நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உள்நோக்கம் இருந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும், நேர்மையாக தொழில் செய்வதால் எந்த பயமும் இல்லை என்றும் விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஷால், ‘விஷால் பிலிம் பேக்டரி’(வி.எப்.எப்) என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் அலுவலகம், சென்னை வடபழனி குமரன் காலனி முதல் தெருவில் உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் விஷாலின் அலுவலகத்தில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாயின.
கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சுமார் இரண்டரை மணி நேரம் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தங்கள் தரப்பில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்று ஜிஎஸ்டி சென்னை மண்டல இணை இயக்குநர் பி. வி.கே.ராஜசேகர் தெரிவித்து விட்டார்.
அதன்பிறகு, விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது வருமான வரித் துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. விஷால் சினிமா தயாரிப்பு நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை சரிபார்க்க டிடிஎஸ் பிரிவு அதிகாரிகள் 4 பேர் வந்து சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளா, வருமான வரித் துறையினரா என்ற முரண்பட்ட தகவல்களால் சினிமா வட்டாரத்தில் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.
வருமான வரி சோதனை குறித்து நிருபர்களிடம் விஷால் கூறும்போது, ‘‘ஒரு திரைப்படத்தில் தயாரிப்பாளரின் உழைப்பும், பங்கும் பெரியது. எனவே, அனைவரும் தயவுசெய்து திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களே ஆன்லைனில் படம் பார்ப்பதாக சொல்லும்போது வலிக்கிறது. வருமான வரித் துறையினர் டிடிஎஸ் குறித்த சோதனைக்காக என் அலுவலகத்துக்கு வந்ததாகத்தான் தெரிவித்தனர். ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அப்போது அலுவலகத்தில் நான் இல்லை. இந்த சோதனையை சாதாரணமாகவே கருதுகிறேன். உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடந்திருந்தால் அதை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். நேர்மையாக தொழில் செய்து வருகிறேன். வருமான வரியும் செலுத்தி வருகிறேன். அதனால் நான் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.
நேரில் ஆஜராக சம்மன்
இந்நிலையில், வருமான வரி பிடித்தம் செய்த தொகையை கணக்கில் காட்டாதது குறித்து வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி விஷாலுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பின்னணி என்ன?
விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் நிர்பந்தம் செய்தனர். இதற்கு திரைப்படத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விஷாலும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ‘மெர்சல்’ திரைப்படத்தை இணைய தளத்தில் பார்த்ததாக கூறிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விஷால் தெரிவித்தார். இந்நிலையில், விஷாலை மிரட்டுவதற்காகவே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று திரைப்படத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
43 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago