சென்னை: அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவும் ஜெயம் ரவியும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இதனை இயக்கியுள்ளார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் வரும் செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: பெண்களை தேடிக் கொல்லும் சைக்கோ கொலையாளி பிரம்மா. போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கும் அவர், மேலும் பல கொலைகளை தொடர்ந்து செய்வதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. குற்றவாளிகளை தப்பிக்க விட்டு அவர்களுக்கு தண்டனை தரும் முரட்டு போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவிக்கு அந்த சைக்கோ வில்லனை பிடிக்கும் பணி தரப்படுகிறது. ‘ராட்சஷன்’, ‘போர்த் தொழில்’ வரிசையில் ரத்தம் தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங் ட்ரெய்லரிலேயே மிரட்டுகிறது. ஹரி கே.வேதாந்த்தின் டார்க் ஒளிப்பதிவும், யுவனின் இசையும் இதயத் துடிப்பை எகிறச் செய்கின்றன. ட்ரெய்லரில் இருக்கும் விறுவிறுப்பு அப்படியே குறையாமல் முழு படத்திலும் இருந்தால் வெற்றி உறுதி. ‘இறைவன்’ ட்ரெய்லர் வீடியோ: