“தோல்விகளுக்கு நான் மட்டுமே பொறுப்பு... வெற்றி கிட்டுவது படக்குழுவால்...” -  சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

சென்னை: “மிஷ்கின் அளவுக்கு என்னை யாரும் தமிழ் சினிமாவில் கொஞ்சியிருப்பார்களா என தெரியவில்லை. அவ்வளவு அன்பை கொடுத்திருக்கிறார்” என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “எப்போதும் படத்தின் ரிலீஸ் குறித்து பதற்றம் இருக்கும். இப்போது படத்தை உங்களுக்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வம் தான் மேலொங்கியுள்ளது.

இயக்குநர் மடோன் அஸ்வின் படங்களில் சமூக பார்வையும், அக்கறையும் இருக்கும். அதை ஜனரஞ்சகமாக அனைவரும் விரும்பும் வகையில் கொடுப்பார். அவரின் சமூக அக்கறை இந்தப் படத்திலும் உண்டு. பார்வையாளர்களிடம் கருத்து சொல்லும் எந்த வசனமும் படத்தில் இல்லை. ஆனால், படம் பார்த்து முடிக்கும்போது அந்தக் கருத்து மக்களிடம் சென்று சேர்ந்திருக்கும். அதை லாவகமாக கையாள்கிறார் மடோன். படப்பிடிப்பு தளத்தில் ஸ்ட்ரிக்டாக இருப்பார். ஆனால் யாரையும் திட்டாமல் வேலை வாங்குவார். அவர் ஒரு ஹெட்மாஸ்டர் என்று சொல்லலாம்.

மிஷ்கின் அளவுக்கு என்னை யாரும் தமிழ் சினிமாவில் கொஞ்சியிருப்பார்களா என தெரியவில்லை. அவ்வளவு அன்பை கொடுத்திருக்கிறார். அவரின் படங்கள் எப்போதும் என்னுடைய ஃபேவரைட். அவர் கறாரான ஆள் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் மிகவும் ஸ்வீட். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார். படம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

தொடர்ந்து, “ரஜினியின் டைட்டிலை வைத்திருப்பது பெருமையாக உள்ளது. அதுக்கு நியாயம் சேர்த்திருக்க போகிறோமா என்கின்ற பொறுப்புணர்ச்சி அதிகமாக இருந்தது. போன படம் சறுக்கிவிட்டது. பொதுவாக தோல்விகளுக்கு மட்டும் நான் பொறுப்பேற்றுகொள்வேன். வெற்றி என்பது மொத்த குழுவின் உழைப்பால் கிடைப்பது” என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE