‘சந்திரமுகி 2’ விழாவில் கல்லூரி மாணவர் மீது பவுன்சர்கள் தாக்குதல்: லாரன்ஸ் மன்னிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சந்திரமுகி 2’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பவுன்சர்கள் சிலர் கல்லூரி மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது ஆடியோ விழாவை காண வந்திருந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும், அங்கிருந்த விழா பவுன்சர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பவுன்சர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்குக் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ’சந்திரமுகி’ 2 ஆடியோ வெளியிட்டு விழாவின்போது, கல்லூரி மாணவர் ஒருவருடன் பவுசன்கர்கள் கைகலப்பில் ஈடுபட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. முதலில் இந்த சம்பவம் அரங்குக்கு வெளியே நடந்ததால், நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை.

மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புவதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நாம் செல்லும் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். காரணம் எதுவாக இருந்தாலும், ஒருவரை அடிப்பது என்பது கண்டிப்பாகத் தவறு. அதிலும் ஒரு மாணவருக்கு இது நடந்திருக்கக் கூடாது.

அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு லாரன்ஸ் அப்பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE