“ரத்னவேலின் சோக முடிவை யாரும் மறக்க முடியாது” - ஃபஹத் ஃபாசில் வைரல் வீடியோக்கள் குறித்து வன்னியரசு 

By செய்திப்பிரிவு

சென்னை: “சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது” என ‘மாமன்னன்’ படத்தின் ஃபஹத் பாசில் கதாபாத்திர வீடியோக்களுக்கான சாதிய பாடல்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படம் வெளிவந்ததில் இருந்து சாதியவாதிகளுக்கு பதற்றம் பீறிட்டு, என்ன செய்வது என தெரியாமல் பிதற்றி வருகிறார்கள். வெளிவந்த நாளில் தென்மாவட்டங்களில் தியேட்டர்களை முற்றுகையிட்டன சாதியவாதிகள். அப்புறம தான் கதைக்களமே தென்மாவட்டம் இல்லை என தெரிந்து தலையை சொறிந்து கொண்டனர். இப்போது ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதியவாதிகள் கொண்டாடி வருகின்றனர். அதாவது, நாயை படுகொலை செய்வதை கொண்டாடுவது, சொந்த சாதிக்காரனையே படுகொலை செய்வதை கொண்டாடுவது என சாதிய மனநோயாளிகளாக மாறுகின்றனர்.

அதுவும் அவரவர் சாதிகளை இணைத்து சாதிப் பெருமையோடு பதிவிட்டு வருகின்றனர். இதில் சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம்தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது. சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,‘மாமன்னன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு பல்வேறு பாடல்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டு ‘மிக்ஸ்’ வீடியோக்களாக இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன. அது குறித்த விவரம் > ‘மாமன்னன்’ ஃபஹத் ஃபாசில் காட்சிகளுக்கு வகை வகையான பாடல் ‘வெர்ஷன்கள்’ - நெட்டிசன்களின் பார்வை என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE