தலைநகரம் 2 Review: ‘ரைட்’டாக கைகொடுத்ததா சுந்தர்.சியின் கம்பேக்? 

By சல்மான்

வடிவேலுவின் நாய் சேகர் காமெடி, ஹீரோவாக சுந்தர்.சியின் அறிமுகப் படம் என்ற அடையாளங்களைக் கொண்ட ‘தலைநகரம்’ படத்தின் ‘ரைட்’ கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி வெளியாகியிருக்கும் படம் ‘தலைநகரம் 2’

மூன்றாக பிரிக்கப்பட்ட சென்னை மாநகரத்தில் மாறன், நஞ்சுண்டா, வம்சி என்ற மூன்று ரவுடிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மூவருக்கும் இடையே யார் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது என்ற போட்டி நிலவுகிறது. ரிட்டயர்ட் ரவுடியாக தற்போது அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ரைட் (சுந்தர்.சி’) அப்துல் மாலிக் (தம்பி ராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரவுடிகள் மூவருக்கும் ரைட்டுடன் தனித்தனியாக பிரச்சினை வருகிறது. மூவருமே அவரைக் தீர்த்துக் கட்ட திட்டமிட்டு வருகின்றனர். அவர்களிடம் ரைட் தப்பித்தாரா? என்பதே ‘தலைநகரம் 2’ படத்தின் திரைக்கதை.

2006-ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவரை இயக்குநராக வலம்வந்து கொண்டிருந்த சுந்தர்.சி இப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ரைட் என்ற ரவுடி கதாபாத்திரத்தை வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படம் தொடங்கியதுமே வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என மூன்று பகுதிகளை ஆட்டுவிக்கும் மூன்று ரவுடிகளை அறிமுகம் செய்கிறார்கள். இந்த அறிமுகமே சுமார் அரை மணி நேரம் ஓடுகிறது. ஒவ்வொரு ரவுடிக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக், ஃப்ளாஷ்பேக்கில் ஒரு ஃப்ளாஷ்பேக் என காட்சிகள் செல்கின்றன. அதன் பிறகு ரவுடியின் வயதான ஆள் ஒருவர் ‘அவன் குறுக்க போய்டாதீங்க சார்’ என்கிற பாணியில் சுந்தர்.சி-க்கு மிகப்பெரிய பில்டப் கொடுக்கிறார். ‘முடிந்தால் அவனுடைய நாய்குட்டியை தூக்குங்கள்’ என்று அந்த பெரியவர் சவால் விடவும், அதனைக் கேட்டு சுந்தர்.சியின் நாய்க்குட்டியை ரவுடியின் ஆட்கள் தூக்கிவந்து விடுகின்றனர். நாய்க்குட்டி தேடி வரும் ‘ரைட்’ சுந்தர்.சி வெறும் 17 நொடிகளில் அனைவரையும் அடித்துப் போட்டுவிட்டு நாயை தூக்கிச் செல்கிறார். (‘ஜான் விக்’ ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல).

ஆக்‌ஷன் படத்தின் திரைக்கதையின் பலமே வலுவான வில்லன்தான். ஆனால், இங்கே ஒன்றுக்கு மூன்று வில்லன்கள் இருந்தும் திரைக்கதை திக்கு தெரியாமல் திண்டாடுகிறது. வில்லன்களுக்கும் நாயகனுக்கும் இடையே உருவாகும் பிரச்சினைகளை எளிமையாக சொல்லாமல் வளவள என்ற குழப்பியடித்திருக்கிறார் இயக்குநர். நாயகனுக்கு சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் பில்டப்புக்கு ஏற்ப அவரது பராக்கிரமத்தை பறைசாற்றும் காட்சிகள் ஒன்று கூட படத்தில் இல்லை. அவர் நினைத்ததெல்லாம் சுலபமாக நடக்கிறது. படத்தில் போலீஸே இல்லாத சென்னை என்ற ஒரு நகரத்தை வேறு காட்டுகிறார்கள். மருந்துக்கு கூட போலீஸ் எந்தக் குற்றத்தையும் தடுக்க வருவதில்லை.

தம்பி ராமையாவை ஒரு ஹோட்டல் ரூமில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருக்கும்போது, அந்த இடத்தை போலீஸ் உதவியுடன் ட்ராக் செய்து, நேரில் சென்று அதிகாரிகளிடம் பஞ்ச் டயலாக் பேசி சவால் எல்லாம் விடுகிறார். பிரபல நடிகையான நாயகிக்கு (பாலக் லால்வானி) நாயகன் மீது காதல் வரும் காட்சியெல்லாம் படு அபத்தம். அதிலும் க்ளைமாக்ஸில் மூன்றாம் பாகத்துக்கான குறிப்போடு படத்தை முடித்திருப்பதெல்லாம் அசாத்திய துணிச்சல்.

சுந்தர்.சி வழக்கம்போல தனக்கு எதுவருமோ அதை குறையின்றி செய்திருக்கிறார். தம்பி ராமையாவும், அவரது மகளாக வரும் ஆயிராவும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். பாலக் லால்வானி, 'பாகுபலி' பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன் ராஜ் ஆகியோரின் நடிப்பை பற்றி குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை.

‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய VZ துரை, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பாணியில் ஒரு படத்தை எடுக்க விரும்பியுள்ளார். ஆனால், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறை காட்சிகளில் காட்டிய நுணுக்கங்களை கொஞ்சம் திரைக்கதையிலும் காட்டியிருந்தால் ‘தலைநகரம் 2’ தப்பியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE