முதல் பார்வை: மாயவன் - வரவேற்புக்குரிய புது முயற்சி!

By உதிரன்

இயற்கைக்கு மாறான சாகசத்தை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் முறியடிக்க முடிவெடுத்தால் அதுவே 'மாயவன்'.

அம்பத்தூர் நகர காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிகிறார் சந்தீப் கிஷன். ஒரு லோக்கல் ரவுடியைத் துரத்திப் பிடிக்கும்போது ஒரு வீட்டில் நடக்கும் கொடூரக் கொலையைப் பார்க்கிறார். ரவுடியை விட்டுவிட்டு கொலையாளியை விரட்டிப் பிடிக்கிறார். அந்த கொலையாளியால் சந்தீப் சாவின் விளிம்பு வரை செல்ல நேர்கிறது. மூன்று மாத ஓய்வுக்குப் பிறகு பணியில் மீண்டும் இணையும் சந்தீப் ஒரு நடிகையின் கொலையை விசாரிக்கச் செல்லும்போது, முந்தைய கொலையின் சாயல் இருப்பது கண்டு பதட்டமாகிறார். இதனால் மனரீதியாக பாதிக்கப்படும் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுகிறார். உண்மையில் கொலையாளியைப் பிடிக்கும்போது இன்ஸ்பெக்டர் சந்தீப் கிஷனுக்கு நடந்தது என்ன, அதே சாயல் இன்னொரு கொலையில் எப்படித் தொடர்ந்தது, தன் கடமையைச் செய்ய முடியாமல் சந்தீப் திணறுவது ஏன், அவரால் இறுதிவரை கொடுத்த வேலையைச் செய்ய முடிந்ததா, சாகசம் என்ன என்பதற்கு அறிவியல்பூர்வமான க்ரைம் த்ரில்லர் பாணியில் பதில் சொல்கிறது 'மாயவன்'.

தயாரிப்பாளர் சி.வி.குமார் 'மாயவன்' படத்தின் மூலம் இயக்குநராக புரமோஷன் ஆகியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைக்களத்தை வைத்துக்கொண்டு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டாமல் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை வைத்து முதல் படத்திலேயே பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சி.வி.குமாருக்கு வாழ்த்துகள்.

இன்ஸ்பெக்டருக்கான தோரணையில் கவனிக்க வைக்கிறார் சந்தீப் கிஷன். தனக்கு ஏற்பட்ட பாதிப்பால் செயல்பட முடியாமல் தவிப்பது, மனநல மருத்துவரிடம் கோபம் கொந்தளிக்கப் பேசுவது, 'கேஸை முடிச்சுக் காட்றேன் சார்' என நம்பிக்கை காட்டுவது, குற்றத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்க தீவிரம் காட்டுவது என இலக்கு நோக்கி சரியாகப் பயணிக்கிறார். அந்த ஒட்டுமீசை மட்டும் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது.

கதையின் முக்கியத்துவம் கருதி லாவண்யா திரிபாதிக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தை லாவண்யா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் விளம்பர மாடல் போல வந்து செல்கிறார். வசன உச்சரிப்பு பொருந்தாமல் துருத்தி நிற்கிறது.

டேனியல் பாலாஜி பாத்திரம் உணர்ந்து பொருத்தமாக நடித்திருக்கிறார். ஜாக்கி ஷெராஃப் சில காட்சிகளில் வந்தாலும் கம்பீரமான நடிப்பால் தன் இருப்பைப் பதிவு செய்கிறார். பாக்ஸர் தீனா, மைம் கோபி, ஜெயப்பிரகாஷ், அமரேந்திரன், பகவதி பெருமாள் ஆகியோர் தேர்ந்த பாத்திர வார்ப்புகள்.

கோபி அமர்நாத்தின் கேமரா விஞ்ஞான உலகின் விபரீதத்தையும், நியூரோ சயன்ஸின் ஆபத்தையும் தொழில்நுட்ப ரீதியில் ரசிகர்களுக்குக் கடத்துகிறது. ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சோபிக்கவில்லை. பின்னணி இசையில் தன்னை நிரூபித்திருக்கிறார். லியோ ஜான் பாலின் எடிட்டிங் நேர்த்தியாக உள்ளது.

இருபது வருடங்களுக்குப் பிறகு நடக்க வேண்டிய கதையை முன்கூட்டியே எடுத்திருக்கிறார் இயக்குநர் என்று நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால் அடுத்த சில நிமிடங்களில் அப்படி அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள் என்று தற்கால கதையைக் காட்டுகிறார் இயக்குநர் சி.வி.குமார். சாகசம் என்ன, எதிர்மறைக் கதாபாத்திரத்தின் குற்றப் பின்னணி என்பது குறித்த சஸ்பென்ஸை இரண்டாம் பாதி வரைக்கும் நீட்டிக்கச் செய்வதில் இயக்குநரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது. சாதாரண நபர்களின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், சுத்தத்துக்கான எண்ணம், திடீர் விவோத பழக்கங்கள் கடைபிடிப்பது குறித்து சொல்லப்படும் விளக்கம் நம்பும்படியாக உள்ளது.

நியூரோ சயின்ஸ் ஆராய்ச்சி குறித்த முயற்சிகளும், அதன் விளைவுகளும் பல கேள்விகளை எழுப்புகின்றன. ஜாக்கி ஷெராஃப் டேனியல் பாலாஜியை சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கும்போது அந்தப் பரிமாணம் எப்படி நிகழும் என்பதற்கு லாஜிக்கான பதில் இல்லை. இன்ஸ்பெக்டர் சந்தீப் கிஷனின் பாத்திரச் சித்தரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். லாவண்யா எப்படி திடீரென்று அந்த ஆய்வகத்துக்கு வந்தார் என்பது நம்பும்படியாக இல்லை.

இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'மாயவன்' படத்தை வித்தியாசமான, புதுமையான முயற்சிக்காக வரவேற்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்