காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்ற முத்துவேல் என்கிற டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்) குடும்பத்துடன் முதுமைப் பருவத்தை அமைதியாகக் கழிக்கிறார். முத்துவேலின் மகனும் காவல்துறை துணை ஆணையருமான அர்ஜுன் பாண்டியன் (வசந்த் ரவி), வர்மன் (விநாயகன்) என்னும் சிலை கடத்தல் மாஃபியாவை எதிர்க்கிறார். திடீரென்று அர்ஜுன் இறந்துவிட்டதாகத் தகவல் வருகிறது. மகனின் மரணத்துக்குக் காரணமான வர்மன் குழுவைப் பழிவாங்கக் கிளம்புகிறார் முத்துவேல். அந்தக் குழுவில் ஒவ்வொருவராக அழித்து வர்மனை நெருங்கினால், அர்ஜுன் உயிரோடு இருப்பது தெரிகிறது.
ஆந்திராவில் ஆதி நாராயணர் கோயிலில் இருக்கும் பழங்கால வைரம் பதித்த கிரீடத்தைத் திருடிக் கொடுத்தால் அர்ஜுனை விடுவதாக முத்துவேலிடம் பேரம் பேசுகிறார் வர்மன். மகனுக்காக அதை ஏற்கும் முத்துவேல் பிறகு என்ன செய்கிறார்? அர்ஜுன் காப்பாற்றப்பட்டாரா? எனும் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.
தனது ‘டிரேட் மார்க்’ ‘டார்க் காமெடி’யையும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் ஆக்ஷன் காட்சிகளையும் சரிவிகிதத்தில் கலந்து ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
முதல் பாதி நிதானமாகத் தொடங்கினாலும் விரைவில் கதையின் மைய முடிச்சுக்குள் நுழைந்துவிடுகிறது திரைக்கதை. தொடக்கக் காட்சிகளில் வீட்டு வேலையில் மனைவிக்கு (ரம்யா கிருஷ்ணன்) உதவிக்கொண்டும் பேரனின்(ரித்விக்) யூடியூப் சேனலுக்கு காணொலி தயாரிக்க உதவியபடியும் பொழுதைக் கழிக்கும் முதியவராக ரஜினியைப் பார்ப்பது ஆச்சரியம்.
முதல் பாதியைப் பெருமளவில் ரஜினியின் மாஸ் காட்சிகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். அந்தக் காட்சிகளில் ரசிகர்களின் விசில் சத்தத்தைக் கேட்க முடிகிறது. ஆனால் முத்துவேல், ‘ஒத்தையாக’ சென்று சிலை கடத்தல் வலைபின்னலின் ஆட்களைக் கொல்லும் காட்சிகள் சாதாரணமாகக் கடக்கின்றன.
ரஜினிக்கு இருக்கும் மிகைநாயக பிம்பத்தால் அவர் எதைச் செய்தாலும் ரசிகர்கள் ஏற்பார்கள் என்பதால் இயக்குநர் இந்தக் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கடவில்லையோ என்று தோன்றுகிறது. அதே நேரம் அவருக்கும், யோகிபாபுவுக்குமான உரையாடல்களில் வெளிப்படும் நகைச்சுவை, பெங்களூருவில் முன்னாள் கைதியைச் (சிவராஜ்குமார்) சந்திக்கும் காட்சி, முத்துவேலின் சுயரூபம் வெளிப்படும் இடைவேளைக் காட்சி ஆகியவற்றால் முதல்பாதி கலகலப்பாக நகர்ந்துவிடுகிறது.
இரண்டாம் பாதியில் ஜெயிலர் முத்துவேலின் ஃப்ளாஷ்பேக் ஓரளவு ஈர்க்கிறது. பிறகு கிரீடத்தைத் திருடும் பணியை முத்துவேல் ஏற்றுக்கொண்ட பின் திரைக்கதை தடுமாறுகிறது. முத்துவேலுக்கு உதவும் இன்னொரு தாதா மோகன்லால் வரும் காட்சி ரசிக்க வைக்கிறது. கிரீடம் கடத்தப்படுவதும் அடுத்த சில காட்சிகளும் திரைக்கதைக்கு சுவாரசியம் கூட்டுகின்றன. பிறகு வரும் ‘ட்விஸ்ட்’ வழக்கமானதாக இருக்கிறது. இறுதியில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால் மூவரும் சேர்ந்து எதிரியை வீழ்த்தும் புத்திசாலித்தனம் ரசிக்க வைக்கிறது.
யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் இதில் கழுத்தை வெட்டுவது உட்பட அப்பட்டமான வன்முறைக் காட்சிகளை அனுமதித்திருப்பது கண்டனத்துக்குரியது.
ரஜினிகாந்த் மகனின் இழப்பை எதிர்கொள்ளும் காட்சிகளில் நுட்பமான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதை நிரூபித்திருக்கிறார். கொடூர வில்லனாக விநாயகன் சிறப்பாக நடித்திருக்கிறார். யோகிபாபு, சுனில், சுனில் ரெட்டி, ஜாஃபர் சாதிக் ஆகியோர் ஆங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள். ரம்யாகிருஷ்ணனுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. வசந்த் ரவி, சரவணன் என முக்கிய துணை கதாபாத்திரங்களுக்குப் பெரிதாக வேலை இல்லை. தமன்னா ஒரே ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு சில காட்சிகளில் வந்து செல்கிறார்.
அனிருத் இசையில் ‘காவாலா’ ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை மாஸ் காட்சிகளின் தாக்கத்தை அதிகரித்திருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு, ரஜினியை வெவ்வேறு கோணங்களில் மிடுக்காகக் காண்பித்திருக்கிறது. ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு திரைக்கதையின் சீரான பயணத்துக்குத் துணைபுரிந்திருக்கிறது.
எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றி ரசிகர்கள் ஏமாற்றம் அடைவதைத் தவிர்த்திருக்கிறது ‘ஜெயிலர்’. திரைக்கதைக்குக் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் நிறைவைத் தந்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago