தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா: ‘ஜென்டில்மேன் 2’ தொடக்க விழாவில் எம்.எம்.கீரவாணி உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ‘ஜென்டில்மேன்’ படத்தின்2-ம் பாகத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தில் சேத்தன் சீனு, நயன்தாரா சக்கரவர்த்தி, சுதா ராணி, பிரியா லால், சுமன், ஸ்ரீ ரஞ்சனி, சித்தாரா, காளி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம் கீரவாணி இசை அமைக்கிறார்.

இதன் தொடக்க விழாவும் கீரவாணிக்குப் பாராட்டு விழாவும் சென்னை எழும்பூர் ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, காட்ரகட்ட பிரசாத்,கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உண்டு. என் தந்தை இங்கே சென்னையில் வேலைபார்த்த போது என் தாயின் கருவில்உருவானவன் நான். பணி மாற்றம்காரணமாக ஹைதராபாத் சென்றபோது அங்கே பிறந்தேன். அந்த வகையில் தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்று என்னை உணர்வேன். 22 வருடமாக சென்னையில் தான் இருந்தேன். பிறகு தெலுங்கு படங்களுக்கு அங்கே தான் பணியாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஹைதராபாத் சென்றுவிட்டேன். மீண்டும் என்னை தமிழுக்கு அழைத்து வந்த குஞ்சுமோனுக்கு நன்றி. இந்தப் படத்துக்கு நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் சமரசமின்றி என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாகக் கொடுப்பேன்.

எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து. இவர்கள் எழுதிய பாடல்களை கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும். வாலி சார் எழுதிய ‘கண்போன போக்கிலே கால் போகலாமா?’ பாடலை எப்போது கேட் டாலும் மனம் நி்மமதியாகிவிடும். நான் எந்த கோயிலுக்கும்இப்போது போவதில்லை. அந்த உணர்வு வந்தால் நல்ல பாடல்களைக் கேட்பேன். இப்போதும் ‘வானமே எல்லை’ படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது.

இவ்வாறு கீரவாணி பேசினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE