“இயக்குநர் பாலாவுக்குதான் நன்றி சொல்லணும்” - நடிப்பு குறித்து ஜி.வி.பிரகாஷ்

By செய்திப்பிரிவு

சென்னை: உங்கள் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “இயக்குநர் பாலாதான் ‘நாச்சியார்’ படத்தில் அழுத்தமான நடிப்பை சொல்லிக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், கவுரி கிஷன் நடித்துள்ள ‘அடியே’ திரைப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கவுரி கிஷன், “அடியே என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம். இது வித்தியாசமான படம். பேரலல்யுனிவெர்ஸ், ஆல்டர்நேட் ரியாலிட்டி ஜானரில் இந்தியாவில் இதுவரை இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. இந்தப் படத்தின் கதை சிக்கலானது. ஆனால் பட தயாரிப்பு நிறுவனத்தின் முழுமையான ஒத்துழைப்பால், இப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம்.

என் வாழ்க்கையில் எப்போதும் எதிர்பாராமல் தான் அனைத்தும் நடந்திருக்கிறது. ‘96’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை போல். இந்த திரைப்படத்திலும் ஒரே ஒரு போன் கால் மூலம் கதையைக் கேட்டு, உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். பொதுவாக கதைகளை கேட்டு பொறுமையாக தான் தேர்வு செய்து நடிப்பேன். ஆனால் ‘அடியே’ படத்தின் கதையை முழுமையாக கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். அதற்கு மற்றொரு காரணம் ஜி.வி.பிரகாஷ் குமார். அவருடைய இசைக்கு நான் ரசிகை. அவருடைய இசைக்கு அனைவரும் ரசிகர்கள் என்றாலும், இந்த படத்தில் அவருடைய நடிப்பு நன்றாக இருக்கும். அவருடன் இணைந்து நடித்தது மறக்க இயலாத வித்தியாசமான அனுபவம்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் பேசுகையில், “இந்த திரைப்படம் வழக்கமான திரைப்படம் அல்ல. வித்தியாசமான படைப்பு. புது அனுபவம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த படத்தை தாராளமாக திரையரங்கிற்கு சென்று கண்டு ரசிக்கலாம். பயில்வான் இரண்டு ஆஸ்கார் விருது வாங்கியிருப்பார்... சென்னையில் பனி மழை... நடிகர் கூல் சுரேஷ் ஊமை... என இயக்குநர் ஒவ்வொரு நாளும் எனக்கு அதிர்ச்சிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியான பிறகு அவருக்கு திரையுலகிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் அவரும் முன்னணி இயக்குநராக உயர்வார்” என்றார்.

தொடர்ந்து, உங்கள் நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறதே பயிற்சி பட்டறை ஏதும் செல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “இயக்குநர் பாலாவுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஜாலியாக காமெடி படங்களில் மட்டுமே நடிக்கலாம் என நினைத்திருந்த எனக்கு முதன்முதலாக இயக்குநர் பாலாதான் ‘நாச்சியார்’ படம் கொடுத்தார். இதை எப்படி செய்யப்போகிறோம், சரியாக வரவில்லை என்றால் அடிப்பாரா என பல சந்தேகங்கள் எனக்குள் இருந்தது. அவர்தான் ஒரு கதாபாத்திரத்தை எப்படி மெருகேற்ற வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

அடுத்து ‘சர்வம் தாளமயம்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என நல்ல நல்ல படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிகழ்ந்தது. பொதுவாக நாம் என்ன வேலை செய்தாலும் நம்மை முன்னேற்றிகொண்டே செல்ல வேண்டும். இசையிலும் அப்படித்தான். அடுத்தடுத்த படங்களில் என்னுடைய குறைகளை சரிசெய்து கொண்டே வருகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE