சினிமாபுரம் - 9 | தேவர் மகன்: மறக்கப்பட வேண்டிய அழகிய(ல்) வன்முறைக் கனவு!

By அனிகாப்பா

தேநீர் பருகும் ஒவ்வொரு கணமும் ஓர் ஏகாந்தம். ஆவி பறக்க, பிறந்த குழந்தையின் வெம்மையுடன் இருக்கும் தேநீர் கோப்பையை ஒரு பச்சிளம் பிள்ளையாய் கையில் ஏந்தி அதன் நெற்றியில் முத்தமிட உதட்டுக்கு அருகில் கொண்டு செல்லும்போது, பிடிமானமேதுமின்றி காற்றில் நடமாடும் நீர் ஆவி மேலுதடு மயிருரசி, உள்நாசி தொட்டு நாவுக்கு முன்பே மூளைக்கு தேநீரின் சுவையை முரசறைய, தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத நாக்கு சுவை அறியும் கடமைக்காக முந்துகையில், சர்வ ஜாக்கிரதையாய் கோப்பையின் விளிம்பு பற்ற குவியும் உதடுகளுக்கு இடையில் வெம்மையான ஈரச்சுவையுடன் நெஞ்சுக்குள் இறங்கும் இளஞ்சுட்டுத் தேநீர் அதுவரை மனதுக்கு அப்பிகிடந்த எல்லாச் சூழ்நிலைகளையும் இலகுவாக்கி விடும். அதனால் எப்போதுமே தேநீர் பருகுவது ஏகாந்தம் நிறைந்த ஒரு கனவு.

தேநீர் பருகுவது சுகானுபவமென்றால் அதற்கு நிகரான மற்றொரு பேரனுபவம் திரைப்படங்கள் பார்ப்பது. அதுவும் ஒற்றைக் கூரைக்கு கீழமர்ந்து, நீண்ட வெண்திரையில் ஓடும் சித்திரங்களினுடே ஒரே கனவை ஓராயிரம் பேர் காணுவது. வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாத ஏகாந்த அனுபவம். சிறந்த தேநீரைப் போல பார்ப்பதற்கு முந்தைய அத்தனை மனநிலையையும் துடைத்தெடுத்து மாற்றும் வல்லமை சினிமாவுக்கும் சாத்தியம்.

ஆனாலும், எல்லாத் தேநீர் தருணங்களும் லயிக்கும்படி இருந்து விடுவதில்லை. எளிய மகளின் தாலியில் பெயருக்கெனத் தொங்கும் தங்கமென மெல்லிய மஞ்சள் ஒளி கசியும் மேஜையில் சீனாக்களிமண் கோப்பையில், தேநீருக்கு மேலே மிதக்கும் வெண்பஞ்சு நுரையில் இதயம் வரைந்து பரிமாறப்படும் தேநீரை ஆர்வம் மிகுதியால் எடுத்துக் குடிக்கையில், உள்நாக்கை உரசி விடுகிறது சூடு. இளஞ்சூடுதான் என்றாலும் உள்நாக்கு என்பதால் உயிரை உறிஞ்சுகிறது வலி. இப்போது ஏகாந்த கனவும் இம்சிக்கும் கனவாகித் துரத்துகிறது பகட்டாய் தேநீர் பருகும் தருணமெல்லாம். இந்த இம்சிக்கும் அனுபவத்துக்கு சினிமா மகானுபவமும் விதிவிலக்கில்லை. அப்படி உள்நாக்குச் சுட்ட இம்சையாய், மறக்கப்பட வேண்டிய அழகிய(ல்) வன்முறைக் கனவாய் துரத்திக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படைப்புகளுள் ஒன்றான ராஜ்கமல் தயாரிப்பில், பரதன் இயக்கித்தில் 1992-ல் வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படம்.

தேவர் மகன் (1992): மதுரைக்கு அருகில் இருக்கும் இயற்கைசூழ் சின்னஞ்சிறிய கிராமம் தூவலூர். அந்த அழகிய கிராமத்துக்குள் நீர்பூத்த நெருப்பாய் பரவிக்கிடக்கிறது, கிராமத்து பெரிய தலைக்கட்டுகளின் தீரா சொத்துப் பகை. கிராமத்து பெரியவர் பெரிய தேவர் (சிவாஜி கணேசன்). அடுத்தவர் தம்பி சின்னத்தேவர் (காக்கா ராதாகிருஷ்ணன்). தந்தை இறந்த பின் எழும் சொத்துப் பிரச்சினை பகைக்கு அடியுரமிட, அது சின்னத்தேவரின் இரண்டாவது திருமணத்தால் பச்சை பிடித்து வளர்ந்து விடுகிறது; விளைவு ஊர் இரண்டு கட்சியாய் பிளவுபட்டிருக்கிறது. இந்தப் பிரிவினை அடுத்த தலைமுறையிலும் வேர் பிடிக்கத் தொடங்கி கோயில் திருவிழா வரை நீளுகிறது. இப்பகை பற்றி அறிந்தும் அறியாமலும் வெளிநாட்டில் படித்துவிட்டு தனது தெலுங்கு தேசத்துக் காதலி பானுமதியுடன் (கவுதமி) சொந்த ஊர் திரும்புகிறார் பெரிய தேவரின் இரண்டாவது மகன் சக்திவேல் (கமலஹாசன்).

மகனின் வருகையை கூத்து, பாட்டு, வான வேடிக்கை என பெரிய தேவர் கொண்டாடி மகிழ, அன்றைய இரவுச் சாப்பாட்டில், வெளியூரில் உணவகம் திறக்கும் தன் எதிர்காலத் திட்டத்துக்கும், காதல் திருமணத்துக்கும் அனுமதி கேட்கிறார் சக்திவேல். அடுத்தநாள், காதலி பானுமதிக்கு தூவலூரின் அழகைக்காட்டி கதைகளை விவரித்துக் கொண்டு வரும் சக்திவேல், பானுமதியை தங்களது சொந்தக் கோயில் ஒன்றுக்கு அழைத்து வருகிறார். அங்கு அக்கோயில் இரண்டு பூட்டுகள் தொங்க பூட்டிக் கிடக்கின்றன. காதலி அந்தக் கோயிலை கட்டாயம் பார்க்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் சக்திவேல், தன் வீட்டில் வேலை செய்யும் இசக்கி (வடிவேல்)யை பூட்டை உடைக்கச் சொல்லி கோவிலுக்குள் நுழைகிறார்.

சின்னத் தீப்பொறிக்காக காத்திருந்த பகை, இரு குழுக்களுக்கு இடையேயான கலவரமாக கொழுந்துவிட்டு ஏரிந்து இசக்கியின் இடது கையை காவு வாங்கி, இன்னும் அதிகமாய் பலி கேட்டு நிற்கிறது. கோயில் பூட்டுடைத்த விவகாரம் பஞ்சாயத்துக்கு வர, அங்கு மூக்குடைக்கப்படும் சின்னத்தேவரின் மகன் மாயன் (நாசர்) விவகாரத்தை கோர்ட்டில் தீர்த்துக்கொள்வதாய் கூறிச் பஞ்சாயத்தை அவமரியாதை செய்துவிடுகிறார். தான் அவமதிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் விதமாய் தன் அணிக்குச் சொந்தமான இடத்தில் செல்லும் கிராமத்தை நகரத்தோடு இணைக்கும் பொதுபாதையில் வேலி போட்டு விடுகிறார் மாயன். இது தொடர் பகைத் தீயில் எண்ணெய் ஊற்ற, அதனைத் தொடர்ந்து வந்த கிராமத்து கலவரம் யாரைக் காவு வாங்கியது. பானுமதியின் காதலனாய் வந்த சக்திவேலை பஞ்சவர்ணத்தின் (ரேவதி) கணவனாக்கிய தூவலூர் எப்படி அடுத்த தேவர் மகனாய் மாற்றியது என்பது மீதிக்கதை.

தேவர் மகன் காட்டிய கிராமம்: இந்தப் படம் வெளியான காலக்கட்டம் மிகவும் கவனிக்கத்தக்கது. தொன்னூறுகளின் இறுதி வரை தமிழக கிராமங்கள் இனக்குழு எச்சத்தின் நீட்சியாய் தற்காப்புக் கலை பயில்வதை நடைமுறை வழக்கமாய் கொண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்த கிராமத்தின் எல்லா இளைஞர்களும் கிராமத்தில் இருக்கு பிரத்தியேக வாத்தியாரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டனர். இதற்கு ஊரும் சேரியும் விதிவிலக்கு இல்லை. பெரும்பாலும் சிலம்பமே கற்றுத்தரப்பட்டது.

‘தேவர் மகன்’ படத்திலும் அன்றைய கிராமத்தின் இந்த எச்சம் பதிவு செய்யப்பட்டிருக்கும். காதலிக்கு கிராமத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டு வரும் சக்திவேலிடம், தூவலூரின் பிரிதொரு தெரு இளந்தாரிகள் கம்புச் சண்டைக்கு வரச்சொல்லி வம்புக்கு இழுப்பார்கள். நவநாகரிக உடையில் இருக்கும் சக்திவேல் நாகரிகம் கருதி தட்டிக் கழிக்க, ஒரு கட்டத்தில் எள்ளல் தாங்காமல் இசக்கியின் வேட்டியை உருவிக்கட்டிக் கொண்டு கோதாவில் இறங்குவார். இந்த இடத்தில் இளையராஜா தனது தேர்ந்த இசையினால் சக்திவேலின் நாயக பிம்பத்தை தூக்கி நிறுத்தும் வேலையை பாடல் வழியாக சிறப்பாக செய்திருப்பார். கிராமங்கள் காப்பாற்றி வந்த இந்தத் தற்காப்பு பயிற்சியே அடுத்து வந்த தலைமுறையினரிடம் உடற்பயிற்சியாக நீண்டு அவர்களை அதிகாரத்தைக் கைப்பற்றும் அடுத்த முயற்சியாக காவல் பணிநோக்கி நகரச் செய்தது.

வேப்பெண்ணெய் பூசிய இளம்குமரிகள்: பழைய நினைவின் நீட்சிகளைத் தொட்டுத் தொடர்பவை கிராமங்கள். காலம் எத்தனை மாறினாலும் அவை தனது முந்தைய நினைவுகளை ஏதோ ஒருவகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படியானவைகளில் ஒன்றை எண்ணெய் பயன்பாடு. ஒரு காலத்தில் எல்லா மக்களுக்கும் விளக்கெரிக்க நெய் கிடைக்கவில்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை. அதுபோலவேதான் தேங்காய் எண்ணெயின் பயன்பாடும் எல்லா மக்களுக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியான நிலையில், அன்றைய கிராம மக்கள் தலைக்கு தேய்த்துக்கொள்ள விளக்கெண்ணெய்யையும் வேப்பெண்ணெய்யையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு எண்ணெய் வித்துக்களும் மிக எளிதாய் கிடைத்து காரணமாய் இருந்திருக்கலாம் அல்லது கிராமத்து குமரிகள் மருத்துவக் காரணங்களுக்காகவும் (பேன் பிரச்சினை) வேப்பெண்ணெய் பூசியிருக்கலாம். தேவர் மகன் படத்தில் பானுமதிக்கு சக்திவேல் காட்டிவரும் கிராமத்து காட்சிகளில் ஒன்று பஞ்சவர்ணம் வாசில் கோலம் போடுவதும், தலையில் வேப்பெண்ணெய் பூசி இருப்பதும் ஒன்று.

கிராமங்களும் குளங்களும்: மழை மறைவுப் பிரதேசமான தமிழகத்தில் முன்னோர்களின் நீர்மேலாண்மையின் தீர்க்க தரிசன கண்டுபிடிப்பு குளங்கள் அல்லது ஏரிகள். பரந்து விரிந்த நிலப்பரப்பில் பிறை நிலா வடிவில் கரை பிடித்து தண்ணீர் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்தி அதிஅற்புதம் இந்தக் குளங்கள். இந்த குளங்களின் இன்னுமொரு சிறப்பு ஒரு ஊரில் உள்ள குளம் பக்கத்து ஊர் குளத்தின் பங்காளியாய் நீண்டச் சங்கிலித் தொடராய் அமைந்திருப்பது. இத்தகைய குளங்களின் மேட்டு மூலையில் மறுகாலும், குளத்தின் மதகுக்கு அருகில் குத்துக்கல்லும் இருக்கும் இவை இரண்டும் குளத்தின் நீர் இருப்பைச் சுட்டிக்காட்டும் அளவுகோள்கள்.

குத்துக்கல் முழ்கி மறுகால் நிரம்பி வழிந்து விட்டால் அந்தப் பூ (அந்த போகம்) அருமையாக விளைந்து விடும் என்பது கணக்கு. இப்படி மறுகால் விழுந்து செல்லும் தண்ணீர் அடுத்த குளத்தில் சென்று நிரம்பும் என்பது மரபு வழி ஏற்பாடு. சில சமயங்களில் நான்கைந்து நாள்கள் தொடர்ந்து மழை பெய்து அளவுக்கு மறுகால் வழியாக விழும் தண்ணீரையும் மீறி குளத்தில் உபரி நீர் அதிகமாகும்போது, குளத்தின் கரையை காப்பாற்ற குளத்தின் ஒரு மூலையில் கரையை வெட்டி உடைத்து உபரி நீர் வெளியேற்றப்படும். இந்த மாதிரியான நேரங்களில் பக்கத்து ஊருக்கு எச்சரிக்கை விடப்படும். இப்படியான ஒரு முன்னேச்சரிக்கை ஏற்பாடு ‘தேவர் மகன்’ படத்தில் எதிர்மறை கருத்தாக ஊருக்குள் வெள்ளத்தை ஏற்படுத்த கரை வெடி வைத்து உடைக்கப்படுவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

தேவர் மகனின் காலமும் தமிழகமும்: 90-களின் தொடக்க காலங்கள் தென்மாவட்டங்களின் வரலாற்றுப் பக்கங்களில் மிகவும் முக்கியமான காலக்கட்டமாகும். 80-களின் இறுதியில் நடந்த நகர்மயமாதலால் புதிய வாய்ப்புகளைத் தேடி கிராமத்து அதிகார மையச் சமூகங்கள் நகரங்களுக்கு பெயர்ந்து விட, இலையுதிர் காலத்துக்கு பிறகு புதிதாய் துளிர்விடும் மரங்களைப் போல கிராமங்களில் அடுத்த அதிகார மையங்கள் துளிர் விடத்தொடங்கின. அதுவரை விளைநிலைங்களில் வேலை செய்து வந்தச் சமூகங்கள், நில உடமையாளர்களாக மாறின.

இந்த மாற்றம் நன்மை, தீமை இரண்டையும் ஒருசேரக் கொண்டு வந்து கோர விளையாட்டை ஆடியது. அதுவரை வயல்களில் நீர்பாய்ச்சிகளாகவும் பண்ணையம் செய்பவர்களாகவும் இருந்தவர்களிடம் நிலம் கைமாறுகிறது. இது புதிய அதிகார மையம் உருவாக வழிவகுத்தது. இப்படி உருவான அதிகார மையம் தாங்கள் அதுவரை கீழே இருந்ததை நச்சியமாக மறந்து விட்டு தனக்கு கீழே இருப்பவர்களுக்கான நீதிமான்களாக தங்களைக் காட்டிக் கொள்ளத்தொடங்கினர். இங்கிருந்தே தமிழக சமூகங்களின் ஆண்டப்பரம்பரை கதைகளுக்கு சிறகு முளைக்கத் தொடங்கின.

இந்த வகையில் திரைமொழி, காட்சியாக்கம், இசைமொழி, தேர்ந்த நடிகர்கள் என ஆகச்சிறந்த கலைநுக்கங்களுடன் போடப்பட்ட ஆகச் சிறந்த ராஜபாட்டையாக ‘தேவர் மகன்’ திரைப்படம் இருந்தாலும் அடுத்த தலைமுறையினரை ஏதோ ஒரு சிக்கலுக்குள் தள்ளிவிட்டதில் முன்னோடி படம் இது என்பதும் நிதர்சனமே.

சீன களிமண் கோப்பையில் அலங்காரத்துடன் பரிமாறப்பட்ட ஆடம்பரத் தேநீர் என்றாலும், அது உள்நாக்கைச் சுட்ட வடுவாய் நினைவில் தங்கிவிட்டது தமிழ் சினிமா சோகமே.

முந்தைய அத்தியாயம் > சினிமாபுரம் - 8 | சின்னக் கவுண்டர் - மொய் விருந்தின் மறுபக்கத்தைக் காட்டிய முக்கியப் படைப்பு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்