இன்ஃபினிட்டி Review: நட்டியின் துப்பறியும் த்ரில்லர் ஈர்த்ததா, வியர்த்ததா?

By சல்மான்

தொடர் கொலைகள், அவற்றை நூல் பிடித்து துப்பறியும் அதிகாரி என்ற இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லருக்கான டெம்ப்ளேட்டுடன் வெளியாகியிருக்கும் ‘இன்ஃபினிட்டி’ திரைப்படம் ரசிகர்களை ஈர்த்ததா என்று பார்க்கலாம்.

நகரத்தில் ஓர் இளம்பெண், ஒரு எழுத்தாளர், ஒரு காவல் அதிகாரி என அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். பார் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் கொல்லப்படுகிறார். இந்தத் தொடர் கொலை வழக்குகள் சிபிஐ அதிகாரியான எவ்வி இளவளவனிடம் (நட்டி நட்ராஜ்) ஒப்படைக்கப்படுகின்றன. சில கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இந்த மூன்று கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்கிறார் நாயகன். இடையில் நாயகனை கொல்லவும் முயற்சிகள் நடக்கின்றன. மூன்று கொலைகளுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? கொலையாளியை நாயகன் கண்டுபிடித்தாரா? - இதுதான் ‘இன்ஃபினிட்டி’ படத்தின் கதை.

கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ஒரு நேர்த்தியான துப்பறியும் த்ரில்லர் படத்துக்கான கச்சிதமான களத்துடன் கவனம் ஈர்த்தது. ஆனால், ட்ரெய்லரை நம்பி படத்தை பார்த்தால் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலைகள், அதனை விசாரிக்க வரும் தில்லான சிபிஐ அதிகாரி, அவர் மீதான கொலை முயற்சி என ஆரம்ப சில நிமிடங்கள் நிமிர்ந்து உட்கார வைக்கும் திரைக்கதை, அடுத்தடுத்த காட்சிகளில் திக்கு தெரியாமல் சென்று நம்மை திக்குமுக்காடச் செய்து ஏசியிலும் வியர்க்க வைக்கின்றன. மேக்கிங்கிலும் சரி, காட்சியமைப்புகளிலும் சரி, படம் முழுவதும் ஒரு சிறிய மெனக்கெடல் கூட தென்படவில்லை.

படத்தில் லாஜிக்கோ, சுவாரஸ்யமோ ஒரு காட்சியில் கூட மருந்துக்கும் இல்லை. ஒரு காட்சியில் நட்டியும் அவரது உதவியாளரும் மருத்துவமனை ஒன்றின் அறையில் மருத்துவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே சுவர்தான் இருக்கிறது. ஜன்னல் கிடையாது. ஆனால், எங்கிருந்தோ ஸ்னைப்பர் துப்பாக்கியின் மூலம் நாயகனை குறிவைத்து சுடுகிறார் மர்ம நபர் ஒருவர். அந்த மர்ம நபரை கைக்கு எட்டும் தூரத்தில் நாயகன் பைக்கில் துரத்திக் கொண்டு போகும்போது, மர்ம நபர் ஒரு சிறியை பையை நாயகனிடம் வீச, அதைப் பிடித்து விட்டு அப்படியே நின்று விடுகிறார் நாயகன். இன்னும் கொஞ்சம் ஆக்சலேரட்டரை முறுக்கியிருந்தார் குற்றவாளியையே பிடித்திருக்கலாம். இப்படியான காட்சிகள் தான் படம் முழுக்க வருகின்றன.

இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்தால் போதாது. காவல் துறை எப்படி இயங்குகிறது, சிபிஐ அதிகாரிகள் எப்படி செயல்படுகின்றனர் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

படத்தின் ஒரே ஆறுதல் நட்டி நட்ராஜ் மட்டுமே. துடிப்பான சிபிஐ அதிகாரியான குறை சொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார். மற்றபடி படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் முதல் துணைக் கதாபாத்திரங்கள் வரை அனைவரிடமும் அமெச்சூர்த்தனமான நடிப்பே வெளிப்படுகிறது. பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை ஓகே ரகம். பிரதீப் குமார் குரலில் ’உயிர் துறந்து’ பாடல் ஈர்க்கிறது.

இளம்பெண் படுகொலைக்கு சொல்லப்படும் காரணம் படு அபத்தம். கதைக்கு சம்பந்தமே இல்லாமல் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காட்சிகள் அவை. தனது உதவியாளருடன் சென்று நட்டி விசாரிக்கும் காட்சிகள் கொட்டாவி வரவைக்கின்றன. கான்ஸ்டபிளாக வரும் முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் எரிச்சலூட்டுகிறார்.

எல்லாம் முடிந்ததும் தன் முன்னால் மைக்கை நீட்டும் பத்திரிகையாளர்களிடம் சம்பந்தமே இன்றி தனி மனித ஒழுக்கம் குறித்தெல்லாம் கிளாஸ் எடுக்கிறார் நட்டி. இதையெல்லாம் விட மணிமகுடமாக ரோலக்ஸ் பாணியில் க்ளைமாக்ஸில் எங்கிருந்தோ புதிதாக ’காட்வின்’ என்ற ஒரு வில்லனை இறக்கியதெல்லாம் கொடுமையின் உச்சம். படத்தின் இறுதியில் ‘இனிஃபினிட்டி: சாப்டர் 2’ என்று போட்டு முடிக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது வியர்த்துக் கொட்டிய நமக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான்: “இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE