விசாரணையை வேறு மாதிரி சத்யா துரிதப்படுத்த, ஸ்வேதாவுக்கு மனநிலை சரியில்லை, ஸ்வேதாவுக்கு அப்படி ஒரு குழந்தையே இல்லை என சாட்சிகள் சொல்கின்றன. ரியா என் குழந்தை என பிறப்புச் சான்றிதழ்களுடன் வந்து ஒருவர் திகில் கிளப்புகிறார். உண்மையில் நடந்தது என்ன, ரியா என்கிற ஒரு குழந்தை இருந்ததா, ஸ்வேதாவுக்கு என்ன ஆயிற்று, இதில் எது உண்மை, எது பொய் என புதிரான கேள்விகளுக்கு புரியும்படியாக பதில் சொல்கிறது சத்யா.
தெலுங்கில் ஹிட்டடித்த 'ஷணம்' படத்தின் ரீமேக்தான் 'சத்யா'. எது உண்மை என்பதை யூகிக்க முடியாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்வதும், கடைசியில் புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பதும்தான் படத்தின் அடிநாதம். அதை மிகச் சரியாக ரசிகர்களுக்கு கடத்தி இருக்கிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. தெலுங்குப் படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சியில் கல்லூரி காலத்தைக் காட்டியிருப்பார்கள். சிபிராஜ் - ரம்யா நம்பீசனுக்கு அதை ஐ.டி.யில் பணிபுரியும் இடமாக காட்டியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
சிபிராஜ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திலும், கோட்டிலும் தன்னை சரியாக பொருத்திக் கொள்கிறார். காதலி மீதான பிரியம், தனியாக விட்டுவிட்டுப் போன துயரம், குழந்தையைக் கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் என குறையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். தோற்றத்திலும் சிபிராஜ் கவனம் செலுத்தியிருப்பது சிறப்பு. விசாரணை வளையத்தில் சிக்கிய பிறகும் காவல்துறை அதிகாரியிடம் தைரியமாய் எதிர்கேள்வி கேட்கும் சிபிராஜின் துணிச்சல் ரசிக்க வைக்கிறது.
ரம்யா நம்பீசன் காதல் காட்சிகளில் கண்ணியமாகவும், குழந்தையைத் தொலைத்த துயரத்தில் அவள் நினைவாக கதறுவதும் மனதில் பதிகின்றன. தந்தைக்காக காதலனைப் பிரிவது, குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் நடையாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைவது, மனநலம் பாதிக்கப்பட்டவள் என்று சொன்னாலும் அதற்கு கவலைப்படாமல் குழந்தை குறித்தே யோசிப்பது என அம்மாவுக்குரிய தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
நகைச்சுவைக் கதாபாத்திரத்திலேயே பார்த்து பழக்கப்பட்ட சதீஷ் இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் கனம் உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார்.
செஃல்பி எடுப்பது, 'இப்படியே பண்ணா உடம்பு உடைஞ்சுடும்' என கான்ஸ்டபிளைக் கலாய்ப்பது, 'நீ உக்காந்தாக் கூட உசரமாதான் இருப்ப' என சிபியிடல் லந்து பண்ணுவது, 'தப்பு பண்ணா என்னை நானே மன்னிக்க மாட்டேன்' என நேர்மையைக் கடைபிடிப்பதுமாக ஆனந்த்ராஜ் அசத்துகிறார்.
'கார் சின்னது, காலை கொஞ்சம் மடக்கி வை', 'உனக்கு நடிப்பு வராதுன்னு ஊருக்கே தெரியும்' என நய்யாண்டிக்கு உத்தரவாதம் தருகிறார் யோகி பாபு. கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், நடந்தது என்ன என்பது குறித்து தன் பாணியில் சொல்லும் விதத்திலும் வரலட்சுமி வாழ்த்துகளை அள்ளிச் செல்கிறார். நிழல்கள் ரவி, சித்தார்த் ஷங்கர், ரவி வர்மா, ஆத்மா பேட்ரிக், பாலாஜி வேணுகோபால், வினோதினி ஆகியோர் சரியான தேர்வு.
நாயகனைச் சுற்றி மட்டுமே கதையை நகர்த்தாமல் துணை கதாபாத்திரங்கள் வழியாகவும் கதையை நகர்த்தும் உத்தி பிரமாதம். கொஞ்சம் பிசகினாலும் குழப்பம் தரும் திரைக்கதையில், எந்த விதத்திலும் தொய்வை ஏற்படுத்தாமல், சோர்வு தட்டாமல் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்திய விதத்தில் இயக்குநரின் மெனக்கெடல் தெரிகிறது.
''மனசு சொல்றதை கேட்கணுமா? புத்தி சொல்றதை கேட்கணுமா? மனசு சொல்றதை கேளு சார். அது என்னைக்கும் துரோகம் செய்யாது.'', ''உன்னை வேணும்னு சொல்ற தைரியம் இல்ல. வேண்டாம்னு சொல்லுற சக்தியும் இல்ல'' போன்ற கார்த்திக் கிருஷ்ணாவின் வசனங்களில் யதார்த்தம் தெறிக்கிறது.
அரண்மனை பழனியின் ஒளிப்பதிவும், சைமன் கே.கிங்கின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. யவ்வனா பாடல் ரிப்பீட் ரகம். பின்னணி இசை படத்துக்கு ஒத்திசைவாக உள்ளது. கவுதம் ரவிச்சந்திரனின் கதைக்களத்துக்கேற்ப சரியாக கத்தரி போட்டிருக்கிறார
மொத்தத்தில் 'சத்யா' விறுவிறுப்பான த்ரில்லர் சினிமாவாக மிளிர்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago