ஊட்டி திரைப்பட விழா 2017
மலைகளின் அரசியான ஊட்டி யில் வரும் டிசம்பர் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் ‘ஊட்டி திரைப்பட விழா’ நடைபெற உள்ளது. தெற்காசிய அளவில் நடைபெறும் குறுப்படப் போட்டியுடன் களைகட்டும் இந்த விழாவில், 8 நாடுகளில் இருந்து வந்து குவிந்த 750 படங்களில் இருந்து திரையிடத் தேர்வான சில்லிட வைக்கும் குறும்படங்கள் ரசிகர்களின் பார்வைக்காக காத்திருக்கின்றன. ஊட்டி திரைப்பட விழாவின் நெறியாளர் இயக்குநர் மிஷ்கினை சந்தித்து விழா குறித்து விரிவாக உரையாடியதில் இருந்து…
ஊட்டி திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கிறீர்கள். ஊட்டியை மையமாக வைத்து ஒரு திரைப்பட விழாவை நடத்தவேண்டும் என்ற யோசனை எப்படி உருவானது?
இந்த யோசனையின் பின்னால் அந்த ஊர் மண்ணின் மைந்தர்கள் இருக்கிறார்கள். ஊட்டியில் எனக்குச் சில சிறந்த நண்பர்கள் உண்டு. நண்பர்கள் என்பதையும் தாண்டி நல்ல செயற்பாட்டாளர்கள். அவர்களில் ஒருவர் பால நந்தகுமார். ஊட்டி மக்களைப் பற்றிச் சிந்தித்து அரசியலாற்றிவரும் ஓர் இலக்கிய ஆர்வலர், பதிப்பாளர். இவரும், ஓவியர், ஒளிப்படக் கலைஞர் மாதவன் உள்ளிட்ட இன்னும் சிலரும் ஊட்டியின் தற்போதைய நிலைகுறித்து மிகுந்த வருத்தத்துடன் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சுற்றுலா சீசனைத் தவிர்த்து பெரும்பாலான மாதங்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது என்று வருந்தினார்கள். திரைப்பட சங்கம் உருவாக்கித் திரையிடல்கள், இலக்கியக் கூட்டங்கள் என்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்தச் செயல்பாட்டின் தொடர்ச்சியாக ஊட்டியை சுற்றுலாத்தலம் என்ற நிலையில் இருந்து ஏன் அதை ஒரு கலாப்பூர்வமான கேந்திரமாக மாற்றக்கூடாது, அதன் ஒரு பகுதியாக சர்வதேசப் திரைப்பட விழா ஒன்றை முன்னெடுக்கலாமா என்று கேட்டனர். அது மிகச்சிறந்த யோசனையாக எனக்குப் பட்டது. கோவா சர்வதேசத் திரைப்படவிழா, சுற்றுலா உணர்வுடன் கூடிய தரமான ஒன்றாகப் புகழுடன் விளங்கிவருகிறது. அதைவிடச் சிறந்த சுற்றுலாத் தலமான ஊட்டியை உலகத் திரைப்படங்கள் முதல் உள்ளூர் திரைப்படங்கள் வரை சந்தித்துக்கொள் ளும் திரைவிழா மையமாக உருவாக்கிவிட்டால் அது தமிழகத்துக்குப் பெருமைதான். ஆனால் இது கடும் உழைப்பைக்கோரும் பணி, எனவே குறைந்தது ஓராண்டு இதற்காக முன் ஏற்பாட்டு வேலைகளைச் செய்யுங்கள்; ஒரு வெள்ளோட்டமாக முதலில் ஒரு சர்வதேசக் குறும்பட விழாவை நடத்தலாம் என்று கூறினேன்.
அதை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். கடந்த ஆண்டின் மத்தியில் வேலைகளைத் தொடங்கினார்கள். ஊட்டி திரைப்பட விழா ஒருங்கிணைப்புக் குழுவில் எழுத்தாளர் பவா.செல்லதுரை, டிஸ்கவரி புக்ஸ் பேலஸவேடியப்பன், ஒளிப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், என்.ஆர்.பழனிக்குமார் எனப் பலர் துடிப்புடன் வேலை செய்து வருகிறார்கள். எங்கள் வேண்டுகோளை ஏற்று ஊடகப் பங்காளியாக ‘தி இந்து’ நாளிதழ் எங்களுடன் இணைந்ததால், இந்த நோக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாக்குவது எளிதாகிவிட்டது.
இந்தத் திரைப்பட விழாவில் உங்கள் பங்கேற்பு, பங்களிப்பு எத்தகையது?
என்னைத் திரைப்பட விழாவின் நெறியாளராக நியமித்திருக்கிறார்கள். மிகக் கனமான பணி. ஒருங்கிணைப்புக்குழுவுடன் களத்தில் இறங்கி என்னால் பணிபுரிய முடியவில்லை. அதற்குக் காரணம், மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘சவரக்கத்தி’ படத்தின் வெளியீட்டு வேலைகள், அடுத்து இயக்கவிருக்கும் படத்துக்கான கதை எனத் தனிப்பட்ட வேலைகள் அதிகமாக இருந்தாலும் திரைப்படவிழா பணிகளில் சிலவற்றை நானே விரும்பி ஏற்றுக்கொண்டி ருக்கிறேன்.
திரைவிழாவின் முக்கிய அங்கம்: இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத் தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் தெற்காசிய குறும்படப் போட்டி.
தெற்காசிய நாடுகளில் இருந்து வந்த 750 குறும்படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றில் இருந்து 10 பேர் கொண்ட குழு கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டி 127 படங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். இவற்றைக் காண 4 நாட்களை ஒதுக்கிஇருக்கிறேன். இவற்றில் இருந்து போட்டிக்குத் தகுதிபெறும் படங்களின் பட்டியலை நான் கொடுக்க விருக்கிறேன். அந்தப் படங்களில் இருந்து பரிசுபெரும் படங்களை நீதிபதிகள் குழு தேர்ந்தெடுக்கும். சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறப்பு கவனம் ஆகிய 5 பிரிவுகளில் பரிகளை வழங்க இருக்கிறோம். இது தவிர திரையுலகில் இருந்து என் இயக்குநர் சகாக்கள் பலரைத் திரைவிழாவில் பங்குபெறச் செய்வதும் எனக்கான பணி.
திரைப்படவிழா என்றாலே கவனத்துக்குரிய படைப்பாளிகளின் பங்கேற்பை பார்வையாளர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த விழாவுக்கு யாரெல்லாம் வருகை தர இருக்கிறார்கள்?
தமிழ் சினிமாவில் இருந்து சசி, பாலாஜி சக்திவேல், ராம், செழியன், கோபி நயினார் எனப் பல இயக்குநர்கள் பங்குபெறுகிறார்கள். கன்னட சினிமாவில் இருந்து இயக்குநர் பவன்குமார் கலந்துகொள்கிறார். இலங்கையின் மிகச் சிறந்த படைப்பாளி, இயக்குநர் பிரசன்ன விதானகே திரைப்பட விழாவைக் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைக்கிறார். கவுரவுத்துக்குரிய கொல்கத்தா சர்வதேசப் படவிழாவில் சிறந்த இந்தியப் படத்துக்கான விருதை வென்று வந்திருக்கும் செழியனின் ‘டூலெட்’ திரைப்படத்தை விழாவின் தொடக்கப் படமாகத் திரையிட வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக அவரிடம் பேசவிருக்கிறேன். இன்னும் வட இந்தியாவில் இருந்து பல படைப்பாளிகளை அழைத்து வர, அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.
திரையிடலுக்கு நடுவே உரையாடலுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறீர்களா?
எந்தவொரு திரைப்படவிழா என்றாலும் அதில் உரையாடலும் படைப்பு பற்றிய விவாதமும் படைப்பாளிகளுடனான சந்திப்பும் மிக முக்கியம். ஆனால், வருந்தத்தக்க அளவில் பல படவிழாக்களில் விவாதக்களம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது. ஆனால், ஊட்டி திரைப்பட விழா நடைபெறும் 3 நாட்களும் அன்றைய கடைசிப் படத்தின் திரையிடலுக்கு முன்பு ஒரு மணிநேரம் தினசரி ஒரு தலைப்பில் உரையாட இருக்கிறோம்.
இது கைபேசிக் கேமராவில் குறும்படம் எடுக்கும் காலம். ஆனால், குறும்படம் எனும் ஊடகத்தின் நுட்பம் என்ன? அதன் பின்னால் தேவைப்படும் உழைப்பு எப்படிப்பட்டது? குறும்படத்தின் வழியாகக் கற்றுக்கொண்ட படிப்பினைகளை எப்படி நமக்கான பாடமாக மாற்றிக்கொள்வது? உலக அளவில் குறும்படம் எனும் வடிவம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தொடர்வதற்கு காரணங்கள் என்ன? உலகின் மிகச்சிறந்த குறும்படங்கள், சிறுகதையும் குறும்படமும் எப்படி ஊடாடி தோழமை பாராட்டமுடியும் ஆகிய முக்கியமான தலைப்புகளில் உரையாடலை வடிவமைத்திருக்கிறோம்.
ஊட்டி திரைப்பட விழாவில் எதிர்பாராத ஆச்சரியங்கள்?
திரை ஆர்வலர்கள், திரை மாணவர்கள், திரையுலகினர் ஆகிய 3 தரப்பினருக்கும் இந்த 3 நாள் அனுபவம் மறக்கமுடியாத பயணமாக இருக்கும். மிகச்சிறந்த திரையரங்கம்,
மிகச்சிறந்த உணவு, மிகச்சிறந்த அனுபவப் பகிர்வு இவற்றுடன் கொஞ்சம் எதிர்பார்க்க முடியாத படைப்பாளிகள், நட்சத்திரங்களோடு உரையாடல் எனத் தரத்திலும் அனுபவத்திலும் ஒரு முன்மாதிரியை உருவாக்குவதுதான் எங்கள் இலக்கு. அதை அடைய எல்லோரும் இதயபூர்வமாக வேலை செய்கிறார்கள்.
இது ஊட்டியின் முன்னேற்றம், திரையுலகின் முன்னேற்றம் இரண்டோடும் தொடர்புடையதே தவிர, தனிப்பட்ட வர்த்தக நோக்கங்கள் எதற்கும் இடமில்லை. ஊட்டியைத் தமிழகத்தின் திரைப்பட விழா தலைநகரமாக மாற்றிக்காட்ட வேண் டும் என்பதும், அதன்மூலம் தமிழ் சினிமாவுக்கும் ஊட்டிக்கும் உலக அரங்கில் கவனத்தை ஈர்ப்பதும் எங்களின் லட்சியம்!
திரை ஆர்வலர்கள், திரை மாணவர்கள், திரையுலகினர் ஆகிய 3 தரப்பினருக்கும் இந்த 3 நாள் அனுபவம் மறக்கமுடியாத பயணமாக இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago