மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர், அருண்ராஜ். அதில் ‘இணையே’ என்ற சூப்பர்ஹிட் பாடலையும் தந்தவர், இப்போது ‘எறும்பு’, ‘பீட்ஸா 3’, ‘பைரி’ உட்பட சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். இதில் ‘எறும்பு’க்காக வெளிநாட்டு இசைக் கருவிகளைப் பயன்படுத்தி இருக்கிறார் அருண் ராஜ்.
“’எறும்பு’ உலகப் படம் மாதிரி இருக்கும். ஈரானிய, ஐரோப்பிய படம் மாதிரியான கதை கொண்ட படம். இது உலகத்துல எங்க இருந்து பார்த்தாலும் அவங்களையும் தொடர்புபடுத்துற மாதிரி இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் எடுத்திருக்கார். அதனால மியூசிக்கலாவும் நாம கேட்டிருக்காத, வித்தியாசமான, வெவ்வேறு நாடுகள்ல இருக்குற ‘இன்ஸ்ட்ரூமென்ட்’களைப் பயன்படுத்தி இசை அமைச்சிருக்கேன். அதை ‘கம்ப்யூட்டரைஸ்’ மியூசிக்கா இல்லாம, ஜப்பான், சீனா உட்பட பல்வேறு நாட்டு இசைக் கலைஞர்களை ஆன்லைன்லயே கண்டுபிடிச்சு, லைவ்வா வாசிக்க வச்சு பதிவு பண்ணியிருக்கேன். அந்த சத்தம் ரொம்ப புதுசா இருக்கும்” என்கிறார் அருண்ராஜ்.
பல இசை அமைப்பாளர்கள் பாடலுக்கு அருமையா ட்யூன் பண்ணிடறாங்க... ரீ ரெக்கார்டிங்ல தடுமாறிடறாங்களே?
பின்னணி இசை சேர்ப்புங்கறது எளிதான விஷயமில்லை. இசை அமைப்பாளரும் ஓர் இயக்குநரா பண்ண வேண்டிய வேலை அது. படத்தோட இயக்குநர் ஒரு கதை சொன்னாலும் பின்னணி இசையில, இசை அமைப்பாளர் மியூசிக்கலா கதை சொல்லணும். அதாவது விஷூவலா சொல்லாத கதையையும் மியூசிக்ல சொல்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கு. ஒரு கேரக்டர், படத்துல வெளிப்படுத்த முடியாத எமோஷனைகூட பின்னணி இசை வெளிப்படுத்தணும். அது சவாலான விஷயம்தான். அதுக்கு முதிர்ச்சி அவசியம்.
» சீரியஸ் வடிவேலு, வில்லன் ஃபஹத், சைலன்ட் உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ ட்ரெய்லர் எப்படி?
» “மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பினேன்” - அனுபவம் பகிர்ந்த நடிகர் ரோபோ சங்கர்
‘பீட்ஸா 3’ பேய் படமாச்சே... அதுல என்ன மாதிரியான இசையை அமைச்சிருக்கீங்க?
ஒவ்வொரு படத்துக்கும் புதுசான ‘சவுண்ட்’டை கொண்டு வரணும்னு நினைக்கிறவன் நான். ஸ்டூடியோவுக்குள்ள உட்கார்ந்து வேலை பார்க்கிறது ஒரு புறம் இருந்தாலும் வெளிய போய், என்ன பண்ணலாம்னு யோசிப்பேன். ‘பீட்ஸா 3’ படத்துக்கு அப்படித்தான் யோசிச்சேன். அப்பதான் 200 வருஷத்துக்கு முந்தைய பியானோவை ஒரு இடத்துல கண்டுபிடிச்சேன். என் டீமை கூட்டிட்டுப் போயி, அதை இசைச்சுப் பார்த்தா, வித்தியாசமான ‘சவுண்ட்’ கிடைச்சது. அதை இந்தப் படத்தோட பின்னணி இசையில பயன்படுத்தி இருக்கேன். இதுவரை யாரும் கேட்டிருக்காத சத்தமா அது இருக்கும். அந்த பியானோவை வச்சு இசை அமைச்சதை ஒரு டாக்குமென்டரியாகவே எடுத்திருக்கோம். அந்தப் படத்தோட ரிலீஸ் நேரத்துல அதை வெளியிட இருக்கோம். அதுமட்டுமில்லாம 20 பாடகர்களை ஓர் அறைக்குள்ள வச்சு, அவங்ககிட்ட இருந்து வித்தியாசமான குரல்களை வாங்கி அதை ஹாரர் எபெக்டா பயன்படுத்தி இருக்கேன். இதுவும் புதுமையா இருக்கும்.
இன்னைக்கு திரைப்படங்கள்ல பாடல்கள் குறைஞ்சுட்டு வருதே...
உண்மைதான். ஓடிடி தளங்களோட வருகைக்கு பிறகு உலக சினிமா பார்க்கும் ரசிகர்கள் மற்றும் படைப்பாளிகளோட எண்ணிக்கை அதிகரிச்சிருக்கு. அதனால சர்வதேச ஸ்டைலை இயக்குநர்கள் பின்பற்றுவதால, அந்தமாதிரியான கதைகளை யோசிக்க ஆரம்பிக்கிறாங்க. அதுக்கு அதிகமான பாடல்கள் தேவைப்படலை.
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால தனியிசை ஆல்பம் வெளியிட்டீங்களே... அதை தொடரும் எண்ணம் இருக்கா?
அதை விடலை. விடவும் முடியாது. தனியிசையை பொறுத்தவரை உலகம் முழுவதும் இருக்கிற டிரெண்ட் என்னன்னா, வீடியோவுல நீங்களும் ‘பெர்பாம்’பண்ணணும். செலினா கோமஸ் பாட்டுனா, அவங்கதான் அதுல ‘பெர்பாமர்’. அந்தமாதிரி ஸ்டலைதான் இங்க பின்பற்றணும்னு நினைக்கிறேன். அதுக்கான வேலைகளும் போயிட்டிருக்கு. கூடிய சீக்கிரமே அறிவிப்பு வரும்.
சில வருடங்களுக்கு முன்னால வரை, சினிமாவுல புதுமுக நடிகர்கள்தான் அதிகமா அறிமுகமானாங்க. இப்ப இசை அமைப்பாளர்கள்தான் அதிகமா அறிமுகமாறாங்க...
இது ஆரோக்கியமான விஷயம்தான். யாருமே நுழைய முடியாதுன்னு இருந்த இடம் இது. யாரு வேணாலும் வரலாங்கற நிலைக்கு இப்ப மாறியிருக்குன்னா அது நல்லதுதானே. நானுமே நிறைய போராடிதான் வந்திருக்கேன். என்னைப் போல பல பேர் அப்படித்தான். முதல் வாய்ப்பை போராடி பிடிச்சிடலாம். அதை எப்படி அடுத்தடுத்து தக்க வச்சிக்கிறது அப்படிங்கறதுதான் பெரிய விஷயம். அதுக்குத் திறமையும் முக்கியம்.
இசை அமைப்பாளர்கள் நடிகர்களா மாறிட்டு வர்றாங்க. உங்களுக்கும் அந்த எண்ணம் இருக்கா?
மியூசிக் ஆல்பம் பண்ணினா, அதுல கண்டிப்பா நான் நடிச்சுதான் ஆகணும். அதனால நடிப்பேன். ஆனா, சினிமாவுல நடிக்கிற எண்ணமில்லை. என் தொழில் இசையும் பாடலும்தான். அதுலதான் என் கவனம் முழுவதும் இருக்கும். அதுல நிறைய சாதிக்கணுங்கற கனவு இருக்கு. அந்த கனவை நோக்கி என் பயணம் இருக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago