மாயங்களால் மனசுக்குள் காயம் ஆற்றும் மலேசியா வாசுதேவனின் மறக்க முடியாத 10 பாடல்கள்!

By குமார் துரைக்கண்ணு

கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்ட மலேசியா வாசுதேவனின் குடும்பத்தினர் அவருடைய சிறு வயதிலேயே மலேசியாவுக்கு வேலைக்காக புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். பாடகராக வேண்டும் என்ற ஆசையில் மலேசியா வாசுதேவன் அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார். சினிமாவில் பாடுவதற்கு முன்பாக மெல்லிசை மேடை கச்சேரிகளில் சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதனின் குரலில் வந்த பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். இவரது திறமையை பார்த்து, இசையமைப்பாளர் வி.குமார் 'டெல்லி டூ மெட்ராஸ்' படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் 'பாரத விலாஸ்' திரைப்படத்தில் வரும் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலில் மேஜர் சுந்தர்ராஜனுக்கான பகுதிகளை மலேசியா வாசுதேவனை பாடச் செய்தார். இதையடுத்து ‘குமாஸ்தாவின் மகள்’ திரைப்படத்தில் வரும் 'காலம் செய்த கோலம்' பாடலை பாடினார். தொடர்ந்து பல பாடல்களை பாடியவருக்கு ‘16 வயதினிலே’ திரைப்படம் மிகப் பெரிய அறிமுகத்தையும், வரவேற்பையும் பெற்றுத் தருகிறது. அவரும் இளையராஜாவின் இசையிலும், மற்ற இசையமைப்பாளர்களிடமும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். ஆனாலும் ராஜா - மலேசியா கூட்டணியில் உருவான பாடல்களுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் குடிகொண்ட மலேசியா வாசுதேவனின் குரலில் வந்த பத்து ஆல்டைம் பேஃவரைட் பாடல்களின் வரிசை இது...

ஆழக்கடலில் தேடிய முத்து: சட்டம் என் கையில் (1978) படத்துக்காக இப்பாடல் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் படத்தில், பாடல் இடம்பெறவில்லை. மாறாக 80-களில் இலங்கை வானொலியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்த இப்பாடல், மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து போனது. மலேசியா வாசுதேவனும் ஜானகியும் சேர்ந்து பாடிய அற்புதமான தாலாட்டு பாடல் இது. அண்மையில் வந்த ஜெய்பீம் படத்தில்கூட, ஒரு காட்சியில் ரேடியோவில் இப்பாடல் வரும்.

வான்மேகங்களே வாழ்த்துங்கள்: மலேசியா வாசுதேவன் தனது ஆரம்பக் காலத்தில், தமிழ் சினிமாவின் அழியாத புகழ் கொண்ட சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் பாடல்களை பாடியவர். எனவே, அவரது குரலில் எப்போதும் ஒரு கம்பீரம் கலந்திருக்கும். அந்த கம்பீரத்தை, அவர் பாடிய காதல் பாடல்களில் இனிதே உணர முடியும். புதிய வார்ப்புகள் (1979) படத்தில் வந்த இப்பாடலை மலேசியாவுடன் இணைந்து ஜானகி பாடியிருப்பார். எப்போதும் போலவே இதுவும் நாஸ்டால்ஜியா நினைவுகளைக் கிளறி பாடல் கேட்பவர்கள் மனதில் நினைவலைகளில் நீந்த செய்யும் ஒரு பாடல்.

என்றென்றும் ஆனந்தமே: பெல்பாட்டம் பிரபலமான காலத்தில் ஹீரோக்களுக்கு மலேசியாவின் குரல்தான் மந்திரக்கோலாக இருந்தது. அப்போதைய டிரெண்டான பெல்பாட்டம் பேன்ட்டும் மலேசியா வாசுதேவன் பாடல்களும் இக்காலத்து இளைஞர்களும் இன்ஸ்டாவையும் போல இணைந்தே இருந்தது. கடல் மீன்கள் (1981) படத்தில் இப்பாடல் மலேசியா வாசுதேவன் குரலில் வந்த ஆகச் சிறந்த வெஸ்டர்ன் சோலோ பாடல். அவரது குரலுடன் பாடலில் வரும் வயலினும், பேஸ் கிடாரும் சேர்ந்து இப்பாடலை கேட்கும்போதெல்லாம் வசியம் செய்துவிடும்.

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா: மலேசியா வாசுதேவனின் குரலில் சோலோவாக வரும் பாடல்களைக் கேட்பது ஓர் உன்னதமான அனுபவம். அந்தக் குரல் நமக்கு மிகவும் பரிச்சயமான, ஒருவித பிணக்கத்தை கொண்டுவரும் தன்மையுடையது. நண்டு (1981) திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல் மலேசியாவின் எவர்கிரீன் பாடல். வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட பாடலின் பின்னணியில் வரும் மலேசியாவின் குரல், அந்த மண்ணையும் நம்மூரைப் போலவே உணர வைத்திருக்கும். இந்தப் பாடலை மகேந்திரனின் உதவி இயக்குநர் மதுக்கூர் கண்ணன் எழுதியிருப்பார். பயணங்களில் கேட்க அத்தனை சுகமாக இப்பாடல் இருக்கும்.

வெட்டி வேரு வாசம்: காமத்தின் வாசனை கற்றாழையோடு ஒப்பிடப்படுகிறது. அதேபோல, விடலைப் பருவத்தின் வாசனையை வெட்டி வேரின் வாசத்துடன் ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. அந்த வகையில், வரம்பு மீறியதுதான் என்றாலும் காதலுக்கு வயதேது, பருவமேது, காதல் யாருக்கும் யார் மீதும், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். முதல் மரியாதை (1985), திரைப்படத்தில் வரும் இந்தப் பாட்டு, வெளியான நேரத்தில் கேட்கப்பட்டது, தற்போது வரை கேட்கப்படுகிறது. இன்னும் பல ஆண்டுகள் சென்ற பிறகும் கேட்கப்படும். மலேசியா வாசுதேவன் ஜானகியின் குரலும், பாடலில் பின்வரும் அந்தப் புல்லாங்குழலும் உலகில் கடைசி காதல் உள்ளவரை நிலைத்திருக்கும்.

ஒரு கூட்டு கிளியாக: திரையில் சிவாஜி போன்ற ஆளுமைகளுக்கு பாடல்களைப் பாடுவதற்கான பொருத்தமான குரல் அமைய வேண்டும். அந்தக் குரலை பார்வையாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அது ஒத்துப்போகாது. சிவாஜிக்கு டிஎம்எஸ்தான் பாடுவார், அவரை விட்டால் ஆளே கிடையாது என்ற விதியை திருத்தி எழுதியது மலேசியா வாசுதேவனின் குரல். படிக்காதவன் (1985) திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலுக்கு எல்லா காலத்திலும் ரசிகர்கள் ஏராளம். அண்மையில்கூட அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், தமிழக அரசு பள்ளிகளுக்கான கலைத்திறன் போட்டிகளில் இந்தப் பாடலை பாடி மறைந்த மலேசியா வாசுதேவனின் நினைவுகளை உயிர்ப்பித்திருந்தார்.

நான் அப்போது பார்த்த புள்ள: சமூக ஊடகங்கள் வந்தபிறகு ஏன் டிரெண்டாகிறது, எதற்காக வைரலாகிறது எனத் தெரியாமல் சில சமயங்கள் நடக்கும். அப்படித்தான சில வாரங்களுக்கு முன் இப்பாடல் இன்ஸ்டா ரீல்ஸில் பரவியது. பகல் நிலவு (1985) திரைப்படத்தில் வரும் இப்பாடல் ஒரு சோகப் பாடல் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பாடலில் வரும் செனாய், கிட்டார், கோரஸ் என துள்ளலான பின்னணி இசையென பாடல் உற்சாகத்தை கொண்டதாக இருக்கும். பாடலுக்கான சோகத்தை மலேசியா வாசுதேவனின் குரல் கொண்டுவந்திருக்கும். "விளங்கிடாத பெண்ணோடு மனசு, வேலி போட்ட மாயம் என்ன ,கலங்கிடாத என்னோட நெனப்பு, காஞ்சி போகும் மர்மம் என்ன அன்பான நெஞ்சே , கண்ணாடி போல தூளாக்கி போட்ட புள்ள..." - இந்த வரிகளை அவர் பாடுவதை ஒவ்வொருமுறை கேட்கும்போது ப்ரியத்தின் வலியை உணரச் செய்திருக்கும்.

இளம் வயசு பொண்ண: மலேசியா வாசுதேவன் குரலில் ஒட்டியிருக்கும் மண் சார்ந்த தன்மைதான் காலங்கள் கடந்தும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்கிறது. அதுவும் கிராமத்து காதலைச் சொல்லும் பாடல்களில் அந்தக் குரலுக்கு காதலுக்கு இணையான ஒருவித உணர்வை பிரதிபலித்திருக்கும். பாண்டி நாட்டு தங்கம் (1989) படத்தில் வரும் இப்பாடலை மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து சித்ரா பாடியிருப்பார். இன்றளவும் தென் மாவட்டங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் மலேசியா வாசுதேவன் தவிர்க்க முடியாத விருந்தாளியாக வந்துவிடும் மிக முக்கியமான பாடலாக இப்பாடல் இருந்து வருகிறது. மீசோவும், ஸ்நாப் டீலும் வருவதற்கு முன்பே தமிழக இளம்பெண்கள் பலரின் மனதுக்கு வளையல் பூட்டியது மலேசியா வாசுதேவனின் குரல்தான்.

ஒன்ன பார்த்த நேரத்துல: மலேசியா வாசுதேவனின் சிறப்புகளில் ஒன்று அவரது உச்சஸ்தாயிதான். மனுசன் இட்டிக்கட்டிப் பாடினால் எட்டு ஊருக்கும் கேட்கும். அது எல்லோருக்கும் வாய்க்காத ஒன்று. ஆனால் அதுவல்ல இங்கு செய்தி, ஒரு பாடலுக்கு இந்த டெம்போ போதுமென்று இசையமைப்பாளர் சொன்னாலும் அதை உள்வாங்கி பாடுவதில்தான் அந்தப் பாடலின் ஜீவன் ஒளிந்திருக்கும். மல்லு வேட்டி மைனர் (1990) படத்தில் வரும் இந்தப் பாடல் மலேசியா வாசுதேவனுடன் சேர்ந்து உமாரமணன் பாடியிருப்பார். நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியை கொண்டுவரும் இந்த இருவரின் காம்பினேஷனில் வரும் இப்பாடல் கேட்பதற்கு அத்தனை இளமையாக இருக்கும். மலேசியா வாசுதேவன் இப்பாடலை மிதமான பிட்சில் பிரித்து மேய்ந்திருப்பார்.

குயிலு குப்பம் குயிலு குப்பம்: என்ன நினைத்து எழுதப்பட்டதோ தெரியவில்லை, அந்த வரிகள் உண்மைதான் மனசுக்குள் மாயங்களால் காயம் செய்யும் காதலைப் போன்றதே மலேசியா வாசுதேவனின் குரலும். என்னுயிர்த் தோழன் (1990) திரைப்படத்தில் வந்த இப்பாடலும் காலத்தால் கடக்க முடியாதவை. இசை ரசிகர்களின் மிக விருப்பமான மலேசியா வாசுதேவன் பாடல்களின் விருப்பப் பாடலில் தவறாது இடம்பிடித்திருக்கும். உயிர்ப்புடன் எஞ்சியிருக்கும் ஒன்றிரண்டு கிராமங்களிலும், இரவுநேர பண்பலைகளிலும் கேட்கும் இந்தப் பாடலை போன்றே மலேசியா வாசுதேவனும் அவரது பாடல்களும் நினைவுகளிலும், மனசுக்குள்ளும், ஆழக்கடலில் கண்டெடுத்த முத்தைப் போல் ஜொலித்துக் கொண்டே இருக்கும்.

இன்று - ஜூன் 15 - மலேசியா வாசுதேவன் பிறந்தநாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்