வடிவேலு நமக்கு கிடைத்திருப்பது பாக்கியம்: ’சந்திரமுகி 2’ விழாவில் பி.வாசு

By செய்திப்பிரிவு

சென்னை: பி.வாசு இயக்கியுள்ள ‘சந்திமுகி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் பி.வாசு பேசியதாவது:

ரஜினி சாரிடம் ‘சந்திரமுகி 2’ படத்தின் கதையை சொன்னேன். அவர் ராகவா லாரன்ஸை உடன்பிறந்த தம்பியாகவே பார்ப்பார். அனைத்தையும் கேட்ட பிறகு, ‘நான் வணங்கும் என் குருவை வேண்டிக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்’ என வாழ்த்தினார். பிறகு, வடிவேலுவிடம் சொன்னேன். நான் இதுவரை அவரிடம் முழு கதையையும் சொன்னதில்லை. ஏனெனில் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே உள்ள ஒரே தொடர்பு வடிவேலு மட்டும் தான். சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு வடிவேலுவும் ஒரு காரணம் என்பதால், அவர் சந்திரமுகி 2 படத்திலும் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

அவர் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்திலேயே நான் இதில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். ஏனெனில் அவரைப் போன்ற திறமையான கலைஞர்கள் எல்லாம் வீட்டில் சும்மா உட்கார வைக்க கூடாது. அவர் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருந்தால் மக்களுக்கு நோய் வந்து விடும். அவர் மக்களை சிரிக்க வைத்தவர். அவரைப் பார்த்து நாம் சிரித்து சிரித்து நோயில்லாமல் வாழ்கிறோம். அந்த வகையில் பார்த்தால் அவர் ஒரு டாக்டர். கொரோனா காலகட்டத்தின் போது எத்தனை குடும்பங்களை அவர் சிரிக்க வைத்திருப்பார். அவரைப் போன்ற நடிகர்களை நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE