‘மருதநாயகம்’ முதல் ‘கெட்டவன்’ வரை | பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி பாதியில் கைவிடப்பட்ட தமிழ்ப் படங்கள் 

By சல்மான்

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா, 1918 முதல் இன்று வரை நடிப்பு, தொழிநுட்பம் தொடங்கி எத்தனையோ பரிணாமங்களைக் கண்டுள்ளது. முதல் மவுனப்படமான ‘கீச்சக வதம்’, முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ தொடங்கி இன்றைய ‘பொன்னியின் செல்வன்’ வரை நினைத்துப் பார்க்கமுடியாத அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது கோலிவுட். இதில் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி, பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் ஏராளமான படங்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. அதில் ரசிகர்களின் மனதில் நீங்காத ஏக்கமாக எஞ்சியிருக்கும் சில படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஷங்கர் - கமல் கூட்டணியில் ‘ரோபோ’: 2010ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய படம் ‘எந்திரன்’. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்த இப்படம் தொழில்நுட்பத்தில் இந்திய சினிமாவை பலபடிகள் முன்னே கொண்டு சென்றது. ஆனால் இப்படத்துக்கான அடித்தளம் ‘இந்தியன்’ படத்துக்குப் பிறகு 1998ஆம் ஆண்டே போடப்பட்டது. இப்படத்துக்காக ஷங்கரின் முதல் சாய்ஸ் கமல்ஹாசன். சுஜாதா கதை, வசனம் எழுத ப்ரீத்தி ஜிந்தா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இதற்கான போட்டோஷூட் கூட நடத்தப்பட்டது. ஆனால் இப்படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டு, பின்னர் கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ‘எந்திரனாக’ உருவானது.

கமலின் கனவுப் படம் ‘மருதநாயகம்’: கமல்ஹாசன் மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே இதுவொரு கனவுப்படம். 1991ஆம் ஆண்டு முதலே ‘மருதநாயகம்’ படத்துக்கான கதை உருவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன், 97ஆம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பை பெரும் பொருட்செலவில் தொடங்கினார். அந்த காலகட்டத்திலேயே சுமார் ரூ.80 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இப்படம் பொருளாதார சிக்கலில் சிக்கி பின்னர் கைவிடப்பட்டது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் நிறைவேறாத கனவாகவே இப்படம் இருந்து வருகிறது. இனியும் இப்படம் வெளியாகுமா என்பது கமல்ஹாசனுக்கே வெளிச்சம்.

ரஜினியின் ‘ஜக்குபாய்’: படையப்பா வெற்றிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவிருந்த படம் ‘ஜக்குபாய்’. இதற்கான முதல் பார்வையை படக்குழு அப்போதைய நாளிதழ்களில் வெளியிட்டு ஹைப் ஏற்றியது. ஒசாமா பின் லேடன் கெட்டப்பில் துப்பாக்கியுடன் ரஜினி அமர்ந்திருக்கும் அந்த போஸ்டர் அப்போது பெரும் பிரபலமானது. ஆனால் ஏனோ சில காரணங்களால் இப்படம் அடுத்தகட்டம் நோக்கி நகரவே இல்லை. இதே தலைப்பில் பின்னர் சரத்குமார், கவுண்டமணி, ஸ்ரேயாவை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படத்தை இயக்கி வெளியிட்டார்.

ராணா: ‘கோச்சடையான்’ படத்துக்கு முன்பாகவே ‘ராணா’ என்ற பெயரில் ஒரு படத்தில் ரஜினி நடிப்பதாகவும், அதனை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் அதிகாரபூர்வமாக வெளியாகின. இதற்கான போஸ்டரும் வெளியானது. பின்னர் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ வெளியாகி தோல்வி அடைந்தது. அந்த படத்தின் இறுதியில் ‘ராணா’ என்ற ஒரு கதாபாத்திரம் வரும். இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘ராணா’ வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது கிடப்பில் போடப்பட்டது.

அஜித்தின் ‘மிரட்டல்’: ‘கஜினி’ படத்துக்கு முன்னதாக அஜித் - அசின் இருவரையும் வைத்து ‘மிரட்டல்’ என்ற ஒரு படத்தை திட்டமிட்டிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான போட்டோஷூட் செய்யப்பட்டு, போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இப்படம் தொடங்கப்படவில்லை. அதன்பிறகு சூர்யா நடிப்பில் ‘கஜினி’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் ‘மிரட்டல்’ பெட்டிக்குள் சுருண்டது.

கவுதம் - விஜய் கூட்டணியில் ‘யோஹன்’: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம் ‘யோஹன்: அத்தியாயம் ஒன்று’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் போஸ்டரை தாண்டி வளரவில்லை. அதன்பிறகு விஜய் வேறு திசையிலும், கவுதம் மேனம் வேறு திசையிலும் சென்று விட்டனர்.

தனுஷின் ‘மாலை நேரத்து மயக்கம்’: 2011ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க இருந்த படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. இப்படம் கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. ஆனால் கதையில் திருப்தி இல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து இதே கதையில் ஃபேண்டசி அம்சங்களை சேர்த்து ‘இரண்டாம் உலகம்’ என்ற பெயரில் உருவாக்கினார் செல்வா. ஆர்யா, அனுஷ்கா நடித்த இப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை. ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பில் வேறொரு படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கினார்.

விக்ரமின் ‘கரிகாலன்’: 2014ஆம் ஆண்டு ‘விக்ரம்’ நடிப்பில் ‘கரிகாலன்’ என்ற ஒரு படம் உருவாகவிருந்தது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஸரீன் கான், அஞ்சலி நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதன் டீசர் கூட இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. பெரும் பொருட்செலவில் வரலாற்றுப் படமாக உருவாகவிருந்த இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பாதியில் கைவிடப்பட்டது.

நெல்சன் - சிம்பு கூட்டணியில் ‘வேட்டை மன்னன்’: ‘கோலமாவு கோகிலா’ வெளியாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நெல்சன் அறிமுகமாக வேண்டிய படம் ‘வேட்டை மன்னன்’. சிம்பு நடிப்பில் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த இப்படம் ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டது. இப்படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தினார் நெல்சன்.

எஸ்.ஜே.சூர்யா - சிம்பு - அசின் கூட்டணியில் ‘ஏசி’: ‘நியூ’, ‘ஆ.. ஆ’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. சிம்பு - அசின் இருவரையும் வைத்து ’ஏசி’ என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்க எண்ணினார். இப்படத்துக்கான போட்டோஷூட் மட்டும் நடந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டது.

சிம்புவின் ‘கெட்டவன்’: ‘மன்மதன்’ படம் கொடுத்த வெற்றிக் களிப்பில் இருந்த சிம்பு அதே பாணியில் இன்னொரு படத்தை எடுக்க விரும்பினார். ‘கெட்டவன்’ என்ற பெயரில் உருவாகவிருந்த இப்படத்தில் நமீதா, சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் இப்படம் போட்டோஷூட்டோடு நின்று விட்டது.

வடிவேலுவின் ‘24ஆம் புலிகேசி’: சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கல்ட் கிளாசிக் படமாக மாறிய இப்படத்தின் அடுத்த பாகமான ‘24ஆம் புலிகேசி’ படம் ஷங்கர் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் தொடங்கப்பட்டது. ஆனால் ஷங்கர் - வடிவேலு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்பட்டது. இப்படம் மீண்டும் தொடங்கப்படம் என்பதே தமிழ் ரசிகர்களின் விருப்பமாக இருந்தாலும், அது வடிவேலுவும் ஷங்கரும் மனது வைத்தால் மட்டுமே சாத்தியம்.

சி.எஸ்.அமுதனின் ’ரெண்டாவது படம்’

தமிழ் சினிமாவின் முதல் முழுநீள ஸ்பூஃப் வகைப் படமாக வெளியான ‘தமிழ்ப் படம்’ தந்த வெற்றிக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கி முடித்த படம் ‘ரெண்டாவது படம்’. விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் வரை வெளியாகிவிட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களால் இப்படம் கடைசி வரை வெளியாகவே இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

மேலும்