பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடக்கும் சண்டையும், விரோதமும்தான் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ஒன்லைன்.
உறவுக்காரர்களுடன் திருமணம் முடிக்கப்பட்ட தன்னுடைய அண்ணன், அக்கா இருவரும் வெவ்வேறு சூழலில் குடும்பத்தினரின் கொடுமையால் இறந்துபோக, அண்ணனின் குழந்தைகளுடன் தனியே வாழ்ந்து வருகிறார் சித்தி இத்னானி. ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு சித்தி இத்னானியையும் மணமுடித்து தங்கள் வீட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இதற்கு சம்மதிக்காத அவர், மதுரை சிறையிலிருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்பவரை சந்திக்கச் செல்கிறார். யார் இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? அவர் ஜெயிலுக்கு செல்ல என்ன காரணம்? சித்தி இத்னானி ஏன் அவரை சந்திக்க செல்கிறார் என்ற கேள்விகளுக்கு பதில்தான் திரைக்கதை.
தனக்கென தனி பாணி கொண்ட முத்தையா இம்முறை கையிலெடுத்திருக்கும் களம் சமகால அரசியல் சூழலில் முக்கியமானது. சாதியை இரண்டாவது லேயராக வைத்து இந்து - முஸ்லிம் மத ஒற்றுமையை முதன்மைப்படுத்தி பேச முயற்சித்திருப்பதும், ‘ஜமாத்தும் - சபையும் ஒண்ணாதான் இருக்கும். அத மாத்த முடியாது’ என சமய ஒற்றுமைக்கான தேவையை விளக்கியிருப்பதும் கவனத்துக்குரியது.
‘மாட்ட வைச்சு அரசியல் பண்ற சோலி வைச்சுக்காத’, ‘அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு இப்போ தேவையில்ல; அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அத அறியாதவன் வாயில மண்ணு” என பிரிவினைக்கு எதிரான வசனங்கள் கூர்தீட்டப்பட்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த படமாக பார்க்கும்போது இலக்கை நோக்கி வீசப்பபடும் அம்புகள் பாதை மாறியிருப்பதை உணர முடிகிறது. படத்தில் சண்டைக் காட்சிகள், ஃப்ளாஷ்பேக் இந்த இரண்டையும் நீக்கிவிட்டால் வெறும் டைட்டில் கார்டு மட்டுமே மிஞ்சும் என்ற அளவுக்கு சகட்டுமேனிக்கா சண்டை, ப்ளாஸ்பேக் சீக்வன்ஸ்களை வைப்பது?
» வீரன் Review | கிராமத்து சூப்பர் ஹீரோ கதைக்களம் கைகொடுத்ததா?
» தோல் இசைக் கருவிகளை தொடக்கமாக கொண்ட இளையராஜாவின் 10 பாடல்கள் | Ilayaraja Birthday Special
யாருக்கு யார் அப்பா? யாருக்கு யார் அண்ணன்? அக்கா? அவருக்கு இவர் யார்? இவருக்கு அவர் யார்? - இப்படி நான்கைந்து இடியாப்பத்தை ஒன்றாக பின்னிக் கொடுத்ததைப் போல உறவுமுறைகளை நினைவில் வைப்பதும், அதை பின்தொடர்வதும், அவர்களுக்கான எமோஷனல் காட்சிகள் கனெக்ட் ஆகாததும் பெரும் சிக்கல். மேலும், ஆர்யாவுக்கு கொடுக்கப்படும் ஓவர் பில்டப் காட்சி, பெண் பார்க்கும் காட்சி, காரணமேயில்லாமல் காதல் பாட்டு, தவிர சண்டையை தின்று கொழுத்த முதல் பாதி திரைக்கதையில் அயற்சிக்கு பஞ்சமில்லை.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கமாக ஆர்யா. முத்தையாவின் வழக்கமான ஹீரோதான் என்றாலும், மற்ற படங்களைக்காட்டிலும் இதில் கூடுதல் அப்டேட். அதாவது, மற்ற படங்களில் முத்தையாவின் ஹீரோக்கள் தொடை தெரிய வேட்டி கட்டுவார்கள். இந்தப் படத்தில் வேட்டியை கழட்டி வைத்து வெறும் அண்ட்ராயருடன் சண்டையிடுகிறார் ஹீரோ. இதனால்தன் காஸ்ட்யூம் செலவை பெருமளவில் மிச்சமாக்கி தயாரிப்பாளருக்கு நன்மை சேர்த்திருக்கிறார் ஆர்யா.
உண்மையில் அவருக்கு ஒரே ஒரு கருப்பு சட்டை, கருப்பு வேட்டி, சமயங்களில் வேட்டி கழற்றி வைக்கும்போது காணாமல் போவதாலோ என்னவோ, மாற்றாக ஒரு வெள்ளை வேட்டி வைத்திருக்கிறார். ஆக்ரோஷ கிராமத்து இளைஞராக அழுத்தம் கூட்டும் ஆர்யா கண்ணீர் சிந்தும் இடங்களில் அவரின் நடிப்பு தாமரை இலைமேலிருக்கும் தண்ணீராய் ஒட்டவில்லை. சித்தி இத்னானியை கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் ஏற்றுகொள்ள நேரம் பிடிக்கிறது. டப்பிங் பிரச்சினையும், சில செயற்கைத் தன்மையும் யதார்த்தத்திலிருந்து விலக்கிவிடுகிறது.
மீசை மழித்து பழிவாங்கும் வெறியுடன் திரியும் வில்லன் கதாபாத்திரத்தில் ஈர்க்கிறார் தமிழ். ‘இராவண கோட்டம்’ பிரபுவை அப்படியே இப்படத்திலும் பார்க்க முடிகிறது. அதே மாவட்டம் அதே கண்ணியமான கதாபாத்திரம் என்றாலும் இதில் தொப்பி மட்டும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங். மற்றபடி நடிப்பு சேம். தவிர பாக்யராஜ், ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம் புலி, மதுசூதனன் ராவ், அவினாஷ் கிராமத்து மனிதர்களுக்கான நடிப்பை கொடுத்துள்ளனர்.
சண்டைக் காட்சிக்கான வேகத்தை தன் பின்னணி இசை மூலம் கூட்டியிருக்கும் விதத்தில் கவனிக்க வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால், சமயங்களில் ‘கஞ்சா பூ கண்ணால’ பாடல் இசை ஊடாக பயணிக்கும் உணர்வும் எழுகிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக நேரம் செலவிடப்பட்டதால், ஈர்க்கும் ஃப்ரேம்கள் இல்லை என்றாலும், நிலத்தையும் மக்களையும் அசல் தன்மையுடன் பிரதிபலிக்கிறது.
பொதுவாக சினிமாட்டிக் யூனிவர்ஸ் படங்களை எடுத்துக்கொண்டால் ஒரு படத்தின் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் அடுத்தடுத்த பாகங்களிலும் முந்தைய கதையின் நீட்சியாக தொடர்ந்துகொண்டேயிருப்பார்கள். அடுத்தடுத்த பாகங்கள் என குறிப்பிடப்பட்ட கதைக்களங்களில் மாற்றங்கள் இருக்கும். அப்படி முத்தையா சினிமாடிக் யூனிவர்ஸை எடுத்துக்கொண்டால், அவரது இயகத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடித்த போதிலும், கதைகளம் என்பது கிராமத்தையும், உறவுகளையும், பழிவாங்குதலையும், சண்டையையும் மையப்படுத்தியே தொடர்ந்து கொண்டிருக்கும். அப்படியான ஒரு முத்தையா சினிமாட்டிக் யூனிவர்ஸ் படமாக வெளிவந்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் சமகால அரசியலையொட்டி கன்டென்டை சுமந்ததால் கவனம் பெறுகிறது. தவிர, யூனிவர்ஸில் எந்த மாற்றமுமில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago