“இந்தியாவுக்கும் மனித குலத்துக்கும் பெருமையான தருணம்” - சந்திரயான் 3 வெற்றி குறித்து பிரகாஷ்ராஜ் 

By செய்திப்பிரிவு

சென்னை: “இந்தியாவுக்கும் மனித குலத்துக்கும் பெருமையான தருணம். நன்றி இஸ்ரோ” என சந்திரயான்–3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவிற்கும் மனித குலத்திற்கும் பெருமையான தருணம். நன்றி இஸ்ரோ. சந்திரயான் 3 திட்டத்தில் பங்களித்த அனைவருக்கும் நன்றி. இது நமது பிரபஞ்சத்தின் மர்மத்தை ஆராய்வதற்கும் கொண்டாடுவதற்கும் நமக்கு வழிகாட்டட்டும்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நபர் பனியன், லுங்கியில் ஒரு கோப்பையில் இருந்து தேநீர் ஊற்றுவது போல் ஒரு கேலிச் சித்திரம் இடம் பெற்றிருந்தது. கூடவே "நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்திரயான்-3 மிஷனை ட்ரோல் செய்யும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த இந்த கருத்தால் நெட்டிசன்கள் கொந்தளித்தனர். நெட்டிசன்களின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், "வெறுப்பு எப்போதும் வெறுப்பை மட்டுமே காணும். ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக் ஒன்றை சுட்டிக்காட்டியே நான் பதிவிட்டிருந்தேன்.

கேரள தேநீர் விற்பனையாளர்களை பகடி செய்யும் நகைச்சுவை அது. உங்களுக்கு ஒரு நகைச்சுவையைக் கூட ரசிக்க முடியவில்லை என்றால். கொஞ்சம் வளருங்கள்" என்று கூறி இருந்தார். மற்றுமொரு ட்வீட்டில் மலையாளி சாய்வாலா பற்றிய காமெடி குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாதோர் இந்த வலைப்பதிவில் படித்துத் தெரிந்து கொள்ளவும் என்று கூறி பகிர்ந்திருந்தார். சமூக வலைதளப் பதிவு சர்ச்சையான நிலையில், இந்து அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டப் போலீஸார் பிரகாஷ் ராஜ் மீது புகார் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE