“பொறுக்கி என்பது கோபத்தில் சொன்ன வார்த்தை; விஷாலை மிஸ் செய்கிறேன்” - இயக்குநர் மிஷ்கின் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “சண்டை போடாமல் எப்படி வாழ முடியும்? நல்ல நட்பு அது. இருவரும் நேசித்தோம். நான் அவரை மிஸ் செய்கிறேன். அவர் என்னை மிஸ் செய்யமாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஈகோ அதிகம்” என விஷால் குறித்து இயக்குநர் மிஷ்கின் உருக்கமாகப் பேசியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “யாரையும் விமர்சித்து, யாரையும் நகைச்சுவை கதாபாத்திரமாக்கி சினிமாவில் காட்டுவதற்கு முழுக்க முழுக்க உரிமை இருக்கிறது. சினிமாவில் தவறுதலாக ஒருவரின் பெயரை வைத்துவிட்டால் கேஸாகிவிடுகிறது. அப்படி என்னை நீங்க எவ்வளவு மோசமானவராக கூட காட்டுங்கள். அதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஒரு இயக்குநருக்கு சினிமாக்காரர்களாகிய நாம் இந்த முழு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஜி.வி.பிரகாஷ் ஒரு ஸ்வீட் பாய். தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத ஒருவராக ஜி.வி.மாறியுள்ளார். அவரது மனைவி என் படத்தில் அருமையான பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்” என்றார்.

மேலும், “திரும்பத் திரும்ப நான் ‘பொறுக்கி’ என சொன்னதை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். விஷாலும் கூட,“நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன்” என்கிறார். அப்படி நான் என்ன துரோகம் செய்தேன் எனத் தெரியவில்லை. விஷால் என் இதயத்துக்கு நெருக்கமானவர். சண்டை போடாமல் எப்படி வாழ முடியும்? நல்ல நட்பு அது. இருவரும் நேசித்தோம். நான் அவரை மிஸ் செய்கிறேன். அவர் என்னை மிஸ் செய்ய மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஈகோ அதிகம். எனக்கும் ஈகோ இருக்கிறது ஆனால் மேனெஜ் செய்துகொள்வேன். பொறுக்கி என்பது நான் கோபத்தில் சொன்ன வார்த்தை. ஆனால் விஷால் அப்படியில்லை. அவர் ஸ்வீட் பாய். அவர் என்னுடன் பணியாற்றவில்லை என்றாலும், அவர் வெற்றிபெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். விஷாலுடன் இனி படம் பண்ணவே மாட்டேன். கெஞ்சிக் கொண்டிருக்கமாட்டேன். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவம். விஷால் சிறந்த மனிதர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE