நாடகம் நடத்தி சம்பாதிக்க முடியாதா?: நடிகை மாயா கிருஷ்ணன் கேள்வி

By செய்திப்பிரிவு

சினிமாவின் தொடக்கமாக இருந்த நாடகத்தை தொடர்ந்து நேசிக்கும் நடிகர்கள் குறைவு. சினிமாவில் இருந்துகொண்டே மேடைக்கும் வந்துகொண்டிருப்பவர்களில் ஒருவர் நடிகை மாயாகிருஷ்ணன். ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ படத்தில் நடிப்பைத் தொடங்கிய மேடை நாடகக் கலைஞரான மாயா கிருஷ்ணன், ‘மகளிர் மட்டும்’,‘வேலைக்காரன்’, ‘2.0’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போது விஜய்யின் ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்துள்ள மாயா கிருஷ்ணன், நாடகத்தையும்தொடர்கிறார். ராஜீவ் கிருஷ்ணன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘கிந்தன் சரித்திரம்’ நாடகம் கோடம்பாக்கத்தில் உள்ள ‘இடத்’தில் (IDAM) இன்று நடக்கிறது. இதுபற்றி மாயா கிருஷ்ணனிடம் பேசினோம்.

‘கிந்தன் சரித்திரம்’னா?

கிந்தன் அப்படிங்கறவரோட வாழ்க்கைதான் கதை. அவர் யாரைச் சந்திக்கிறார், என்னென்ன பிரச்சினைகள் அவருக்கு வருதுன்னு நாடகம் போகும். இதுல அதிகமா எம்.ஜிஆர் பாடல்கள் இருக்கும். அவர்பாடலின் தத்துவங்கள், கருத்துகள் கதைசொல்றதுக்குத் தேவைப்பட்டது. அதனால அதை சேர்த்திருக்கோம். இதுல, நடிகர் தரணிதரன், கானா பாடகர் டேவிட் நடிக்கிறாங்க. இவங்ககிட்ட இருந்து நானும் கத்துக்கிறேன்.

இதுவரை எத்தனை முறை இந்த நாடகத்தை நடத்தி இருப்பீங்க?

‘கிந்தன் சரித்திரம்’ இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணன் 14 வருடமா நாடக நிறுவனம் நடத்தறார். நாங்களும் அதுல ஒரு பகுதியா இருக்கோம். இதுக்கு முன்னால,எழுத்தாளர் கி.ராஜநாராயணனோட ‘குழம்பு’ சிறுகதையை நாடகமா போட்டோம். அதோட 100-வது நிகழ்ச்சிக்குகி.ரா.வே வந்து வாழ்த்தினார். இப்ப ‘கிந்தன் சரித்திரம்’ நாடகத்தை நடத்துறோம். நாடகம் நடத்தி சம்பாதிக்கவேமுடியாதுன்னு சொல்றாங்கள்ல, அதை உடைக்கணுங்கறதுதான் எங்கள் நோக்கம்.

அதுக்காக நாடகத்துக்கு ஒரு கமர்சியல் ஃபார்முலாவை கண்டுபிடிச்சு, பார்வையாளர்களை மகிழ்விக்கிறது நோக்கம். இந்த நாடகத்தை பல்வேறு பகுதிகள்ல, 36 ஷோ முடிச்சுட்டோம். அடுத்து பெங்களூரு போகப் போகப்போறோம். 100 ஷோ நடத்தணும்னு ஆசை இருக்கு.

உங்க சினிமா புகழ், நாடகத்துக்குப் பயன்படுதுன்னு நினைக்கிறீங்களா?

கண்டிப்பா. இன்னைக்கு மக்களை நாடகம் பார்க்க அழைக்கிறதும் அவங்களைக் கூட்டிட்டு வர்றதும் பெரிய விஷயம். அதுக்கு என் சினிமா புகழும் சமூக வலைதளத் தொடர்புகளும் பயன்படுது. ஏன்னா, நான் நாடகத்துல இருந்துதான் சினிமாவுக்கு வந்தேன்.

‘விக்ரம்’ படத்துக்கு பிறகு உங்களுக்கு அதிக வாய்ப்புகள் வந்திருக்குமே?

ஆமா. நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்டா தான் சினிமாவுல நடிப்பை தொடங்கினேன். ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகுதான் அதிகமா வெளிய தெரிஞ்சிருக்கேன். ‘துருவ நட்சத்திரம்’ படத்துல நல்ல ரோல். அந்தப் படம் இன்னும் வெளிவரலை. இப்ப 3 படங்கள் நடிக்கிறேன். தெலுங்குல 2 படங்கள்ல ‘லீட் கேரக்டர்’ பண்றேன். அப்புறம் கே.வி.ஆனந்த் அசிஸ்டென்ட் இயக்குற படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறேன்.

நாடகங்களுக்கான வரவேற்பு இப்ப எப்படி இருக்கு?

இருக்கு. ஆனா, பார்வையாளர்கள் அதிகமா வரணும். அதுக்காகத்தான் நாடகத்தை உருவாக்கும்போதே எல்லாரையும் சந்தோஷமான மனநிலையில அனுப்பணும்னு முடிவு பண்றோம். கதையில அதுக்கான விஷயங்களை வைக்கிறோம். இதைப் பார்க்கிற பார்வையாளர்கள் நல்லாயிருக்குன்னு சொல்லி சொல்லிதான் அதிகமானவங்க வர்றாங்க. அதுமட்டுமில்லாம இதுக்கு கட்டணம் ஏதும் நாங்க வசூலிக்கறதில்லை. ஆனா, பார்வையாளர்கள் விருப்பப்பட்டாகொடுக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE