உறவுகளின் மொழி... - தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொண்டுள்ளனர். படத்தினை டி.துரை வீரசக்தி தயாரித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ஒரு ஃபீல் குட் படத்துக்கான அத்தனை அம்சங்களையும் அடித்தளமிட்டுள்ளார் தங்கர் பச்சான். குறிப்பாக உறவுகளிடையே நிகழும் சிக்கல்களை ட்ரெய்லர் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. “ஒரே வீட்ல அப்பனும் பிள்ளையும் 10 வருஷமா பேசாம இருந்திருக்கோம்” என்ற வசனம் தந்தை - மகன் உறவுச் சிக்கலை பேசுகிறது. நேர்மையான தந்தை, ஊழலுக்கு துணை போகும் மகன். இந்த நேர்கோட்டு கதைக்கு இடையில் யோகிபாபு கதாபாத்திரம் பிரிதொரு கிளைக்கதையாக விரிகிறது. பயணத்தில் சந்திக்கும் நல்ல மனிதராக யோகிபாபு. அவருக்கு ஒரு பின்கதை. அதிதி பாலன் காவல் அதிகாரியாக பெண் உரிமைகளை பேசுகிறார். படம் ஃபீல்குட்டாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE