முதல் பார்வை: அண்ணாதுரை - மாறா ஆள்மாறாட்டம்!

By உதிரன்

 

தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நல்லது செய்யும் நோக்கில், தன் பெற்றோர் நலனுக்காகவும், தம்பிக்காகவும் தியாகம் செய்யும் அண்ணனின் கதையே 'அண்ணாதுரை'.

தன் காதலி விபத்தில் இறந்ததை ஏற்க மனமில்லாமல் அவரை நினைத்தே மதுவுக்கு அடிமையாகி தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார் அண்ணாதுரை (விஜய் ஆண்டனி). தம்பி தம்பிதுரை (விஜய் ஆண்டனி) ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறார். அண்ணாதுரையின் நிலையைக் கண்டு வருந்தும் அவரது அம்மா, தன் சகோதரன் மகளைப் பெண் கேட்டு செல்ல, அவமானமே மிஞ்சுகிறது. அப்பா நளினிகாந்துக்கு இளைய மகன் தம்பிதுரைதான் எல்லாம். மூத்த மகன் அண்ணாதுரையை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. தம்பிதுரைக்கு பெண் பார்க்கும் படலம் நிகழ்கிறது. யதேச்சையாக சந்திக்கும் டயானா சாம்பிகாவை தம்பிதுரைக்குப் பிடித்துவிடுகிறது. இருவருக்கும் திருமணப் பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில், அண்ணாதுரை ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்த சிக்கல் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அண்ணாதுரை திருந்தினாரா, தம்பிதுரை தன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்கிறார், டயானா சாம்பிகாவுக்கு திருமணம் நடக்கிறதா என்பது மீதிக் கதை.

உறவுகள் வழியே உணர்வுபூர்வமாக ஒரு கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சீனிவாசன். அந்த முயற்சி திரைப்படமாக கைகூடவில்லை, எடுபடவில்லை என்பதே யதார்த்த நிலை.

சுடுகாட்டில் மதுஅருந்தியபடி தள்ளாடுகிறார் விஜய் ஆண்டனி. இளம்பெண் மகிமாவை ஒரு கும்பல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறது. அதுவரை நிற்கவே முடியாமல் தடுமாறிய விஜய் ஆண்டனி அந்தக் கும்பலைப் போட்டு புரட்டி எடுக்கிறார். மகிமாவை அவரது வீட்டில் பாதுகாப்பாக கொண்டுபோய் விடுகிறார். இரவு ஏழு மணிக்கு மேல வீட்ல இருந்து தனியா வராதம்மா என்று அறிவுரை சொல்கிறார். அந்த நிமிடம் வரைக்கும் படத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது. அதற்குப் பிறகு விஜய் ஆண்டனியின் நாயக பிம்பத்துக்காக ஒரு பாடல் வருகிறது. அதற்குப் பிறகு வரும் பழக்கமும் வழக்கமுமான காட்சிகள் படம் மீதான நம்பகத்தை குலைத்து விடுகிறது.

தமிழ் சினிமாவில் இரட்டையர்களுக்கான வித்தியாசத்தைக் கண்டு வியந்திருக்கிறோம். இதுவா வித்தியாசம் என்று இகழ்ந்தும் இருக்கிறோம். 'அண்ணாதுரை' இதில் இரண்டாவது ரகம். அண்ணனுக்குப் பெயர் அண்ணாதுரை. அண்ணாதுரையின் தம்பி தம்பிதுரை. அண்ணன் தாடி, மீசையுடன் இருப்பார், தம்பி ட்ரிம் செய்தபடி இருப்பார். இப்படித்தான் கதாபாத்திரங்களை தேமே என்று கட்டமைத்திருக்கிறார்கள். அதிலும் விஜய் ஆண்டனி நடிப்பில் சில பரிமாணங்களை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தால் குரல் உயர்த்திப் பேசுவது, குரல் கம்மிப் பேசுவது என்ற வித்தியாசத்தை மட்டும் விரும்பிச் செய்திருக்கிறார். இரட்டை கதாபாத்திரங்களுக்கு வித்தியாசங்கள் காட்டாமல் வெறுமனே ஆக்கிரமிப்பு செய்கிறார்.

டயானா சாம்பிகாவுக்கு நடிக்க அவ்வளவாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையில்லாமல் வந்து போகிறார். நளினி காந்த் மூத்த மகன் மீதான அதிருப்தியையும், இளைய மகன் மீதான பாசத்தையும் சரியாக வெளிப்படுத்துகிறார். ரிந்து ரவி அம்மாவுக்குரிய இயல்பை நடிப்பில் வழங்கியிருக்கிறார். மகிமாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. ராதாரவி, மொட்டை ராஜாராம், காளிவெங்கட், ஜூவல் மேரி ஆகியோர் தங்கள் பாத்திரங்கள் பொருந்திப் போகிறார்கள்.

படத்தில் மிக முக்கிய தருணத்தில் தொய்வடையும் திரைக்கதையை செந்தில்குமரன் தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார். அவரது பக்குவமான நடிப்பு பாராட்டுக்குரியது.

தில்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் வேகத்தடைகளாக இருக்கின்றன. பின்னணி இசை தேவையில்லாத பில்டப்புக்கு வழிவகுக்கிறது. படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்திருப்பதால் தன்னை முன்னிறுத்துவதில் மட்டும் முனைப்பு காட்டியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

அண்ணாதுரை பாசமானவர், அன்புக்காக எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், மிரட்டல் தொனி தெரிந்தாலும் சாதுவானவர். அடியாளாக இருந்தாலும், தப்பானவர் என தெரிந்தாலும் நீங்க செய்றது தப்புண்ணே என்று அன்பாக சொல்லிவிட்டு வந்துவிடுகிறார். தம்பிதுரை அண்ணன் மீது கோபமாக இருப்பவர். வெளியுலகுக்கு மிக மிக மென்மையானவர். பள்ளியில் மட்டும் கண்டிப்பானவர். இந்த இரு துருவங்கள் இணைந்த துருவங்களாகிறதா, எதிர் துருவங்களாகிறதா என்பதை இயக்குநர் சீனிவாசன் பரபரப்பாக சொல்லியிருக்கலாம், ஆனால், இயக்குநர் ஒரு திருப்பத்துக்காக அதைச் செய்து, அதை தர்க்க ரீதியாக நிறுவ முயன்றிருக்கிறார்.

செந்தில்குமரன் யார் என்றே தெரியாத அண்ணாதுரை எப்படி மாமா என்று அழைப்பார்? வில்லங்க வியாபாரியிடம் கடைசி வரை அமைதியையே அண்ணாதுரை கடைபிடிப்பது ஏன்? 7 வருடங்களில் தன் குடும்பம் என்ன ஆனது என்பதைக் கூட தெரியாமல் அண்ணாதுரை இருந்தாரா? சித்ரா என்ன ஆனார்? போன்ற பல கேள்விகளுக்கு லாஜிக் பதில் இல்லாமல் திரைக்கதை நகர்வது சோர்வைத் தருகிறது. அதுவும் அண்ணாதுரை போடும் ஆள் மாறாட்ட யுக்தியில் துளியும் நம்பகத்தன்மை இல்லை. மகிமா போலீஸ் ஆவது, அண்ணாதுரையை காப்பாற்றத் துடிப்பது போன்ற காட்சிகள் செயற்கையாக உள்ளன. இதனால் 'அண்ணாதுரை' மாறாத, அலுத்துப்போன ஆள்மாறாட்டக் கதையாகவே இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்