சென்னையில் காவல்துறைப் பணியில் இணையும் பிரகாஷ் (அசோக் செல்வன்), கிரைம் பிராஞ்ச் எஸ்.பியான, லோகநாதனிடம் (சரத்குமார்) உதவியாளராக நியமிக்கப்படுகிறார். திருச்சியில் அடுத்தடுத்து 2 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணி லோகநாதனிடம் ஒப்படைக்கப்படுகிறது. முதலில் பிரகாஷை வேண்டா வெறுப்பாகச் சேர்த்துக்கொள்ளும் லோகநாதன், அவர் போதாமைகளைச் சுட்டிக்காட்டி அவமதிக்கிறார்.
ஆனால் விசாரணையின் அடுத்தடுத்தக் கட்டங்களில் வெளிப்படும் பிரகாஷின் அறிவையும் திறமையையும் உணர்ந்து, அவரிடம் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். இதற்கிடையில் மேலும் 2 பெண்கள் அதே பாணியில் கொல்லப்படுகிறார்கள். கொலையாளி யார்? அவர் ஏன் இந்தக் கொலைகளைச் செய்தார்? இதைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் லோகநாதனுக்கும் பிரகாஷுக்கும் என்ன ஆனது? என்பது மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரபரப்பான, புத்திசாலித்தனமான துப்பறியும் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா. ஆல்ஃப்ரெட் பிரகாஷ் என்பவர் அவருடன் இணைந்து எழுத்துப் பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்.
பொதுவாக தொடர்கொலைகளை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படங்களில் அடுத்தடுத்து ட்விஸ்ட்களாக அடுக்குவார்கள். ஆனால், இதில் முதல் பாதியின் பெரும்பகுதி காவல்துறை விசாரணை நடைமுறைகள் சார்ந்த, திரையில் இதுவரை சொல்லப்படாத விஷயங்களைக் கையாண்டிருப்பது புத்துணர்வு அளிக்கிறது. அனுபவமிக்க மூத்த அதிகாரியும் அவருக்குத் துணையாகப் புத்தக அறிவும் திறமையும் துடிப்புமிக்க இளைஞரும் இணைந்து இந்தக் குழப்பமான வழக்கின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்ப்பது சுவாரசியத்துடனும் நம்பகத்தன்மையுடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
முதல் பாதியின் முடிவில் குற்றவாளி சிக்கியது போன்ற உணர்வைத் தந்து, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் பூர்த்தி செய்கிறது, இரண்டாம் பாதி. பிற்பகுதியில் நிகழும் ஒரு ட்விஸ்ட் திரைக்கதையின் ஒட்டத்துடன் இயல்பாகப் பொருந்தியிருக்கிறது. இந்த எதிர்பாராத திருப்பம் படத்தின் மையக் கதாபாத்திரங்களுக்கு அளிக்கும் அதிர்ச்சி, பார்வையாளர்களுக்கும் ஏற்படுவது, மேம்பட்ட திரைக்கதை ஆக்கத்தின் வெற்றி. லோகநாதனுக்கும் பிரகாஷுக்கும் இடையிலான விரிசல் இணக்கமாகப் பரிணமிக்கும் விதம் அழகாக உள்ளது.
முதல் பாதியை ஒப்பிட, இரண்டாம் பாதியில் சின்னச் சின்ன தொய்வும் தர்க்க மீறல்களும் இருக்கின்றன. கொலைகளுக்கான காரணத்தை இன்னும் விரிவாக சொல்லி இருக்கலாம். அனைவருக்கும் அன்பும் அரவணைப்பும் கொடுப்பதாக, குடும்ப அமைப்பும் சமூகமும் மாறினால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என்கிற செய்தியைப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
கறாரான காவல்துறை அதிகாரியாக சரத்குமார், ஆகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். தன் பயந்த சுபாவத்தைக் கடந்து குற்றவாளியைக் கண்டுபிடித்து குற்றங்களைத் தடுப்பதில் முனைப்பை வெளிப்படுத்தும் இளம் காவல் அதிகாரி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அசோக் செல்வன் . தொழில்நுட்ப உதவியாளராக இவர்களுடன் இணையும் கதாபாத்திரத்தில் நிகிலா விமல் அழகாகப் பங்களித்திருக்கிறார். அண்மையில் மறைந்த சரத்பாபு, மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே. சுந்தர் என துணை நடிகர்கள் கவனிக்க வைக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவும் ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பும் இயக்குநருக்கு சிறப்பாகத் துணைபுரிந்திருக்கின்றன. சின்னச் சின்னக் குறைகளை மறந்துவிட்டு புத்திசாலித்தனமும் சுவாரசியமும் நிறைந்த இந்த ‘போர் தொழிலை’ அனைவரும் ரசிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago