மாமன்னன்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் காசிபுரம் என்னும் தனித் தொகுதி எம்.எல்.ஏ மாமன்னன் (வடிவேல்). அவர் மகன் அதிவீரன் (உதயநிதி ) தற்காப்புக் கலை பயிற்சிப்பள்ளி நடத்துகிறார். மாமன்னன் சார்ந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்னவேலு (ஃபஹத்ஃபாசில்), ஆதிக்க சாதி அதிகார உணர்வுடன் வலம்வருகிறார். அதிவீரனின் கல்லூரித் தோழி லீலா (கீர்த்தி சுரேஷ்), நண்பர்களுடன் இணைந்துஅதிவீரன் இடத்தில் இலவசக் கல்வி வகுப்புகளை நடத்துகிறார். கோச்சிங் சென்டர் நடத்தும் ரத்னவேலுவின் அண்ணன் (சுனில் ரெட்டி), லீலாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட, இரு தரப்புக்குமான மோதல், வன்முறை வடிவம் எடுக்கிறது.

மாமன்னனையும் அதிவீரனையும் சமரசம் பேச அழைக்கிறார் ரத்னவேலு . அங்கே ரத்னவேலுவுக்கும் அதிவீரனுக்கும் வெடிக்கும் மோதல் உட்கட்சி பிரச்சினையாக மாறுகிறது. இதனால் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் சேரும் ரத்னவேலு, தேர்தலில் மாமன்னனை வீழ்த்த முடிவெடுக்கிறார். அதை மீறி மாமன்னன் வென்றாரா? ரத்னவேலு - அதிவீரன் மோதல் என்ன ஆனது? எனபது மீதிக் கதை.

சமூக நீதியின் பெயரால் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குள் நிலவும் சாதி ஏற்றதாழ்வுகளையும் வாக்கு வங்கி அரசியல் சமரசங்களையும் தோலுரித்துக் காண்பித்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஒடுக்குமுறைக்கு உள்ளாவோரும் சில நேரம் பதில் தாக்குதலில் இறங்க வேண்டியிருப்பதைப் பதிவு செய்திருந்தாலும் படத்தில் வன்முறை பெருமைப்படுத்தப்படவில்லை.

அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிதானமான அணுகுமுறையுடன் ஜனநாயக வழியில்பயணிப்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. அதோடு ஆதிக்க சமூகத்திலும் சமத்துவ சிந்தனையுடன் பலர் இருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

முதல் பாதியில், கோயில் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் கற்களால் அடித்துக் கொல்லப்படும் காட்சி பதைபதைப்பைத் தருகிறது. அதை எதிர்த்து மாமன்னன் வெகுண்டெழுவதும் அரசியல் கணக்குகளைக் காரணம் காட்டி, சொந்தக் கட்சிக்காரர்களால் அடக்கிவைக்கப்படுவதும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன. ரத்னவேலு வீட்டில் நிகழும் இடைவேளைக் காட்சி ஒரு மாஸ் ஹீரோ படத்துக்கான உச்சங்களுடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உணர்வெழுச்சித் தருணங்களை உள்ளடக்கியது.

ஆதிக்கவாதியாக வலம் வரும் சில அரசியல்வாதிகள் சுயநலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் பிறர்காலில் விழக் கூட தயங்காதவர் என்பதைச் சொல்லும் இரண்டாம் பாதிக் காட்சியும் முக்கியமானது. இறுதிக் காட்சியில் சட்டப்பேரவையில் மாமன்னன் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும்திருக்குறளைச் சொல்லும்போது நெகிழ்ச்சி.

இதுபோன்ற சில தருணங்கள் ரசிக்க வைத்தாலும் ஒட்டுமொத்த திரைக்கதை, பலவீனமாக உள்ளது. பல காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. தேர்தல் பிரச்சாரம் தொடர்பான காட்சிகள் பல திரைப்படங்களில் பார்த்து சலித்தவை. இதனால் பதட்டத்தைத் தர வேண்டிய ரத்னவேலுகதாபாத்திரம், ஒரு கட்டத்துக்கு மேல் பரிதாபத்துக்குரியதாகிவிடுகிறது.

அதிவீரன் பேசும்பல அரசியல் வசனங்கள் முக்கியமானவை என்றாலும் அவற்றை அனைத்துப் பார்வையாளர்களும் உள்வாங்கும் அளவுக்கு அதிவீரன் கதாபாத்திரத்தின் பின்னணி வலுவாகநிறுவப்படவில்லை. திருப்பி அடிக்கத் துடிக்கும் அதிவீரனுக்கும் பொறுமையைக் கடைபிடிக்கும் மாமன்னனுக்கும் இடையிலான முரண்களையும் அவற்றைத் தாண்டிய பிணைப்பையும் இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

அப்பாவின் உரிமைக்காக ஆவேசம் கொள்ளும் மகனாக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.படத்தின் தலைப்புக்குரிய நாயகனான வடிவேலு நடிப்பில் முற்றிலும் வேறோரு பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அரசியல் சமரசத்துக்கு அடிபணிந்து தனியாகச் சென்று அழும் காட்சியில் பார்வையாளர்களை உறைந்துபோக வைக்கிறார். ஃபஹத் ஃபாசில் வழக்கம்போல் கதாபாத்திரமாகவே உருமாறியிருக்கிறார். லால், கீதா கைலாசம், கீர்த்தி சுரேஷ் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளைக் கச்சிதமாகக் கடத்தினாலும் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, கதையையும் கதைக் களத்தையும் உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது.

திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் ஜனநாயக வழியில் அர்ப்பணிப்புடன் போரிட்டால் சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுபட்டு மேம்பட முடியும் என்னும் நம்பிக்கையை விதைத்ததற்காக இந்த ‘மாமன்ன’னை வரவேற்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE