இந்திய சினிமாவில் தன் குரலால் காலம் கடந்து ரசிகர்களை வசியப்படுத்திய பாடகிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, பி.சுசீலா, எஸ்.ஜானகி முதலானோர் வரிசையில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் ‘சின்னக்குயில்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சித்ரா. இந்தியாவிலேயே அதிக தேசிய விருதுகளைப் பெற்ற பாடகி என்ற பெருமையை பெற்ற சித்ரா இன்று (ஜூலை 27) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா என பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏறக்குறைய 20,000 பாடல்களை பாடியுள்ளார் சித்ரா. ஆறு தேசிய விருதுகள், 8 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 36 மாநில அரசு விருதுகள் என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். இந்திய அரசின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா, மிக சிறுவயதிலேயே முறைப்படி கர்னாடக இசையை கற்றார். தனது ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் சில பாடல்களை பாடியிருக்கிறார். கேரளப் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்ற அவர், மத்திய அரசு தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமைசாலிகளுக்கு வழங்கிய கல்வி உதவித்தொகையை 1978 முதல் 1984 வரை பெற்றார். பள்ளி நாட்களில் சில மேடைக் கச்சேரிகளில் பாடகர் யேசுதாஸுடன் இணைந்து சில பாடல்களை பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் 'அட்டஹாசம்', ஸ்னேஹபூர்வம் மீரா', 'ஞான் ஏகனானு' போன்ற படங்களில் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
1984-ல் மலையாளத்தில் ஃபாசில் இயக்கத்தில் வெளியான ‘நோக்கெதாதூரத்து கண்ணும் நாட்டு’ என்ற படத்தில் சில பாடல்களை சித்ரா பாடியிருந்தார். இந்த பாடல்கள் பெரும் ஹிட்டாகின. இது தமிழில் இளையராஜாவின் கவனத்தை ஈர்த்தது. 1985ஆம் ஆண்டு அந்த படம் அப்படியே தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் இடம்பெற்ற ‘சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா’ என்ற பாடலை சித்ராவை பாடவைத்தார் இளையராஜா. இதனாலேயே சித்ராவுக்கு சின்னக்குயில் சித்ரா என்ற பெயரை ரசிகர்கள் சூட்டினர்.
இந்தப் பாடலுக்கு முன்பே 'நீதானா அந்தக் குயில்' படத்தில் இடம்பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடலை சித்ராவின் குரலில் இளையராஜா பதிவு செய்திருந்தார். அந்தப் பாடலும் வெளியாகி சித்ராவை மேலும் பிரபலமடையச் செய்தது. தொடர்ந்து தமிழில் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘சிந்து பைரவி’ படத்தில் இடம்பெற்ற ’நானொரு சிந்து’ பாடலுக்காக கேரளாவிலிருந்து சென்னை வந்து பாடிக் கொடுத்தார் சித்ரா. மறுநாள் எம்.ஏ. தேர்வு என்பதால் அன்று மாலையே திருவனந்தபுரம் புறப்பட வேண்டி இருந்தது. ஆனால் சித்ராவின் தந்தையிடம் இளையராஜா ‘இன்னொரு பாடல் இருக்கிறது. நாளை அதையும் பதிவு செய்துவிடலாம். எம்.ஏ தேர்வை பின்னர் கூட எழுதிக் கொள்ளலாம். ஆனால், இந்தப் பாடலை பாடினால் சித்ராவுக்கு மிகப்பெரிய புகழ் கிடைக்கும்’ என்று கூறினார். இளையராஜாவின் வேண்டுகோளை ஏற்று மறுநாள் அந்த பாடலை சித்ரா பாடிக் கொடுத்தார். ’பாடறியேன் படிப்பறியேன்’ என்ற அந்த பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும் சித்ராவுக்கு கிடைத்தது. இந்த சம்பவத்தை பல தருணங்களில் சித்ரா நினைவுகூர்ந்துள்ளார்.
டி.எம்.சவுந்தர்ராஜன் - பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-எஸ்.ஜானகி வரிசையில் மனோ-சித்ரா இணை தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பல வெற்றிப் பாடல்களை கொடுத்துள்ளது. ‘வேலைக்காரன்’ படத்தில் ‘வா வா கண்ணா வா’, ’எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ‘மதுர மரிக்கொழுந்து வாசம், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் ‘குடகு மலை பாட்டில்’ ஆகிய பாடல்களை ரசிகர்களால் மறக்க இயலாது.
இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் மிக அதிகமான பாடல்களை சித்ரா பாடியுள்ளார். பாரதிராஜா இயக்கிய ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் சித்ரா குரலில் இடம்பெற்ற ‘தென்கிழக்கு சீமையிலேயே’ பாடல் இன்று வரை அண்ணன் தங்கை உறவுக்கான அடையாளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற ‘வீரபாண்டி கோட்டையிலே’, ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே’, ‘கண்ணாளனே’, ’திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற ‘வீரபாண்டி கோட்டையிலே’ உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல்களாக மாறின. 'மின்சார கனவு' படத்தில் 'மானா மதுர மாமரக் கிளையிலே' பாடலுக்காகவும் 'ஆட்டோகிராப்' படத்தில் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காகவும் தேசிய விருதை வென்றார் சித்ரா. ஆறு தேசிய விருதுகளில் மூன்று விருதுகள் தமிழ்ப் பாடலுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.
2011ஆம் தனது மகள் இறந்த துக்கத்துக்குப் பிறகு பெரிய அளவில் சித்ரா பாடல்கள் பாடாமல் இருந்துவந்தார். பிறகு 2015-ஆம் ஆண்டு ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ரஹ்மான் இசையில் சித்ரா பாடிய ‘மலர்கள் கேட்டேன்’ பாடல் வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்த ஆண்டு ‘சேதுபதி’ படத்தில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் சித்ரா பாடிய ‘கொஞ்சி பேசிட வேணாம்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர்ஹிட் ஆனது.
கடந்த ஆண்டு வெளியான ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ’ பாடலையும், ‘பொன்னியின் செல்வனில்’ இடம்பெற்ற ‘வீர ராஜ வீரா’ பாடலையும் சித்ரா பாடியிருந்தார்.
கடந்த 4 தசாப்தங்களாக தனது தனித்துவமான குரல்வளத்தால் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சித்ராவின் புகழுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சிக்கலான பாடல்களையும் மிக எளிதாக உள்வாங்கி அதனை தனக்கே உரிய நுணுக்கமான ஆலாபனைகளுடன் பாடுவதே ஆகும். இதன் காரணமாகவே சித்ராவின் குரல் தலைமுறை கடந்து ரசிகர்களின் இதயங்களில் ஒரு அழிக்கமுடியாத அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago