பதனம் உதற கவனம் சிதற மனசை கலைக்கும் ஜி.வி.பிரகாஷின் இசை!

By குமார் துரைக்கண்ணு

'அன்னக்கிளி', 'ரோஜா' போலத்தான் 'வெயில்' திரைப்படமும் தமிழ் சினிமாவுக்கும் இசையுலகுக்கும் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. இயக்குநர் வசந்தபாலனின் 'வெயில்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்திருந்தார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

"பானை சோற்றின் பதமறிய பருக்கை போதும்" என்பதை போல, அந்தப் படத்தின் பாடல்களும், வெற்றியும் ஜிவியை திரும்பிய பக்கமெல்லாம் கொண்டுபோய் சேர்த்திருந்தது. கரிசல் மண் பூமியில் கந்தக நெடி கலந்த காற்றெங்கும் பற்ற வைக்காமலேயே வெடித்துச் சிதறி பரவியது ஜி.வி.பிரகாஷின் இசையும் பாடல்களும்.

தொடர்ந்து வெளியான 'ஓரம்போ', 'கிரீடம்' என திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான அந்த வருடத்தில் 3 திரைப்படங்களுக்கு இசையமைத்தார் ஜிவி. இந்தப் படங்களும் படத்தின் பாடல்களும் அவருக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனிக்கத்தக்க வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதையடுத்து 2007-ல் இயக்குநர் வெற்றிமாறனுடன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 'பொல்லாதவன்'. திரையுலகில் அறிமுகமான 4-வது திரைப்படத்தில் தனது மெகா ஹிட் பிளாக்பஸ்டர் வெற்றியை சுவைத்தார் ஜி.வி.பிரகாஷ். அப்போதுவரை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, இந்தக் கூட்டணி இணையும் படங்கள் வெளியாகும்போது அந்த ஆண்டின் விருது பட்டியல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று. இந்தப் படத்தில் இருந்து உருவானதுதான் வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி.

'பொல்லாதவன்' படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டியெல்லாம் பரவி கிடக்க, பல்சர் பைக்கெல்லாம் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டன. அதன்பிறகு தமிழ்நாட்டின் எந்த வண்டியை ரிவர்ஸ் எடுத்தாலும் கேட்க நேரிடும் 'பொல்லாதவன்' மியூசிக் ஜி.வி.பிரகாஷின் முகத்தை ஒரு நிமிடம் கொண்டுவந்தது.

அதைத்தொடர்ந்து 'அங்காடித் தெரு' மீண்டும் வசந்தபாலனுடன் சேர்ந்த ஜி.வி, கண்ணாடி அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் அங்காடித் தெருக்களின் கடைகளுக்குள் கலைத்துப் போடப்பட்டிருக்கும் கனவுகளையும், காதலையும் தனது இசையால் இளைபாறச் செய்திருப்பார் ஜி.வி. அன்றாடம் கடந்து செல்லும் கடைவீதியின் வலிகளையும், வேதனைகளையும் பதிவு செய்த இப்படத்தின் பாடல்கள் ஜி.வியின் ஆகச் சிறந்த மியூசிக்கல் ஹிட்களில் ஒன்றாக அமைந்தது.

2009-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்', இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் 'மதராஸப்பட்டினம்' படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். சோழர் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பார்த்தவுடனே பிடிக்காமல் போன தமிழ் ரசிகர்களுக்கு, பின்னர் பார்க்க பார்க்க பிடித்துப்போன படமாக மாறியது. ஒரு நல்ல படத்தை உரிய நேரத்தில் கொண்டாட மறந்துபோன ரசிகர்களின் குற்ற உணர்ச்சி, இப்போதுவரை அந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தின் பாடல்களில் ரசிகர்களை மயக்கிய ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் மிரட்டியிருப்பார். சோழர் கால காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு நிறையவே மெனக்கெடல்களை அவர் கையாண்டு இசையமைத்திருப்பார்.

'மதராஸப்பட்டினம்' ஜி.விக்கு தமிழ் சினிமாவில் பெயர் வாங்கிக் கொடுத்த முக்கியமான படம். சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நடக்கும் காதலை மையமாக கொண்ட இத்திரைப்படத்தில் ஜி.வியின் மேஜிக்கலான மியூசிக்கல் ட்ரீட், கருப்பு வெள்ளைக் காலத்து காதலை நினைவுகூரச் செய்யும் ஓவியம் போல் ரசிகர்களின் மனங்களில் பதிந்து கொண்டது. இயக்குநர்கள் வெற்றிமாறன், ஏ.எல்.விஜய்யுடன் ஜி.வியின் காம்போ தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் இணைந்து தவிர்க்க முடியாத வெற்றிப் படங்களை தந்து கொண்டேயிருந்தது. அந்த வகையில், இந்தக் கூட்டணியின் 'ஆடுகளம்', 'தெய்வத்திருமகள்' படங்கள் 2010-ல் வெளியாகின.

களம் 8ல் நடந்த சாவ சண்டையில் தன்னை எதிர்த்து நின்ற ஒன்றரை இஞ்ச் உசரமான ரத்னசாமி சேவலை ஒத்த ஆளாய் நின்னு, அடிச்ச பேட்டகாரன் பார்ட்டி கருப்போட சேவலா ஜி.வி.பிரகாஷ் தலை சிலிர்ப்பிய படம் 'ஆடுகளம்'. இசையமைப்பாளராக அறிமுகமான 4 வருடத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். இந்தப் படமும் அவரது பின்னணி இசைக்கோர்ப்புக்கு பெருந்தீனிப் போட்ட படமாக அமைந்தது. அப்படியே அந்தப் பக்கம், பேஃமிலி ஆடியன்ஸுக்குப் பிடித்த லைட் ஹார்டட் படமான 'தெய்வத்திருமகள்' படத்திலும், உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல்கள், கதைக்களத்துக்கு மிக நெருக்கமாக கொண்டுச் சேர்க்கும் பின்னணி இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் ஜி.வி.பிரகாஷ்.

இதைத்தொடர்ந்து, பல படங்களுக்கு இசையமைத்து வந்த ஜி.வியும் இயக்குநர் அட்லியும் ராஜா ராணி போல் சேர்ந்து 2013-ல் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை ஆட்சி செய்த படம் 'ராஜாராணி'. இந்தப் படத்தில் வரும் காட்சிகள் படம் பார்த்த பலருக்கு மனதின் கடந்த காலத்தை நினைவுபடுத்தும் ரீவைண்ட் பட்டனாக மாறியிருந்தது. கடந்த காலத்தையும் காதலையும் பேரழகாக்கியதில் ஜி.வியின் இசைக்கும் பாடல்களுக்கும் தனிச்சிறப்பு உண்டு.

ரம்யா, எமி ஜாக்சன், டாப்ஸி, அமலாபால், நஸ்ரியா, நயன்தாரா, அனுஷ்கா, ரீமாசென், ஆண்ட்ரியா இவர்கள் அழகுதான் என்றாலும், திரையில் தோன்றும்போது அவர்களை கொள்ளை அழகாக்கி ரசிகர்களிடம் கொண்டுச் சேர்த்த மாயங்களை செய்தது ஜி.வியின் இசைதான் .

ஒரு நல்ல இசையமைப்பாளர் பீஃல்டில் நிலைத்திருக்க சிறந்த பாடல்கள் மட்டும் போதாது. பின்னணி இசைதான் காலம் கடந்தும் அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும். அந்தவகையில் 2012ல் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் 'Gangs of wasseypur' இந்தி திரைப்படத்தின் இரண்டு பாகங்களுக்கும் பின்னணி இசையமைத்திருந்தார் ஜி.வி.பிரகாஷ். உத்தரப் பிரதேசத்தின் நிலக்கரிச் சுரங்கத்தில் தொடங்கி நிகழ்கால அரசியல் வரை பேசியிருக்கும் அப்படத்தின் பின்னணி இசை ஜி.விக்கு இந்திய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டப்படும் துரோகத்தையும், பழிவாங்கலையும், காதலையும் தழுவி வெளிவந்த அத்திரைப்படத்துக்கு ஜி.வியின் இசை வலு கூட்டியிருக்கும்.

அந்த வரிசையில் 2015-ல் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து 'காக்கா முட்டை' திரைப்படத்தில் இணைந்த ஜி.வி, சென்னைப் பெருநகரின் வற்றாத கழிவுநீர் கூவத்தின் கரையில், வாழும் மக்களின் குடிசைக்குள் வானத்தையும் வானவில்லையும் கொண்டு சேர்த்த படம் அது. அந்த குடிசைவாழ் மக்களின் பேரன்புக்கும், பெருங்கனவுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஜி.வியின் இசை.

தொடர்ந்து 2016-ல் வெளிவந்த வெற்றிமாறனின் 'விசாரணை', 2019-ல் வெளிவந்த 'அசுரன்' மற்றும் 2020-ல் வெளிவந்த இயக்குநர் சுதா கொங்கராவின், 'சூரரைப்போற்று' உள்ளிட்ட திரைப்படங்கள் ஜி.வி.பிரகாஷின் இசைப் பயணத்தில் மட்டுமின்றி, இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படங்கள்.

'விசாரணை' திரைப்படத்தின் பின்னணி இசைதான் படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு காவல் நிலைய சித்ரவதைகளின் கொடூரத்தை கொண்டுபோய் சேர்த்திருக்கும். 'அசுரன்' படத்தின் இசையும் பாடல்களும்தான் பட்டியலின மக்கள் அனுபவிக்கும் அன்றாட வாழ்வியல் ரணங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கும். 'சூரரைப்போற்று' படத்தின் இசைக்கோர்ப்பும் பாடல்களும், ஊர்தோறும் தங்களது லட்சியங்களுக்காகத் தொடந்து போராடிக் கொண்டிருக்கும் மாறன் - பொம்மி போன்ற எண்ணற்ற தம்பதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை வண்ணமயமாக்கியிருக்கும்.

வசந்தபாலன், வெற்றிமாறன், ஏ.எல்.விஜய், செல்வராகவன், மணிகண்டன், அட்லி, பாலா, சுதா கொங்கரா என தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றிய ஜி.வியின் திரை இசை பயணம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சியை புதுப்பிக்கும். மேலும், இயக்குநர்கள் அருண் மாதேஸ்வரன், பா.ரஞ்சித், சுதா கொங்கரா உள்ளிட்ட மேலும் பல இயக்குநர்களின் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

2006-ல் தொடங்கி, தற்போது வரை பதனம் உதற கவனம் சிதற மனசை கலைக்கும் ஜி.வி.பிரகாஷின் இசையில் நினைவுகளைச் சூறையாடும் மேலும் பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

| இன்று - ஜூன் 13 - ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்