கல்வி முதல் கார்ப்ரேட் வரை - விஜய்யின் திரைவெளி அரசியலும்.. நிஜ அரசியலும்!

By கலிலுல்லா

‘நானும் நீயும் முயன்றால் சுத்தமாகும் நம்முடைய நாடு, பூனைக்கொரு மணியைக் கட்டிப்பார்க்க நம்மைவிட்டால் யாரு... புதுபாதை போட்டு வைப்போம், பொய்மைக்கு வேட்டு வைப்போம்’ என ‘சுறா’ படத்தின் ‘வெற்றிக்கொடி ஏத்து’ பாடலில் அரசியல் ஹின்ட் கொடுத்திருப்பார் நடிகர் விஜய். அப்போதைய காலகட்டத்தில் ‘அண்ண ஏதோ சொல்ல வராரு’ என்று சில ரசிகர்கள் புரிந்துகொண்டாலும் பலரும் அதனை வெறும் ஒரு இன்ட்ரோ பாடல் எனக் கருத, ‘இன்னுமா புரியல’ என்று 2010-ம் ஆண்டுக்குப்பிறகு தனது படங்களில் நேரடியாக அரசியலை பேச ஆரம்பித்தார்.

குறிப்பாக திரையுலகிலிருந்து வந்து அரசியலில் வென்ற ‘எம்ஜிஆர்’-ஐ தன்னுடைய படங்களில் ரெஃபரன்ஸாக பயன்படுத்தியிருப்பார். எம்ஜிஆரின் ‘வேட்டைக்காரன்’ டைட்டிலாகட்டும், ‘சுறா’ படத்தில் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவராக நடித்தது, ‘வேலாயுதம்’ படத்தில் ‘ரத்தத்தின் ரத்தமே இனிய உடன் பிறப்பே’ என ஒரே வரியில் எம்ஜிஆர், கருணாநிதி இருவரையும் கனெக்ட் செய்திருப்பார். சொல்லப்போனால் ‘வசீகரா’ படத்தில் கூட தன்னை ஒரு எம்ஜிஆர் ரசிகராகவே காட்டியிருப்பார்.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு தன் படங்களின் மூலம் தீவிர அரசியலை முன்னெடுத்த விஜய்க்கு தோதாக அமைந்தது ‘தலைவா’. ‘பிறர் துன்பம் தான் துன்பம் போல எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்’ என திரையில் பாடல் ஓடிகொண்டிருக்கும்போதே, ‘வா தலைவா’ என கர்ஜிக்க தொடங்கினர் ரசிகர்கள். கூடுதலாக படத்தின் டைட்டிலுடன் இடம்பெற்றிருந்த ‘டைம் டு லீட்’ என்ற டேக் லைன், பட போஸ்டர்களில் தலைமைச் செயலகத்தை வைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. இதன் காரணமாக பட வெளியீட்டில் பல சிக்கல்களை சந்தித்தாலும் கூட அடுத்தடுத்த படங்களில் அரசியல் பேசத்தான் செய்தார். ‘தலைவா’ படத்தில் சத்யராஜ் ‘அண்ணா’வாக சித்தரிக்கப்பட்டிருப்பார். அண்ணா வழியில் விஜய் என அந்த கதாபாத்திரம் அமைந்திருக்கும். 2ஜி ஊழல் வழக்கு குறித்து ‘கத்தி’ படத்தில் வெளிப்படையாக பேசியிருந்தவர், ‘சர்கார்’ படத்தில் திராவிட கட்சிகளின் இலவசங்கள் குறித்து விமர்சித்திருப்பார்.

‘கத்தி’ படத்தில் கார்ப்பரேட் நிறுவன அரசியல், ‘பைரவா’ படத்தில் கல்வி நிறுவனங்களின் அரசியல், ‘மெர்சல்’ படத்தில் தனியார் மருத்துவமனை முறைகேடுகள் என கல்வி,மருத்துவம், கார்ப்பரேட் என பேசிவந்தவர் அதன் நீட்சியாக ‘சர்கார்’ படத்தில் ஒருவிரல் புரட்சியை முன்னெடுத்தார். கல்வி, மருத்துவத்தை கார்ப்பரேட் கைகளுக்குள் செல்லாமல் தடுக்க தகுந்தவர்களுக்கு வாக்களியுங்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு என்பது அவரின் ‘கத்தி’, ‘பைரவா’, ‘மெர்சல்’ பட வரிசைகளின் வழியே புரிந்துகொள்ள முடியும்.

‘பிகில்’ படத்தில் பெண்களின் முன்னேற்றம் பேசிய விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் பெண்களின் விருப்ப ஆடைகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருப்பார். கல்வி, கார்ப்பரேட், மருத்துவம், தேர்தல், அரசு, நிர்வாகம், பெண்கள் முன்னேற்றம் என கடந்த 10 ஆண்டுகளில் தனது படங்களின் வழியே சமூக - அரசியல் பிரச்சினைகளை தொட்ட விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தி கொடுத்தது ‘பீஸ்ட்’. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்திய படத்தில் சிறுபான்மை மக்களை அணுகும் முறையில் விஜய்யின் அரசியல் தெளிவடையவில்லை. அதே தவற்றை மீண்டும் ‘வாரிசு’ படத்திலும் செய்தார். காலம் காலமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக எப்படி தமிழ் சினிமா சித்தரித்ததோ, அதேபோல ஒடுக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக சித்தரித்தது.

சமூக பிரச்சினைகளை அரசியலுடன் தனது படங்களில் பேசி வரும் விஜய்யின் அண்மையில் வெளியான ‘வாரிசு’ படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதியை குற்றவாளிகளின் கூடாரமாக காட்சிப்படுத்தியிருப்பார். மேலும் அங்கே பெண்களைக் கடத்தி விற்கும் வில்லனின் பெயர் கிறிஸ்தவ பெயராக இருப்பது முரண். அம்பேத்கரையும், பெரியாரையும் படிக்கச் சொன்ன விஜய் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களை தனது படங்களில் சித்தரிக்கப்படும் விதத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையை மேற்கண்ட படங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கள அரசியல்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்றபோது, அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார் விஜய். ரஜினியை தவிர்த்து களத்துக்கு சென்ற ஒரே நடிகர் விஜய் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டியது. அதேபோல, நீட் தேர்வின் கொடுமையால் உயிரிழந்த அனிதா வீட்டுக்குச் சென்றார் விஜய். அவரின் மக்கள் இயக்கம் சிறிதும், பெரிதுமாக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகிறது. மைய நீரோட்டத்தில் கலந்து மக்களுடன் தொடர்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விஜய்யின் நடவடிக்கைகள் கவனிக்கத்தக்கது. அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக களத்துக்கு செல்வது என்பது விஜய் மீது மக்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளது.

தலைவா பிரச்சினையை விஜய் அணுகிய முறையையும், மாஸ்டர் படத்தின்போது அவரது நீலாங்கரை வீட்டில் ரெய்டு நடந்தபோது அதை அணுகிய முறையும் அவரின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியது. மிகவும் கூலாக ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் எடுத்த செல்ஃபி அந்த ஆண்டின் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்தது. பிரச்சினைகள் அணிவகுக்கும்போது, 'எங்களத் தாண்டி விஜய தொடுங்க' என முன்னால் நிற்கிறார்கள் அவரது ரசிகர்கள். விஜய்க்கு பெரும் பலமே அவரது ரசிகர்கள்தான்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல மூத்த நடிகர்கள் அமைதிகாத்தபோதும் வெளிப்படையாக அதன் பிரச்சினைகளை பேசியவர் விஜய். அப்போது, 'இதனால் ஏற்படும் பாதிப்புகள் நோக்கத்தை விட அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்படுக்கிறது. பொதுமக்கள் சிலர் பசிக்கு சாப்பிட முடியாமல், மாத்திரை வாங்க முடியாமல், திரும்ப வீடு வந்து சேரமுடியாமல் அவதிப்பட்டனர்” எனப் பேசியிருந்தார். அதேபோல ஜிஎஸ்டி குறித்த வசனம் ஒன்றும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றிருக்கும். தனக்குக் கிடைக்கும் மேடைகளையெல்லாம் அரசியலுக்கான தளங்களாக மாற்றுகிறார். ரஜினியைப்போல, 'எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கு' எனக் கூறி நழுவாமல், 'தகுதியான இடத்தில் தகுதியானவர்களை மக்கள் அமர வைக்க வேண்டும்’ என்று பேசினார்.

இப்படியாக திரையிலும்.. நிஜத்திலும் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அரசியல் பேசி வரும் விஜய், ‘பெரியாரையும், அம்பேத்கரையும் வாசிக்க சொல்லியிருப்பது’ அவரின் முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இதையொட்டிய அவரது அடுத்தடுத்து நகர்வுகள் தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

31 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்