“தமிழகம் என்னை தத்தெடுத்துள்ளது” - ‘எல்ஜிஎம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தோனி பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. தமிழகம் என்னை தத்தெடுத்துள்ளது” என கிரிக்கெட்டர் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தோனி, “நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இது மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. நான் என் மகளோடு அமர்ந்து இப்படத்தைப் பார்த்தேன். அவள் என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டாள். அவளுக்கும் படம் பிடித்திருக்கிறது. இது ஒரு ஜாலியான திரைப்படம். மொத்தத்தில் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எனக்கு என் தயாரிப்பு அணியை பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன். அவர்கள் இந்த தயாரிப்புப் பணியை கையாண்ட முறையைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. என் மனைவி என்னிடம் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்ன போது, நான் அவளிடம் சொன்னது ஒன்று தான். படத் தயாரிப்பு என்பது நீ நினைப்பது போல் வீட்டு சுவருக்கு வெள்ளையடிக்கின்ற விசயம் இல்லை. நீ முதலில் ஒரு கலர் அடிப்பாய், பின்னர் அது நன்றாக இல்லை என்று வேறு கலர் அடிப்பாய். பின்னர் தான் தோன்றும் முதல் கலரே இதைவிட நன்றாக இருந்தது என்று, பின்னர் நீ மீண்டும் முதல் கலரையே அந்த சுவற்றுக்கு அடிப்பாய். படத் தயாரிப்புப் பணியில் அப்படி செய்ய முடியாது.

கதை என்ன, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை நீயே முடிவு செய். இதை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பின்னர் எதைப் பற்றியும் யோசிக்காதே. அந்த வேலையை தொடங்கிவிடு. மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னேன். படக்குழுவினர் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பதற்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம்.

நான் என் குழுவினரிடம் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். அது உணவு. நடிகர்களுக்கான உணவோ அல்லது மொத்த படக்குழுவினருக்கான உணவோ, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்ந்த தரமான உணவாக இருக்க வேண்டும் என்பது தான். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் எதிர்பார்ப்பது நல்ல தரமான உணவு மட்டும் தான். சாக்‌ஷி இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். அதன்பின், இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தோம்.

எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. என்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில் தான். நான் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். நினைத்துப் பார்த்து சந்தோஷப்படும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் அரவணைப்பும் நம்பவே முடியாத ஒன்று. மேலும், தமிழ்நாடு என்னை தத்தெடுத்துள்ளது. இந்த ஆண்டு நாங்கள் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு பின்னர் சாம்பியன் ஆனது மறக்க முடியாத தருணம்.

நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது. இதெல்லாம் தான் இப்படத்தை தமிழில் தயாரிக்க காரணம். இப்படம் வெகு சீக்கிரத்தில் வெளியாக இருக்கிறது. மிகவும் ஜாலியான திரைப்படமாக இது இருக்கும். மூன்று நபர்களுக்கு இடையேயான சமன்பாடு தான் இத்திரைப்படம். அம்மா மற்றும் மனைவிக்கு நடுவில் சாண்ட்விச் போல் மாட்டிக் கொண்டவர் தான் மகன். இதைத்தான் இப்படம் கலகலப்பாக பேசுகிறது” என்றார்.

சாக்‌ஷி தோனி பேசுகையில், “இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த பல பேரின் வாழ்க்கையில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கிறது. அப்பொழுது தான் தோன்றியது ஏன் இதை ஒரு படமாக எடுக்கக்கூடாது என்று. இப்படித் தான் இப்படம் உருவானது.

இதனை தமிழில் எடுப்பதற்கு மிக முக்கியக் காரணம் என் கணவர் தோனி தான். நாங்கள் எல்லோருமே தமிழில் படத் தயாரிப்பு தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தோம். ஏனென்றால் முதல்முறையாக படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு மிகப்பெரிய சப்போர்ட் வேண்டும். இது போன்ற ஒரு சிறப்பான துவக்கத்திற்கு சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்