இசையமைப்பில் இருந்து விலகியிருப்பது ஏன்? - விஜய் ஆண்டனி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனிக்கு கொஞ்சம் கேப் விட்டிருக்கிறேன். என்னுடைய கரியரை முடிப்பதற்கு முன்பு 20 மியூசிக் டைரக்டர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று விஜய் ஆண்டனி பேசியுள்ளார்.

இயக்குநர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கொலை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “பல வருடங்களுக்குப் பிறகு பாலாஜி குமார் தமிழில் படம் இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். படம் நன்றாகவே வந்திருக்கிறது. கதை சொல்லும்போது முதலில் மூன்று கதாநாயகிகள் என சொன்னார்கள்.

பிறகு இரண்டானது. அதிலும் மீனாட்சி இன்னொருவருக்கு ஜோடி. ரித்திகா எனக்கு தங்கச்சி போல. எனக்கு ஒரே ஒரு மனைவி என்று சொன்னார்கள். அந்த கதாபாத்திரமும் நம்மிடம் எரிந்து விழும். இப்படி ஒவ்வொரு படத்திலும் எனக்கு பெரிதாக ரொமான்ஸ் கிடைக்காமல் செய்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். ஆனால், படம் ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது.

மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனிக்கு கொஞ்சம் கேப் விட்டிருக்கிறேன். என்னுடைய கரியரை முடிப்பதற்கு முன்பு 20 மியூசிக் டைரக்டர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதனால் தான் இசையமைப்பதிலிருந்து விலகியிருக்கிறேன். இயக்குநர்கள் முன்பு களிமண்ணாக சென்று நிற்பேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை செய்வேன். மற்றபடி முன்கூட்டியே தயாராகி படப்பிடிப்புக்கு செல்வதில்லை” என்றார்.

மேலும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்யா குறித்து பேசுகையில், “நான் இசையமைப்பாளராக ‘சுக்ரன்’ படத்தில் அறிமுகமானதற்கு முக்கிய காரணம் ஆர்யா தான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை பாருங்கள். வாய்ப்பு இருக்கிறது என கூறினார். அதனை நான் மறக்க மாட்டேன். நன்றி ஆர்யா” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE