“நான் நடித்திருக்க வேண்டிய படம்” - ‘நான் மகான் அல்ல’ குறித்து விஷ்ணு விஷால் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “கிட்டத்தட்ட எல்லாமே இறுதியாகிவிட்டது. ஆனால் ‘விதி’ வேறொரு திட்டத்தை வைத்திருந்தது” என நடிகர் விஷ்ணு விஷால் ‘நான் மகான் அல்ல’ படத்தின் வாய்ப்பு நழுவியது குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் உருவான ‘நான் மகான் அல்ல’ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை கடந்த நிலையில், இது தொடர்பான போஸ்டர் ஒன்றை மேற்கொள் காட்டி தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு நழுவிச் சென்றது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் வேதனையுடன் கருத்துகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இப்படம் எனக்குப் பிடித்தமான படங்களில் ஒன்று. ‘வெண்ணிலா கபடி குழு’ படத்துக்குப் பிறகு இரண்டாவது படமாக இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்து நான் நடித்திருக்க வேண்டிய படம் இது.

கிட்டத்தட்ட எல்லாமே இறுதியாகிவிட்டது. ஆனால் ‘விதி’ வேறொரு திட்டத்தை வைத்திருந்தது. சில சமயங்களில் இது என்னுடைய இரண்டாவது படமாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்ப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE