பரம்பொருள் Review: சில தடங்கல்களுக்கு மத்தியில் ‘விறுவிறுப்பு’ முயற்சி

By கலிலுல்லா

‘கர்மா இஸ் ஏ பூமராங்’ என்பது படத்தின் ஒன்லைன். நோயால் பாதிக்கப்பட்ட தன் தங்கையின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிக்கிறார் ஆதி (அமிதாஷ்). மறுபுறம் சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஊழல் காவல் அதிகாரி மைத்ரேயன் (சரத்குமார்). வீடு வீடாக சென்று திருடும் ஆதி ஒருநாள் மைத்ரேயன் வீட்டுக்குள் நுழைய வசமாக சிக்குக்கிறார். போலி வழக்குகளை போட்டு சிறையில் அடைத்துவிடுவதாக ஆரம்பத்தில் மிரட்டும் மைத்ரேயன், பின்னர் தன் சுயலாபத்துக்காக ஆஃபர் ஒன்றைத் தருகிறார்.

ஏற்கெனவே சிலைக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருக்கும் ஆதியிடம், அந்தத் தொடர்புகளை பயன்படுத்தி பழம்பெரும் சிலைகளை விற்று பெரிய அளவில் செட்டிலாகிவிடலாம் எனச் சொல்ல, அதற்கு ஆதியும் ஒப்புக்கொள்ள, இந்த க்ரைமில் இருவரும் கைகோக்கின்றனர். இறுதியில் சிலையை கடத்தி விற்கும் இவர்களின் திட்டம் கைகூடியதா? தன் தங்கையின் மருத்துவ செலவுக்கு ஆதி பணம் திரட்டினாரா? இதற்குள் நுழைந்த மற்ற திருப்பங்கள் என்னென்ன? - இதுதான் திரைக்கதை.

கடைசியாக ‘ஜெயிலர்’ படத்தில் சிலைக் கடத்தலை பார்த்தோம். தற்போது மீண்டுமொரு சிலைக் கடத்தல் கதை. ஆனால், இயக்குநர் சி.அரவிந்த்ராஜின் ‘பரம்பொருள்’ சுவாரஸ்யமான ஒன்லைன் களம்தான். தொடக்கத்தில் மைக்கதைக்குள் நுழைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் படம், சிலைக் கடத்தலுக்கான உலகை கட்டமைத்து, அதில் பார்வையாளர்களை நுழைய வைப்பதில் தேர்ச்சி பெறுகிறது.

தமிழ்நாட்டின் குக்கிராமத்திலிருந்து வெளிநாடுகள் வரையிலான சிலைக் கடத்தல் நெட்வொர்க் லிங்க், அதையொட்டி வரும் சில விவரிப்புகள், புத்தர் சிலைகள் காலப்போக்கில் எப்படி மருவி வந்தது, பண்டைய தமிழர் வரலாறை படம் தொட்டுச் செல்கிறது. அதுவரை சில காட்சிகள் எங்கேஜிங்காகவும், பல காட்சிகள் சோர்வாகவும் செல்லும் படத்தின் இடைவேளையில் வரும் காட்சி உயிர்கொடுக்கிறது.

இன்டர்வலுக்குப் பிறகு படம் சூடுபிடிக்க, கடத்தப்பட்ட சிலையை விற்கும் போராட்டம், ஒரிஜினல் சிலையை போல மற்றொரு சிலையை வடிவமைப்பது, மாட்டிக் கொள்ளாமல் இருக்க தேடும் வழிகள், அதில் வரும் பிரச்சினைகள் என முடிந்த வரை நம்மை இழுத்துச் சென்றாலும் நடுவில் தேவையற்ற பாடல், ஒட்டாத காதல், அதீத வசனங்கள் சோர்வு. படத்தில் வரும் திருப்பம் எதிர்பாராததுதான் என்றாலும் அது நெல்லிக்கனியின் நுனியைப்போல தொடக்கத்தில் ருசிக்க வைத்தாலும் மொத்தமாக நம்பும்படியாக இல்லாமல் செயற்கையாக நிற்கிறது.

அத்துடன் முக்கியமாக அதுவரை ஆதியும், மைத்ரேயனும் போலி சிலைக்காக சிக்குவார்களா என்ற எதிர்பார்ப்பிலிருந்த பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் கூட்டிய திரைக்கதை ஒருகட்டத்தில் பழிவாங்கும் கதையாக பாதை மாறும்போது முழுமைத் தன்மையில்லாத உணர்வு எழுகிறது. தொடக்கத்தில் வரும் காவல் துறையினரின் அதிகாரத்தை க்ளோரிஃபை செய்யும் காட்சிகள் கதைக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை என்பதுடன் சாமானியன் மீதான அத்துமீறல்கள் நார்மலைஸ் செய்வது தேவைதானா? ஆதியின் ‘புத்தியுல்ல மனிதெரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற ரிங்க்டோன் தேர்ந்த குறியீடு. பணத்தை விட அறத்தின் தேவையை உணர்த்தும் கதைக்களம் கவனிக்க வைக்கின்றன.

‘போர்தொழில்’ படத்துக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார். இம்முறை வழக்கமான ‘நேர்மை’யான காவல் அதிகாரியாக இல்லாமல் கறைபடிந்த மற்றும் காசுக்காக எதையும் செய்யும் இன்ஸ்பெக்டர். கம்பீரமாக எதற்கும் அஞ்சாமல் அடித்து ஆடும் தனது ‘ட்ரேட்மார்க்’ நடிப்பால் முத்திரை பதிக்கிறார் சரத்குமார். மொத்தப் படத்துக்கும் அச்சாணி.

அமிதாஷ் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் இன்னும் கூட மெனக்கெடல் வேண்டுமோ என தோன்ற வைக்கிறார். வருண்ராவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலகிருஷ்ணன் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் பாலாஜி சக்திவேலின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம். காஷ்மீரா பர்தேஷிக்கு பெரிய அளவில் வேலை கொடுக்கப்படவில்லை என்றாலும் காதலுக்கும், பாடலுக்கும் தேவையான அளவு பயன்படுத்தபட்டிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை தேவையான பங்களிப்பை செய்ய, கானா பாலா குரலில் வரும் பாடல் கவனிக்க வைக்கிறது. பாண்டிகுமாரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் ஈர்க்கின்றன. மேலும், அவரின் லென்ஸ் மொத்தப் படத்தின் குவாலிட்டியையும் கூட்ட உதவுகிறது. நாகூரான் ராமசந்திரன் இன்னும் கூட இயக்குநரிடம் பேசிய காட்சிகளை கச்சிதமாக்கியிருக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, விறுவிறுப்பான திரைக்கதைக்கு முயற்சிக்கும் ‘பரம்பொருள்’ சில இடங்களில் சுவாரஸ்யமாகவும், பல இடங்களில் தட்டையாகவும் கடக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE