திரை விமர்சனம்: பாபா பிளாக் ஷீப்

By செய்திப்பிரிவு

இருபாலர் பயிலும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2 படிக்கும் அயாஸும் (அப்துல் அயாஸ்) என்.பியும் (நரேந்திர பிரசாத்) ஆளுக்கு 4 சக மாணவர்களைச் சேர்த்துகொண்டு எதிரும் புதிருமாக அடிக்கடி முட்டிக்கொள்கிறார்கள். இவர்களின் பொதுவான தோழியாக வலம் வருகிறாள் மாணவி நிலா (அம்மு அபிராமி). ஒருநாள், தற்கொலை குறிப்பு அடங்கிய ஒரு மாணவனின் கடிதம் இவர்கள் கையில் கிடைக்கிறது. அதை எழுதிய மாணவன்/ மாணவி பெயரைக் குறிப்பிடாமல், தான் தற்கொலை செய்துகொள்ளப்போகும் தேதியை மட்டும் குறிப்பிட்டுள்ளார். பதற்றமாகும் மூவரும் அதை எப்படியாவது தடுத்து நிறுத்த, அவர் யார் எனத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? அந்த மாணவன்/ மாணவியைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய பின்னணி என்ன என்பது கதை.

முதல் பாதிப் படம் முழுவதும் பள்ளி மாணவர்களின் சேட்டைகளைச் சித்தரிப்பதிலேயே ஆர்வம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜ்மோகன். அவற்றில் பல காட்சிகள் கூறியது கூறலாக இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன் யுக மாணவர்களின் நக்கல், நையாண்டி, எள்ளல் அடங்கிய உரையாடல் வழியாக ரசிக்கும்படித் தந்திருக்கிறார். ஆர்.ஜே.விக்னேஷை வைத்து எழுதப்பட்டிருக்கும் பள்ளி வளாக நகைச்சுவைகள் எடுபட்டுள்ளன. ஜி.பி.முத்து பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வரும் அந்த ஒரு காட்சி நச்!

இரண்டாம் பாதியில் அபிராமி வரும் காட்சிகளும் அவர், இந்த மூன்று மாணவர்களையும் பார்த்துக் கேட்கும் கேள்வியும் இன்றைய மாணவர்களின் மனசாட்சியை உலுக்கும். “ஸ்னாப்ஷாட்டு, ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம்னு எப்பப் பார்த்தாலும் எதையாவது பார்த்துக்கிட்டே இருக்கீங்களே.. உங்க உயிரோட அருமையை உங்களுக்கு அதெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா?” என்று கேட்டுக் குமுறுகிறார் ஓர் ஆசிரியர். இப்படி பல முக்கியமான காட்சிகள் உரையாடலை நம்பி நகர்வது, தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது.

பள்ளி மாணவர்களாகச் சீருடை அணிந்து நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்களுக்குரிய முதிர்ச்சியான தோற்றத்தில் இருப்பது உறுத்தல். அதை ஓரளவுக்கு ஈடுசெய்து, பள்ளி வாழ்க்கை என்கிற உணர்வைத் தருகின்றன சந்தோஷ் தயாநிதியின் பாடல்களும் பின்னணி இசையும். பாடல் காட்சிகளைப் பெரும் கொண்டாட்டமாகப் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் சீனிவாசன், வகுப்பறை, வகுப்பறைக்கு வெளியே, நூலகம், ஆய்வகம், அறிவியல் கண்காட்சி என கதைக்கான படமாக்கத்தில் ஈர்த்துவிடுகிறார்.

அறிமுக நடிகர்கள், அம்மு அபிராமி, ‘விருமாண்டி’ அபிராமி, போஸ் வெங்கட் ஆகியோரிடம் கதாபாத்திரங்களுக்கான நடிப்பை வாங்குவதில் வெற்றிபெற்றிருக்கும் இயக்குநர், திறமையான நடிகரான வினோதினி வைத்தியநாதனை வீணடித்திருக்கிறார். அதேபோல் முதன்மைக் கதாபாத்திரங்களைத் தட்டையாகச் சித்தரித்திருப்பதும் பலவீனம்.

பல்வேறு காரணங்களுக்காக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது முக்கிய பிரச்சினையாக இருந்துவரும் நிலையில், அதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு யாருக்கெல்லாம் இருக்கிறது, அப்பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதை போதனையாகச் சொல்கிறது படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்