பொம்மை Review: நல்ல திரை அனுபவம் தந்ததா உணர்வுபூர்வ கதைக்களம்?

By கலிலுல்லா

உயிரற்ற பொம்மையின் வழியே உயிருள்ள தன் காதலையும், அதன் வழி தெரியும் காதலியையும் ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒருவனின் கதையே ‘பொம்மை’

பொம்மைகளை தயாரித்து துணிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார் ராஜ்குமார் (எஸ்.ஜே.சூர்யா). அங்கு புதிதாக வந்த பொம்மை ஒன்று அவரின் கடந்த கால காதலியை நினைவூட்டுகிறது. ஏற்கெனவே பல்வேறு இழப்புகளால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் ராஜ்குமார் அந்த பொம்மையை தனது காதலியாக நினைத்து உருகுகிறார். ஒருநாள் அந்த பொம்மை விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட, துடித்துப்போகும் அவர், இறுதியில் அந்த பொம்மையை எங்கே எப்படி கண்டுபிடித்தார்? மனரீதியான அவரது பாதிப்புக்கு என்ன காரணம்? எல்லாவற்றையும் கடந்து உருகி மருகும் அவரது காதல் இறுதியில் என்ன ஆனது என்பதே திரைக்கதை.

தனிமையை மீட்டெடுக்க அவதரித்த ஒருவரின் இழப்பினால் ஏற்பட்ட வலியில் வாழ்பவனின் அகவெளி மனச் சிக்கல்களை ஆற்றுப்படுத்தும் உருவகமாக காட்சிப்படுத்தபட்டிருக்கும் மனித உரு கொண்ட ‘பொம்மை’ கதைக்கும் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கிறது. ‘மொழி’, ‘காற்றின் மொழி’ படங்களின் மூலம் நம்மிடம் உறவாடிய இயக்குநர் ராதாமோகன் பொம்மையைக் கொண்டு உறவாட முயன்றிருக்கிறார்.

தொலைத்த பொம்மை ஒன்றை கண்டெடுக்கும் குழந்தை, அதை எக்காரணம் கொண்டும் மீண்டும் தொலைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதைப்போல, தான் நேசித்த உயிரொன்றை வேறொரு பொருளின் வழியே காணும்போது அதையே பொக்கிஷமாக பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் நாயகனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அதகளம் செய்கிறார். பதற்றம், பயம், விரக்தி, இயலாமையை படத்தின் ஒவ்வொரு தருணங்களிலும் கூட்டிக்கொண்டே செல்லும் அவரின் அந்தப் படிநிலைகள் கவனம் பெறுகின்றன.

ஓவர் ஆக்டிங்குக்காக சிலருக்கு மட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனுமதி அளித்திருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் எஸ்.ஜே.சூர்யாவை பொருத்திக்கொள்ளலாம். சில இடங்களில் மிகை நடிப்பாக தோன்றினாலும், அது துருத்தலில்லாமல் கதையோட்டத்துக்கு கைகொடுக்கிறது. குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் வெவ்வேறு எமோஷன்களை முகத்தில் காட்டி மிரட்டியிருக்கிறார்.

பொம்மையாக ப்ரியா பவானி சங்கர் தன் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார். அசையாத முகத்திலிருந்து வழிந்தோடும் கண்ணீர், அலட்டிக்கொள்ளாத முகபாவனைகளால் தேர்ந்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். சாந்தினி தமிழரசனுக்கு சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் மிகையில்லாத நடிப்பால் தனித்து தெரிகிறார்.

கதாபாத்திரங்களைச் சேர்த்து வீண்டிக்காமல் கதை கோரும் சொற்ப கதாபாத்திரங்களின் மூலம் கதையை சொல்லியிருக்கிறார் ராதாமோகன்.

‘தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும்’ என ‘உல்லாச பறவைகள்’ படத்தில் வந்த தனது தந்தையின் பாடலை மீட்டுருவாக்கும் செய்திருக்கிறார் ‘யங் மேஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜா (டைட்டில் கார்டில் யங் மேஸ்ட்ரோ என பயன்படுத்திருக்கிறார்கள்). மொத்தப் படத்திலும் ஆங்காங்கே துண்டு துண்டாக தூவப்பட்டிருக்கும் இந்தப் பாடல் மென்மையான உணர்வை கடத்தி இளையராஜாவின் இசைக்கான தேவை இன்றைக்கும் இருப்பதை உணர்த்துகிறது.

குறிப்பாக, காதல் நினைவுகளை மீட்டெடுக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘தெய்வீக ராகம்’ உண்மையில் திகட்டாமல் காட்சிகளை அழகாக்கி ரசிக்க வைக்கிறது. படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை. ‘இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி’ பாடல் கவனம் பெறுகிறது. போலவே, ரிச்சர்ட் எம்.நாதனின் க்ளோசப்ஸ் ஈர்க்கின்றன.

படம் அழுத்தமான ஒரு காதல் கதையைக் கொண்டிருந்தாலும், காதல் காட்சிகளைத் தவிர்த்து பெரிய அளவில் சுவாரஸ்யமில்லாத திரைக்கதையால் நிறைய இடங்களில் சோர்வைத் தருகிறது. வழக்கமான ஒரு ப்ளாஷ்பேக் போர்ஷன், எளிதில் கணிக்க கூடிய க்ளைமாக்ஸ், காவல் துறையின் உப்புச் சப்பில்லாத துப்பறிதல் என காதலைத் தவிர்த்த மற்ற காட்சிகளில் கவனம் செலுத்தாதது அழுத்தம் சேர்க்கவில்லை.

இயக்குநர் ராதாமோகனின் எஸ்.ஜே.சூர்யாவின் வழி காட்சிப்படுத்திருக்கும் உலகில் ஆண்கள் அத்தனை நல்லவர்களாக இல்லை. ஓர் ஆணுக்கான அத்தனை ஆற்றுப்படுத்துதலாகவும் பெண்தான் இருக்கிறார். உதாரணமாக, எஸ்.ஜே.சூர்யாவுக்கு எல்லாமுமாக அவரது தாய் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ப்ரியாபவானி சங்கர், அவருக்கு உதவும் சாந்தினி என பெண்கள் நிறைந்திருக்கும் கதையில் ஆண்கள் குற்றம் செய்பவர்களாகவும், பெண்களை தொந்தரவு செய்பவர்களாகவுமே உள்ளனர்.

மொத்தமாக படம் ஓர் அழுத்தமான காதல் உணர்வை கட்டியெழுப்பும் காட்சிகளைக் கொண்டிருந்தபோதிலும், அதைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் கதைக்களத்தில் கவனமில்லாத்தால் பொம்மை பாதி உயிர் பெற்றிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE