ஃபேஸ்புக்கில் பெண்களுக்கு வலை வீசி தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒருவனும், ரகசியங்களை ஒட்டுகேட்பதையே முழு நேரப் பணியாக செய்யும் போலீஸும் மோதினால் அதுவே 'திருட்டுப்பயலே 2'.
உளவுத்துறையில் அதிகாரியாகப் பணிபுரிகிறார் செல்வம் (பாபி சிம்ஹா). அவரின் மனைவி அகல் (அமலாபால்). உயர் அதிகாரி அளித்த உத்தரவின் பேரில் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளின் ரகசியங்களை ஒட்டுகேட்கிறார் செல்வம். அதில் கசியும் பல உண்மைகள் மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளை அம்பலப்படுத்துகிறது. இதை ஐ.ஜி. முத்துராமனும், அதிகாரி செல்வமும் (பாபி சிம்ஹா) தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனிடையே தன் மனைவி மிகப் பெரிய சிக்கலில் இருப்பதை தெரிந்துகொள்ளும்
செல்வம் (சிம்ஹா) அதற்குக் காரணமான பால்கியுடன் (பிரசன்னா) நேருக்கு நேர் மோதுகிறார். அந்த மோதலுக்கு என்ன காரணம், சிக்கலில் செல்வம் மனைவி எப்படி சிக்கினார், அதற்கான முகாந்திரம் என்ன, வெடிக்கும் மோதலுக்குப் பிறகான இழப்புகள், பாதிப்புகள், விளைவுகள் என்ன என்பதை 'திருட்டுப்பயலே 2' திறமையுடன் திரைக்கதையாக விவரிக்கிறது.
'திருட்டுப்பயலே' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுசி கணேசன் மீண்டும் அடுத்த வீட்டின் சிற்றின்பத்தின் பாதிப்புகளை த்ரில்லர் ஜானரில் அழுத்தமாக பாகம் 2-லும் பதிவு செய்திருக்கிறார். வழக்கமான சினிமா போலீஸுக்குரிய அம்சங்களில் தன்னை பொருத்திக்கொள்ளாமல் நாம் கடந்துபோகிற, யதார்த்தமாகப் பார்க்கிற போலீஸின் பாவனைகளை வெளிப்படுத்தும் பாங்கும், கொடுத்த பணியை சிரமேற்கொண்டு செய்யும் பொறுப்பான பணியின் தன்மையை உள்வாங்கும் விதத்திலும் பாபி சிம்ஹாவின் நடிப்பு இயல்பாக உள்ளது. ஆனால், சில நேரங்களில் புத்திசாலித்தனமாகவும், சில நேரங்களில் சுமாராகவும் அவரது அணுகுமுறை இருக்கிறது. கோபம், தவிப்பு, குட்டு வெளிப்படும் தருணம், அதிர்ச்சி போன்ற சில நுட்பங்களிலும், உச்சரிப்பிலும் தன்னை இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டிய தேவையும் சிம்ஹாவுக்கு இருக்கிறது.
அமலாபால் கதையை நகர்த்திச் செல்வதற்கு அதிகம் பயன்பட்டிருக்கிறார். காதலி, மனைவி, கட்டுக்கோப்பான பெண், டெக்னாலஜிக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல், விபரீதம் உணர்ந்து மருகுதல், சந்தர்ப்பத்தை சமாளித்தல் என அனைத்து தருணங்களிலும் பக்குவமான நடிப்பைக் கையாள்கிறார்.
பிரசன்னா நடிப்பில் பின்னி எடுக்கிறார். தன் புத்திசாலித்தனத்தால், வசீகரப் பேச்சால், ஆபத்து உணர்ந்தும் நிதானம் கடைபிடிக்கும் இளைஞனாய் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அழகாக ஸ்கோர் செய்கிறார். நுண்ணிய ஒவ்வொரு அசைவிலும் சிறந்த நடிகனாக தன்னை நிரூபிக்கிறார். உளவியல் சார்ந்த பிரசன்னாவின் நடவடிக்கைகள் அட போட வைக்கின்றன.
ஆடம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், பிரதீப் நாயர், சந்திரமௌலி, முத்துராமன் ஆகியோர் சரியான தேர்வு. செல்லத்துரையின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ராஜாமுகமது அச்சுக்கு புஜ்ஜுக்கு பாடலுக்கு கத்தரி போட்டிருக்கலாம்.
'கரப்ட்னா கண்ட இடத்துல கைவைக்குறது, ஹானஸ்ட் கரப்ட்னா யாரும் காணாத இடத்துல கை வைக்குறது', 'கம்ப்யூட்டர்ல எப்படி வாசனை வரும்? கடவுளுக்கு நைவேத்தியம் இப்படிதானே பண்றாங்க, சாமி ஏத்துக்குறதில்லையா', 'எல்லா தனி மனிதனும் கரப்ட் ஆக ஆசைப்படறான், சொசைட்டி மட்டும் எப்படி க்ளீனா இருக்கும்', 'என்னைக் கொல்லாம விட்டது உன் தப்பு, தீக்குச்சி எடுத்தது நீ, கொளுத்தப் போறது நான்', 'ரகசியம் மாட்டிக்கிட்ட வாய் வீராப்பு பேசும், மனசு அய்யோ அம்மான்னு அலறும்', 'உன்னைப் புரிஞ்சுக்கிட்டேன், உன் அப்பா மாப்பிள்ளை தேடுறார், நீ ஒரு ஃப்ரெண்டைத் தேடுற' போன்ற ஜி.ஆர்.சுரேந்திரநாத்தின் வசனங்கள் தனித்துத் தெரிகின்றன.
ரொமான்ஸ், நடனம் என தனக்கு வராத அம்சங்களில் இருந்து பாபி சிம்ஹா விலகி நிற்பதும், அதையே அவரது கதாபாத்திரத்துக்கான அம்சமாக சுசி கணேசன் செதுக்கி இருப்பதும் சிறப்பு. பிரசன்னாவை தன் வீட்டில் எதிர்கொள்ளும்போது அமலாபால்- சிம்ஹாவின் ரியாக்ஷன்களிலும், பேச்சிலும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். சமூக வலைதளங்களால் பெண்ணுக்கு ஏற்படும் பாதுகாப்பின்மையை, அச்சுறுத்தலை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். சமூகத்தில் நம்முடன் அன்றாடம் பழகும் பேசும் நபர்களின் உதடும், மனசும் வெவ்வேறு விதமாய்ப் பேசுவதை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
எல்லோருமே நல்லவர்கள் இல்லை. குறிப்பிட்டுச் சொல்லும்படி செயல்படும் அந்த ஒருசிலரும் அரசியல் தன்மையுடன், சுய லாபத்துக்காகவே வாழ்வார்கள் என்பதைப் போகிற போக்கில் பதிவு செய்கிறார். அடுத்த வீட்டை எட்டிப்பார்க்கும் போது கிடைக்கும் ரகசியம் அனுபவமா? எச்சரிக்கையா? என்பதையும் ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமாகக் கடத்துகிறார்.
மனைவிக்குத் தெரியாமல் ரகசியம் காப்பதும், அதற்கான மெனக்கிடலில் உழைப்பை செலுத்துவதுமான நாயகன் பாத்திர வார்ப்பு வரவேற்கத்தக்கது. தப்பான வழியில் வந்த பொருட்கள் அப்படியே போவதாக காட்சிப்படுத்தி இருக்கும் அறம் சார்ந்த பணி பாராட்டுக்குரியது. பாராட்டுக்காக ஏங்கும் மனதின் தவிப்பு, அங்கீகாரம் இன்னொரு இடத்தில் கிடைக்கும்போது நிகழும் மாற்றம், மனைவியின் விருப்பங்களை தெரிந்துகொள்ளாமல் பணிச்சுமையில் இருக்கும் கணவன் என்ற இந்த மூன்று கூறுகளை திரைக்கதைக்கான கண்ணிகளாக இயக்குநர் மிகச் சரியாக கையாண்டிருக்கிறார்.
ஆனால், லாஜிக் விஷயங்களில் சுசி கணேசன் கோட்டை விட்டிருக்கிறார். பிரசன்னா தனக்கான பலனை அனுபவிப்பதற்காக சிம்ஹா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பத்திலும், இடையிலும் சொல்லாமல் இறுதியில் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.
பிரசன்னா வைத்திருக்கும் ரகசியங்களை அழிக்கும் உத்தி முறை காலதாமதமானதாகவே இருக்கிறது. அதற்கான எத்தனையோ வாய்ப்புகள் கிட்டியும் இயக்குநர் அதை தவறவிட்டிருக்கிறார். அதனாலேயே முதல் பாதியில் இருக்கும் கச்சிதம் இரண்டாம் பாதியில் இல்லாமல் தொய்வடைகிறது. இந்த குறைகளை சரிசெய்திருந்தால் 'திருட்டுப்பயலே 2' தந்திரக்காரர்களின் ஜாலமாக ஜொலித்திருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago