ரசிகர்களை கொண்டாட வைத்த ரஜினி மெட்லி!

By யுகன்

வயலின் கலைஞர் கார்த்திக், ஐக்கிய நாடுகளின் கிளாஸ்டன்பரி, அமெரிக்காவின் கென்னடி சென்டர் ஃபார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், ஸ்பெயினின் வுமெட், பெர்த்தின் ஒன்மூவ்மென்ட் போன்ற உலகின் புகழ்வாய்ந்த இசை மேடைகளில், நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருப்பவர். அவருடன் ராம்குமார் கனகராஜன் (டிரம்ஸ்), அகிலேஷ் (பாஸ்கிதார்), விக்ரம் விவேகானந்த் (கிதார்), அக்ஷய் (அகோஸ்டிக் கிதார்) ஆகியோர் அண்மையில் வி.ஆர்.மாலில் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணிகளில் இசையைக் கற்றிருந்தாலும் அவர்கள் இசை, ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாகவே `இண்டோசோல்' என்னும் தலைப்பின்கீழ் தங்களின் இசைப் பங்களிப்பைச் செய்துவருகின்றனர். மேற்கத்தியப் பாணி, நாட்டுப்புற இசை, கர்னாடக இசை என பல பாணி இசை வடிவங்களில் இருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே இவர்கள் இசையின் சிறப்பாக அமைந்திருக்கிறது.

அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் இசை இருந்தது. அது திரையிசையாக இல்லை. நல்ல இசை என்பது எதுவாக இருக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் பதிலாக மனங்களைச் சங்கமிக்கச் செய்யும் இசையை அன்றைக்கு வழங்கினர், இண்டோசோல் இசைக் குழுவினர்.

சிறு தூறலாகத் தொடங்கி கனமழை பெய்துமுடித்தவுடன் மீண்டும் தூவானம் போல் அமைதியாகிறது நம் மனம். பித்துக்குளி முருகதாஸின் ‘செங்கதிர் வானும் தன் கதிர் மதியும்' பாடலுடன் போர்ச்சுக்கல் நாட்டில் பிறந்த ஃபெர்னான்டோ பெஸோ என்கிற புகழ்பெற்ற கவிஞரின் வரிகளும் சாரமதி என்னும் ராகத்தில் ஒன்றிணையும் ரசவாதமும் அன்றைய இசை நிகழ்ச்சியில் நடந்தது.

2 மணிநேரத்துக்கும் அதிகமாக நீடித்த நிகழ்ச்சியில் அவர்களின் சுயாதீனப் பாடல்களையும் இசையையும் மட்டுமே வழங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ரசிகர்களின் விருப்பத்தை ஈடுசெய்யும் வகையில் ரஜினியின் படங்களில் இசைக்கப்பட்ட டைட்டில் இசையைத் தொகுத்து இசைப் பூங்கொத்தாக அளித்தனர். பாட்ஷா முதல் காலா வரை அமைந்த இந்த ‘மெட்லி', விஆர் மாலில் கூடியிருந்த இந்திய ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு சென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE